Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எப்படியிருந்த நான் இப்படியாகிவிட்டேன்!   பூண்டி ஏரியின் புலம்பல் கதை

 பூண்டி ஏரி

 

 ஹலோ.. சென்னை மக்களே, நான் கூப்பிடுகிறது உங்களுக்கு கேட்கிறதா.. நான்தான் உங்கள் தாகத்தைத் பல ஆண்டுகளாக தீர்த்துவரும் பூண்டி ஏரி பேசுகிறேன். கொளுத்தும் வெயிலில் உங்கள் நா வறண்டு போனாலும் என்னால் உங்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் தந்து உதவ முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் இருந்தாலும் வறண்டு காணப்படுகிறேன்.

எனக்கு இன்று ஹேப்பி பர்த்டே தெரியுமா. நீங்கள் எனக்கு ஒரு வாழ்த்து சொல்லி கேக் வெட்டவில்லை என்றால்கூட உங்களிடம் மனம்விட்டு பேச பலநாள்களாக காத்திருந்தேன். அதற்கான நேரமும் வாய்ப்பும் இன்றுதான் எனக்கு கிடைத்தது.

1944ம் ஆண்டு ஜூன் 14ம் தேதியிலிருந்து உங்களுக்கு குடிநீராகப் பயன்பட்டுவருகிறேன். எனக்கு 73 வயது பூர்த்தியடைந்தாலும் இன்னும் அதே உற்சாகத்தில் இருக்க நான் ரெடி. ஆனால், நீங்கள் ரெடியில்லை. என்னை சரிவர பராமரிக்காமல் பாழ் பட்டுவிட்டேன். லட்சகணக்கான சென்னை மக்களின் தாகத்தை தீர்த்த பெருமை எனக்கும் உண்டு.

 என்னால் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியும். கடல் போல காட்சியளித்த நான், இன்று வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறேன். இப்போதாவது என்னை தூர்வாரி அடுத்த பருவமழைக்குள் தண்ணீரை சேமிக்க தயார்படுத்துவார்கள் என்று ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன். ஆனால், பொதுப்பணித்துறையினரோ அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாநதியிலிருந்தும் 152 கி.மீட்டர் தூரம் பயணித்துவரும் தண்ணீர் மற்றும் மழை தண்ணீரால் நிரம்புவேன். என்னுடைய உயரம் கடல் மட்டத்தில் இருந்து 138 அடியும், ஏரியின் நீர்மட்ட உயரம் 35 அடியாகும். முழு கொள்ளளவை அடையும்போது எல்லாம் என்னைக் காண மக்கள் வருவதுண்டு.

என் அருகிலுள்ள விளைநிலங்கள்,  செங்கல் சூளைக்கு மண் அள்ளுபவர்களால்   பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்து, சென்னை குடிநீர் தேவைக்காக விளைநிலங்களில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீரை பொதுப்பணித்துறையினர் உறிஞ்சிகின்றனர். என்னைக் காண ஏராளமானவர்கள் வந்தனர். வறண்டு கிடக்கும் என்னைப் பார்க்க யாருமே வருவதில்லை. சுட்டெரிக்கும் வெயிலைத் தாங்க முடியாமல் நான் பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறேன். இப்போது, என்னைப் பார்க்கவே எனக்கே வெறுப்பாக இருக்கிறது.

 பூண்டி ஏரி


 உங்களுக்கு ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா?.   1939ஆம் ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்போது, சென்னை மேயராக சத்தியமூர்த்தி இருந்தார். குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போதுதான் உதயமானது பூண்டி நீர்தேக்கத்திட்டம். சென்னையிலிருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் நடுவில் நீர்தேக்கம் அமைக்கலாம் என்ற திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், அப்போதைய ஆங்கில அரசு, அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்கு காரணம் நான் அங்கு உருவாகினால் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான்.

இருப்பினும் சத்தியமூர்த்தி, போராடி திட்டத்துக்கு அனுமதி பெற்றார். 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பூண்டி நீர்தேக்கம் திட்டப்பணிகளுக்கு சென்னை மாகாண கவர்னர், சர் ஆர்தர் ஹோப் அடிக்கல் நாட்டினார். 65 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடந்தன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பணிகள் நிறைவடைந்தன. அதற்குள் சத்தியமூர்த்தி அய்யா மறைந்துவிட்டார். அவரது பெயரை எனக்கு சூட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கும் ஆங்கில அரசு சம்மதிக்கவில்லை. இந்த தகவல் காமராஜர் கவனத்துக்குச் கொண்டுச் செல்லப்பட்டதும் 1948ல் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சத்தியமூர்த்தி பெயரை எனக்குச் சூட்ட தீர்மானம் நிறைவேற்றினர். 1954ல் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கம் என்ற பெயரை கல்வெட்டாக வைத்தனர்.

 பூண்டி ஏரி

என்னிடமிருந்து பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய்கள் ஆகியவை மூலம், சோழவரம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். என் நுழைவு வாயிலில்  மியூசியம் உள்ளது. இங்கு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய கற்களால் ஆன ஆயுதங்கள் மற்றும் முதுமக்கள் தாழியும் உள்ளது. ஆனால், அவை எல்லாம் பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்படுகின்றன. எனவே, என் மன குமுறல் தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் காதுகளுக்கு கேட்குமா..என்று தன் கதையைச் சொல்லி முடித்தது பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement