வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (14/06/2017)

கடைசி தொடர்பு:19:13 (14/06/2017)

பத்து கோடி வாங்கினேனா? எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி பரபர தகவல்!

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவளிக்க தன்னிடம் பணம் பேரம் பேசப்பட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 

Thamimun ansari
 

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் இருந்தபோது சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி திடுக்கிடும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது. அந்த வீடியோவில் கூவத்தூரிலிருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ சரவணன் உரையாடல் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறினார். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குதான் அதிகளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று பேசியுள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த வீடியோ குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது.. ‘எம்.எல்.ஏ சரவணன் இன்று சட்டமன்றத்தின் வெளியே என்னை சந்தித்துப் பேசினார். அப்போது அந்த வீடியோ குறித்து நான் கேட்டதற்கு அது என் குரல் இல்லை, நான் அப்படி பேசவேயில்லை என்று மறுத்துவிட்டார். அது பொய்யான வீடியோ. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தருமாறு செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் என் தொகுதி தொடர்பான ஏழு கோரிக்கைகளை முன்வைத்தேன். எங்கள் தொகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றவே நாங்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தந்தோம். மற்றவர்கள் பணம் வாங்கினார்களா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் நேர்மையானவர்கள். களங்கமற்றவர்கள். என் இறைவன்மீது ஆணையாக நாங்கள் கரன்சி பேரம் பேசவில்லை', என்று கூறினார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க