வெளிநாட்டில் மருத்துவம் படிக்க அழைக்கும் கவர்ச்சி விளம்பரங்கள்.. உண்மை என்ன? | Truth behind medical education in foreign institutions revealed

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (14/06/2017)

கடைசி தொடர்பு:15:05 (14/06/2017)

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க அழைக்கும் கவர்ச்சி விளம்பரங்கள்.. உண்மை என்ன?

ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறைகள் இருக்கின்றன. ஆனாலும், உயர் படிப்பென்றால் மருத்துவம் அல்லது பொறியியல்தான் என்ற மனோபாவம் எல்லோரிடமும் இருக்கிறது. எல்.கே.ஜி-யில் பிள்ளையைச் சேர்க்கும்போதே, 'நல்லாப் படிச்சு டாக்டராகனும்' என்ற கனவையும் பிள்ளையின் மனதில் சேமித்து விடுகிறோம். இப்போதெல்லாம் பல பெற்றோர், பிள்ளையின் மருத்துவக் கனவு கலைந்து விடக்கூடாது என்று விளையாடும் பொம்மைகளைக் கூட ஸ்டெதாஸ்கோப், தெர்மா மீட்டர் என்று பார்த்துப் பார்த்து வாங்கித் தருகிறார்கள். 

எம்பிபிஎஸ்


மருத்துவப் படிப்பு எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளில்  3060 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தவிர,  24 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3450 இடங்கள். ஆக, 6510 பேர் தான் ஓராண்டுக்கு மருத்துவர் படிப்பில் சேர முடியும். அதிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத இடங்கள் மத்தியத் தொகுப்புக்குப் போய்விடும். இப்போது நீட் தேர்வைக் கொண்டு வந்து விட்டார்கள். இந்தத் தேர்வு கொஞ்சம் நஞ்சம் இருந்த வாய்ப்புகளையும் பறித்துக்கொண்டு போய் விட்டது. முதன்முறை நடக்கும் அகில இந்தியத் தேர்வு என்பதால் பெரும்பாலான மாணவர்கள் இத்தேர்வை சரிவர எழுதவில்லை. 

அதனால் மருத்துவத்தை இலக்கு வைத்துப் படித்த பலர் பரிதவித்து நிற்கிறார்கள். இந்த மாணவர்களைக் குறிவைத்துக் ‘குறைந்த செலவில் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக' சிலர் சுற்றிவந்து கொண்டிருக்கிறார்கள். நிறைய பேர் அந்த ஆசை வார்த்தைக்கு மயங்கி வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ஆயத்தமாகி வருகிறார்கள். 

உலகமயமாக்கலுக்குப் பிறகு, இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்வதும் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவுக்கு வந்து படிப்பதும் சாதாரணமாகி விட்டது. உலக அளவில் ’டாப் ரேங்கிங்’ பட்டியலில் இருக்கும் சில வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீடு, கல்விக்கட்டணச் சலுகை, உதவித் தொகைகளை வழங்கி வெளிநாட்டு மாணவர்களை  ஈர்க்கின்றன. அதுபோன்ற தரமான கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும். ஆங்கில மொழியறிவும், அது தொடர்பான தேர்வுகளில் தேர்ச்சியும் தேவை. அவ்விதம் பொறியியல், தொழில்நுட்பம், ஃபேஷன் டிசைனிங், டூரிசம் போன்ற படிப்புகளில் ஏராளமான இந்திய மாணவர்கள் சேர்ந்து படித்து வருகிறார்கள். தங்கள் நாட்டில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதற்கென்று குறிப்பிட்ட  மாதங்களுக்கு PSW (Post Study Work visa) விசாவை அந்நாடுகள் வழங்குகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகள் அங்கே வேலை செய்தபின். அந்நாட்டுக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவும் வாய்ப்புண்டு.   

வெளிநாட்டு எம்பிபிஎஸ்

ஆனால், மருத்துவப் படிப்பு இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அமெரிக்காவில் மருத்துவம் படிக்க, IELTS  என்ற ஆங்கில மொழித்தேர்வை எழுதி அதிகப்பட்ச மதிப்பெண் பெற வேண்டும். பிறகு,  அமெரிக்கா சென்று கல்வி நிறுவனத்தின் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் Pre-Medicine என்ற மருத்துவத்துக்கான தொடக்கநிலைப் படிப்பில் சேரலாம். இது நான்காண்டுப் படிப்பு. இதை முடித்த பிறகுதான் முறையான மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மருத்துவம் ukcat என்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை இங்கிருந்தபடியே எழுதலாம். IELTS தேர்விலும் அதிகபட்ச மதிப்பெண் பெற வேண்டும். அதன்பிறகு மருத்துவப் படிப்பில் சேரலாம். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் அங்கேயே பணியாற்ற வாய்ப்புண்டு. ஆனால்  இந்நாடுகளில் மருத்துவப் படிப்பை முடிக்க குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய் செலவாகும். வசதியான குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். தமிழகத்தில் இருந்து இந்நாடுகளுக்கு மருத்துவம்  படிக்கச் செல்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

ரஷ்யா, சைனா, ஜார்ஜியா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், செயின்ட் லூசியா, கயானா, நேபாளம், கஜகஸ்தான், பங்களாதேஷ், கிர்கிஸ்தான், ஆர்மேனியா  போன்ற நாடுகளுக்குத்தான் அதிகபட்சமான தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். இந்த நாடுகளில் எல்லாம் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் முளைத்திருக்கின்றன. அக்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தங்களுக்கான முகவர்களை நியமித்திருக்கிறார்கள். பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு பெரிய அளவில் விதிமுறைகள் கிடையாது. சிக்கினால் போதும். பெரும்பாலும் முகவர்களே நேர்காணல் செய்து மாணவர் சேர்க்கை நடைமுறைகளை முடித்து விடுகிறார்கள். ஏராளமான வாக்குறுதிகள் தருவார்கள்.

தமிழகத்தை விட சிறந்த பாடத்திட்டம், உலகத் தர கல்வி நிறுவனம், இந்திய உதவியாளர்களுடன் கூடிய ஹாஸ்டல் வசதி, படிப்பை முடித்ததும் வேலைவாய்ப்புக்கு உதவி என்றெல்லாம் கலர் கலராக பேசுவார்கள். 20 லட்ச ரூபாய்க்குள் படிப்பை முடித்து விடலாம் என்பார்கள். இப்படி வகைவகையாகப் பேசுபவர்கள் இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றி மட்டும் பேசுவதேயில்லை. ஒன்று, நீங்கள் மேற்கண்ட எந்த நாட்டில் மருத்துவம் படித்தாலும் அந்த நாட்டில் மருத்துவராக வேலை செய்ய முடியாது. படிப்பை முடித்துவிட்டு ஒரு நாள் கூட அந்த நாட்டில் இருக்கவும் முடியாது. இந்தியாவுக்குத்தான் திரும்பியாக வேண்டும். இந்தியா வந்து இங்கேயும் நேரடியாக மருத்துவராக பணி செய்ய முடியாது. இங்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் FMGE (Foreign Medical Graduates Examination) என்ற தகுதித்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவ்வளவு எளிதல்ல.

வெளிநாட்டு மருத்துவம் படிப்பு


மருத்துவப் படிப்பு என்பது பிற படிப்புகளைப் போன்றதல்ல. பிறர் உயிர்காக்கும் படிப்பு. ஏகப்பட்ட பொறுப்புகளை உள்ளடக்கியது. நோய்களைப் பொறுத்தவரை, தட்பவெப்பங்களைப் பொறுத்து பகுதிக்குப் பகுதி மாறும். ஒரு நாட்டில் டெங்கு கொள்ளை நோயாக இருக்கும். ஐரோப்பாவில் இருக்கும் ஒரு நாடு அப்படியான ஒரு நோயை அறிந்தே இருக்காது. அறிவியலோ, கணிதமோ உலகெங்கும் ஒரேமாதிரிதான் இருக்கும். ஆனால், மருத்துவம் அப்படியல்ல. செயிண்ட் லூசியாவின் பாடத்திட்டத்தில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருகிற ஒரு மாணவன், இங்குள்ள தட்பவெப்பத்துக்கும், வாழ்க்கை முறைக்கும். சூழ்நிலைக்கும் ஏற்றவாறு சிகிச்சையளிப்பது என்பது சிக்கலானாது. 

சில முகவர்கள், அங்கீகாரமே இல்லாத கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களைச் சேர்த்து விட்டுவிடுகிறார்கள். பல கல்லூரிகளில் போதிய லேப் வசதி கூட இருப்பதில்லை. முக்கியமாக, மேற்கண்ட நாடுகளில் ஆங்கிலம் முதல் மொழியாக இல்லாததால், பெரும்பாலும் ஆசிரியர்களே உள்ளூர் மொழி அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால், மாணவர்கள் பாடங்களை புரிந்து கொள்வதே சிரமம்.  
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் சொல்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய மருத்துவக் கவுன்சில் 2002 ஆம் ஆண்டு முதல்  FMGE தகுதித்தேர்வை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இத்தேர்வு வெளிநாட்டில் மருத்துவம் படிப்பை முடிக்கும் மாணவர்களின் நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டது.

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்

 
" FMGE தேர்வு,  வருடத்துக்கு இரண்டு முறை நடக்கும். மொத்தம் 300 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்படும்.  காலையில் 150 மதிப்பெண்கள், மாலையில் 150 மதிப்பெண்கள். இரண்டு பிரிவாக தேர்வு நடக்கும். மொத்தம் 300 மதிப்பெண்கள்.  5 மணி நேரம் தரப்படும். இந்தத் தேர்வை மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவும், தேசிய தேர்வு வாரியமும் சேர்ந்து நடத்துகின்றன. கேள்விகள் சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் இருக்கும். கேள்வித்தாளை வெளியில் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மறுமதிப்பீடு செய்ய முடியாது. அண்மையில் நடந்த நீட் தேர்வில் கடைபிடித்ததை விடவும் பல மடங்கு கடுமையான நடைமுறைகள் இந்தத் தேர்வில் கடைபிடிக்கப்படும். சென்னை, திருச்சி, கோவையில்  தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும்  உடனடியாக பிராக்டிஸ் செய்ய முடியாது. ஒரு பல்கலைக்கழகம் அல்லது மருத்துவமனையில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். அதன்பிறகுதான் சிகிச்சை அளிக்கமுடியும்..." என்று FMGE தேர்வு நடைமுறைகளை விவரிக்கிறார் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்.  

2012-13ல் 13,953 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினார்கள். அதில் 28.3 சதவிகித மாணவர்களால்தான் தேர்ச்சி பெற முடிந்தது. 2013-14ல் 6395 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 16.7 சதவிகிதம் பேர் தான். 2014-15-ல்  தேர்வு எழுதியவர்கள் 12,494 பேர். அதில் தேறியவர்கள்  13.1 சதவிகிதம் பேர். 2015-16 ஜூன் மாதம் நடந்த தேர்வை 5863 பேர் எழுதினார்கள். அதில் தேறியவர்கள் 10.4 சதவிகிதம் பேர். ஒரு மாணவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம். வெளிநாட்டில் 5 ஆண்டுகாலம் தட்பவெப்பம் தாங்கி, மொழிச் சிக்கல் கடந்து மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வரும் பெரும்பாலான மாணவர்கள்,  FMGE தேர்வு எழுதுவதிலேயே தங்கள் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள். கரூரில் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாமல் சிகிச்சையளித்த ஒருவர் போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.  

இந்த தேர்வுக்கென பயிற்சி மையங்களும் முளைக்க ஆரம்பித்துள்ளன. டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி மையம் இந்த தேர்வுக்குப் பயிற்சி அளிக்க 1 லட்ச ரூபாய்க்கு மேல் கட்டணம் வாங்குகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா  போன்ற நாடுகளில் மாணவர் தேர்வு, பாடத்திட்டம் போன்றவை தரமாக இருப்பதால் அந்நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவுக்கு வந்து மருத்துவம் செய்ய இந்த FMGEதேர்வை எழுதத் தேவையில்லை. 

வெளிநாட்டு மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை அனுப்பும் பெரும்பாலான நிறுவனங்கள் இந்தத் தேர்வைப் பற்றி மாணவர்களிடம் பேசுவதேயில்லை. சிலர்  மேலோட்டமாக, ’ஒரு தேர்வு’ என்ற அளவில் சொல்லிவிட்டு அதன் கடினத்தன்மையை மறைத்து விடுகிறார்கள். சில நிறுவனங்கள், மாணவர்கள் மருத்துவப் படிப்பை படிக்கும் காலத்திலேயே FMGE தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சியை வழங்குவதாகச் சொல்கின்றன. கடினமான இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி எந்த அளவுக்கு பயனளிக்கும் என்று சொல்வதற்கில்லை.  

வெளிநாட்டு மருத்துவம் படிப்பு

”இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் தமிழகத்தில் இருந்து அண்மைக்காலமாக ஆண்டுக்கு இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கப் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். மாணவர்களை வளைக்க, வெளிநாட்டுக் கல்வி முகவர்கள், ஒரு வித்தியாசமான யுத்தியைக் கடைபிடிக்கின்றனர். தங்களிடம் சேரும் மாணவர்களின் பெற்றோரையே ஆள்சேர்க்கும் பணிக்கு நியமிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மாணவருக்கு இவ்வளவு என்று கமிஷன் வழங்குகிறார்கள். “என் பையன் வெளிநாட்டுலதான் படிக்கிறான். உங்கள் பையனையும் சேருங்கள்” என்று அவர்கள் சொல்வதை நம்பி, மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை சேர்க்கிறார்கள்.  இது ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டே போகிறது என்கிறார்” ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்.

இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் சைனாவுக்குத்தான் செல்கிறார்கள். பொருள்களைப் போலவே அங்கே ஏராளமான தரமற்ற கல்வி நிறுவனங்கள் உண்டு. கமிஷன் அதிகம் கிடைப்பதால், இங்குள்ள முகவர்கள் அது மாதிரி கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்பி வைத்து விடுகிறார்கள். சைனாவில் படித்த மாணவர்கள் தான் FMGE தேர்வில் பெருமளவு பின்தங்குகிறார்கள். 2012 முதல் 2014 வரை 11825 மாணவர்கள் சைனாவில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களில் வெறும் 18.9 சதவிகிதம் பேர்தான் FMGE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

வெளிநாட்டுக்கு மாணவர்களை அனுப்பும் நிறுவனங்களை  மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதே இல்லை. குடிசைத்தொழில்போல நிறுவனங்கள் முளைத்துவிட்டன. மாணவர் சேர்க்கை, கட்டணம் உள்ளிட்ட எதுவும் கண்காணிக்கப்படுவதில்லை. பெற்றோருக்கு விழிப்புஉணர்வூட்டும் ஏற்பாடுகளும் இல்லை. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு வெளிநாடு சென்று படிப்பை முடித்துத் திரும்பும் அப்பாவி மாணவர்கள் FMGE தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் எதிர்காலம் புரியாமல் தவிக்கிறார்கள். 

எங்கள் பிள்ளை வெளிநாட்டில் படிக்கிறது என்று சொல்வது பெற்றோருக்குப் பெருமைதான். ஆனால், எங்கே படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், என்ன படிக்கிறார்கள், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றியெல்லாம் பெற்றோருக்கு விழிப்பு உணர்வு இருக்க வேண்டும். அரசும் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்