Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அழிக்க நினைக்கிறது'!- அ.தி.மு.க எம்பி., எம்எல்ஏ-க்களுக்கு முக்கிய கோரிக்கை வைக்கும் மார்க்சிஸ்ட்!

ராமகிருஷ்ணன்

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க எம்பி., எம்எல்ஏ-க்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக அமைச்சர்கள் சிலர் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தால் தவறில்லை என்றும், பிஜேபி தீண்டப்படாத கட்சியா என்றும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். தமிழகத்தின் ஆளும் கட்சி அதிமுக. கழகங்கள் இல்லாத தமிழகம் என்று பிஜேபி முழங்குகிறது. அதன் பொருள் அதிமுகவும் இல்லாத தமிழகம் என்பதுதான். தன்னை அழிப்பதாகச் சொல்லும் ஒரு கட்சிக்கு வாய்ப்பளிப்பதில் தவறில்லை என்று கட்சித் தலைமை கூறுவது  தனிநபர்கள் நலனுக்காக கட்சியை அடகு வைப்பதாகும்.

அதேபோல் இக்காலத்தில் தமிழகம் மத்திய பாஜக அரசால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. வர்தா புயல் மற்றும் வறட்சிக்கு போதுமான நிதி ஒதுக்க மறுப்பது, காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதில் வஞ்சகம், கீழடி அகழ்வாராய்ச்சியை சீர்குலைப்பது, நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பதன் மூலம் தமிழகத்தின் உரிமையை மறுப்பது சமூக நீதி கோட்பாட்டை சிதைப்பது, 2015-16ஆம் ஆண்டுக்கான பயிர் பாதுகாப்பீட்டு பிரிமியம் கட்டாமல் துரோகமிழைத்தது, மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் தமிழகம் சிக்கியுள்ள நிலையில் கிராமப்புற வேலைக்கான நிதியை 1200 கோடி ரூபாய் தராமல் இருப்பது, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பிளஸ்2வுக்கு பிந்தைய உதவித்தொகை 1500 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்காமல் இருப்பது உட்பட ஏறத்தாழ 17000 கோடி ரூபாய் கொடுக்க மறுப்பது, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் திணித்து 50 சதம் பேருக்கு ரேசன் பொருள்கள் மறுப்பது, உதய் மின் திட்டத்தைத் திணித்து மின்வாரியத்தை சீரழிப்பது, நெடுவாசல் விவசாயத்தை அழிப்பது, ஜி.எஸ்.டி.யில் தமிழகத்துக்கான வருவாயை வெட்டிச் சுருக்கியது என ஒவ்வொன்றிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக வாக்களிப்பதற்கு எந்த நியாயமுமில்லை. அப்படிச் செய்வது தமிழக மக்களுக்கும், அதிமுக உறுப்பினர்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டுமென்ற சட்ட விதிமுறைப்படி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகி விட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பதவிக் காலம் நிறைவு பெற்றதால் உள்ளாட்சி நிர்வாகங்கள் தனிஅதிகாரிகள் தலைமையில் செயல்பட்டு வருகின்றன. தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் 6 மாதம் நிறைவு பெறவுள்ளது. இப்பின்னணியில் நீதிமன்றம் வலியுறுத்தியும் மாநில அரசு உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த மறுத்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டால் ஆறு மாதக்காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பது சட்ட விதி. சரியான காரணங்கள் இல்லாமல் காலவரையின்றி உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போடுவது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல; சட்ட விதிமுறைகளுக்கும் எதிரானது என்பதை அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டுகிறோம். எனவே உடனடியாக உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்திட வேண்டுமென மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement