வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (14/06/2017)

கடைசி தொடர்பு:14:53 (14/06/2017)

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கக்கோரி வழக்கு! மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

'தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நவோதயா

1985 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் நவோதயா வித்யாலயா பள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின்போது, இந்தப் பள்ளிகள் 'ஜவஹர் நவோதயா வித்யாலயா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, நவோதயா பள்ளிகள்மூலம் இந்தி திணிக்கப்படும் எனக் கூறி, இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து நடைபெற்ற போராட்டங்களால், நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும்  கொண்டுவர வேண்டும் என குமரி மகா சபா சார்பில் அளித்த மனு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது . இந்த வழக்கு விசாரணையில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிபதி செல்வம் மற்றும் ஆதிநாதன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், தமிழக கல்வித்துறை முதன்மைச் செயலர் அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டது.