Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாடத்திட்ட மாற்றம்... அரசுக்கு சில யோசனைகள்!

பள்ளி பாடத்திட்ட மாற்றம் வரும் கல்வியாண்டிலிருந்து

ந்தை ஆடுகளின் இயல்புகள் பற்றி ஊர்ப்புறங்களில் ஒரு குட்டிக்கதை உண்டு. ஆடுகள் வரிசையாகச் சென்றுகொண்டிருக்கும்போது, முன்னால் சென்ற ஆடு சிறுகுச்சி தடுக்கி இடர்ப்பட்டு விழுந்து எழுந்து சென்றால், பின்னால் வரும் எல்லா ஆடுகளும் அங்கே அந்தக்குச்சி இருக்கிறதா இல்லையா என்றுகூட பார்க்காமல் தடுக்கி விழுந்து எழுந்து செல்லுமாம். வரிசையாக அமர்ந்துகொண்டு ஒரேவரியை சுவாரஸ்யமாக ராகத்துடன் மனப்பாடம் செய்யும் பிள்ளைகளைப் பார்த்தால் அந்த மந்தை ஆட்டுக்குட்டிகள்தான் நினைவுக்கு வரும்.

தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டங்களில் வரும் கல்வியாண்டில் இருந்து மாற்றங்களை அமல்படுத்த இருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. மாற்றத்துக்கான முதல்காரணமாக அரசுத்தரப்பில் குறிப்பிட்டிருப்பது, “கற்றலை மனப்பாட நிலையில் இருந்து மாற்றி, மாணவர்களை படைப்பின்போக்கில் பயணிக்கச் செய்யவேண்டும்” என்பதுதான்.

பாடத்திட்ட மாற்றத்துக்கான செயல்திட்டத்தின்கீழ், தமிழர் தொன்மை, வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், தமிழர் பெருமை குறித்த தகவல்களை மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பங்கள் வழியாக அறிந்துகொள்ளவும், மன அழுத்தம் தராத தேர்வுமுறைகளும் என சில நெறிமுறைகளும் அரசால் வகுக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் அனந்தகிருஷ்ணன்ஆனால், இவை மட்டும் போதாது. பாடத்திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு உறுதியான கொள்கை முதலில் வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் பேசுகையில், "பாடத்திட்டத்தை நிர்ணயிக்கும் கமிட்டிகள், ஒரு அறையில் ஒன்றாக உட்கார்ந்து வடிவமைப்பார்கள். ஆனால். அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் தொடங்கும். அதற்குத் தீர்வு, எந்த அறிவியல் பாடத்தைப் படிக்கும் ஒவ்வொரு சராசரி மாணவனுக்கும் இவ்வளவுதான் அறிவுத்திறன் இருக்க முடியும் என்பதை கமிட்டியில் இருக்கும் கல்வியாளர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். 'மத்திய பாடத்திட்டத்தைவிட வலுவான பாடத்திட்டத்தை வடிவமைப்போம்' என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. உண்மையில் ஒப்பிட்டுப் பார்த்தால், நமது மாநில பாடத்திட்டத்துக்கும் மத்திய பாடத்திட்டத்துக்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை. இரண்டிலுமே பாடங்களின் முடிவில், அந்தப் பாடத்தைப் பற்றி நாம் என்ன அறிந்துகொண்டோம் என்பதை ஆய்வு செய்யும் வகையில், கேள்விகள் இருக்கும். அதேசமயம் படித்தவற்றை நம் வாழ்வியலோடு எப்படி தொடர்புபடுத்திக் கொள்கிறோம் என்பதைப் பதிவுசெய்வதில்தான் நம்முடைய மாநில பாடத்திட்டம் தவறி விடுகிறது” என்றார். 

அவர் கூறியதை மேலும் விளக்கும்வகையில் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, "பிள்ளைகள் பிரின்ஸ் கஜேந்திர பாபுஅறிந்ததில் இருந்து அறியாததை நோக்கி அவர்களை நகர்த்தவேண்டும். உதாரணத்துக்கு, தாவரவியல் என்றால் பூவிலிருந்து தாவரத்தின் கோட்பாடுகளை அறிந்துகொள்ளச் செய்வது, சமூகவியல் என்றால் அந்த சமூகத்தில் இருக்கும் இடங்களுக்கு அழைத்துச்செல்வது போன்ற செயல்முறைக் கல்வி அதிகம் தேவை. ஸ்க்ரூ காஜ் என்னும் இயற்பியல் பாடத்தில் வரும் பொருள்பற்றி வகுப்பில் கற்றுத்தரும் ஆசிரியரைவிட, மெக்கானிக் ஷெட்டில் அதே ஸ்க்ரூ காஜ் வைத்து வேலை பார்ப்பவர்களுக்கு நிறையவே தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது, பிள்ளைகளின் வயதுக்குத் தகுந்த கல்விமுறை தேவை. 'என் பிள்ளைக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்' என்று பெற்றொர் ஆசைப்படுவார்கள். ஆனால், குறிப்பிட்ட வயதில் ஒரு பிள்ளைக்கு இவ்வளவுதான் புரிந்து உணர்ந்துகொள்ள முடியும் என்று இருக்கிறது. அதன் அடிப்படையில் எளிய நடையில் பாடத்திட்ட வடிவமைப்பு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்தின் கீழும் பார்வை நூல்கள் குறித்த விவரம் இருக்கவேண்டியது அவசியம். மூன்றாவது, போட்டித்தேர்வுக்கு என்றே பாடத்திட்டத்தை வடிவமைக்காமல் கொஞ்சம் மாணவரின் சமூக அக்கறையையும் சுயசிந்தனையைத் தூண்டவும் வாய்ப்பளிக்க வேண்டும். உதாரணத்துக்கு அடுக்குமாடி ஒன்று தீப்பற்றி எரியும்போது, மாணவர் அங்கு இருக்கும் நிலையில், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற வாழ்வியல் மற்றும் சமூகம்சார்ந்த கேள்விகள் இடம்பெறச் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரிடமும் கருத்துக் கேட்பதன் மூலம் அவர்களைப் பாடத்திட்ட உருவாக்கப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களின் வகுப்பறை அனுபவங்களையும் கருத்தில்கொண்டு பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும். முக்கியமாக விளையாட்டு, கலை மற்றும் இலக்கியம் கட்டாயமாகப் பாடத்தில் இடம்பெற வேண்டும். அதிமுக்கியமாக தமிழக மக்களுடைய சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் வைத்துப் பாடங்களை வடிவமைப்பது அவசியம்” என்றார்.

கல்வியியல் மாற்றம் குறித்துப்பேசிய '3 இடியட்ஸ்' என்னும் ஹிந்தி திரைப்படத்தில் இப்படியொரு வசனம் வரும். "சிங்கத்தை சர்க்கஸில் ரிங் மாஸ்டர் ட்ரெயின் செய்தால் அது நல்லபடியா ட்ரெயினாகும். ஆனா எதையும் கத்துக்காது. காடு மட்டும்தான் அதுக்கு கத்துக்கொடுக்கும்" என்பதைப்போல, மாணவர்களாகிய நம் சிங்கக்குட்டிகளுக்கு இனிமேலாவது 'ட்ரெயினிங்' மட்டும் கொடுக்காமல், அவர்களை கற்றுக்கொள்ளச் செய்வோமே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement