Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈஸ்வரியை அறைந்த அதிகாரிக்கு அரசாங்கத்தின் பரிசா இது?” கொதிக்கும் சாமளாபுரம்

டாஸ்மாக் போராட்டம்

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மதுக்கடையின் முன்பு அமர்ந்து அமைதியாக நடத்திய அறவழிப் போராட்டம் ஆகட்டும்; ஆக்ரோஷமாக மதுக்கடைக்குள் புகுந்து மதுப் பாட்டில்களை உடைத்து துவம்சம் செய்ததாகட்டும். எதுவாக இருந்தாலும் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிக அளவில் ஈடுபாட்டுடன் போராடிவருகிறார்கள். மாநிலம் முழுவதும் இந்த டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் நடைபெற்று வந்தாலும், இதில் குறிப்பாகத் திருப்பூர் மாவட்டம்தான் ஒருபடி முன்னிலை வகித்துவருகிறது. ஆண்டுதோறும் கணக்கிடப்படும் டாஸ்மாக் வருமானத்தில் திருப்பூரின் வியாபாரம் சக்கைப்போடு போடும். தொழிலாளர் வர்க்கம் நிறைந்த திருப்பூரைக் குடிகாரர்களின் கூடாரமாக மாற்றிய பெருமை தமிழகத்தை ஆண்ட இரு கட்சிகளையே சாரும். டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்துத் தொழிலாளர்களின் வருமானத்தைச் சுரண்டிக்கொண்டிருந்த தமிழக அரசின் மீது திருப்பூர் மக்களுக்கு இருந்த கோபம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மிகத் தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது. நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளைக் குடியிருப்புப் பகுதிகளில் திறக்க அதிகாரிகள் காட்டிய முனைப்புக்கு, பொதுமக்கள் அளித்த எதிர்விளைவு தமிழக அரசை உலுக்கிவிட்டது. அதுவும் குறிப்பாகத் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நடந்த மக்கள் போராட்டத்தைத் தமிழகம் எளிதில் மறந்துவிடாது.

டாஸ்மாக் போராட்டம்

 

கடந்த ஏப்ரல் 11, கொளுத்திய வெயிலில், கொதிகொதித்த தார்சாலையில் அமர்ந்து டாஸ்மாக் கடைக்கு எதிராக முழங்கி, அந்த வழியாக வந்த தொகுதி எம்.எல்.ஏ கனகராஜை வளைத்துப் பிடித்துக் கதறித் துடித்தார்கள். சம்பவ இடத்திலிருந்து சைலன்ட்டாக எம்.எல்.ஏ-வை அப்புறப்படுத்தி காரில் அனுப்பிவைத்த காவல் துறை, அதன்பின் அங்கு நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டு ஒட்டுமொத்தத் தமிழகமும் பதறிப்போனது. பெண்கள் முன்னின்று நடத்திய மறியலில் உள்ளே புகுந்து காவல் துறை தாக்கியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். மறியல் போராட்டத்தில் முன்னின்று முழங்கிய ஈஸ்வரி என்ற பெண்ணை ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் கன்னத்திலேயே அறைந்த வீடியோ பதிவு... ஊடகங்கள், சமூகதளங்கள் என அனைத்திலும் பரவி நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. தாக்குதல் நடத்திய ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மனித உரிமை அமைப்புகள் கண்டனக் குரல்களை ஒலித்தன. தாக்குதல் நடத்திய அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசும் அறிவித்தது. கடந்தகால காட்சிகள் இப்படியிருக்க, இன்று பல நாள்கள் கடந்த நிலையில், தற்போது தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணி மாற்றம் வழங்கப்பட்டு உத்தரவு ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்தப் பட்டியலில் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு ஈரோடு மாவட்ட அதிரடிப்படை கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமனம் செய்திருக்கிறார்கள்.

டாஸ்மாக் போராட்டம்

 

அன்று சாமளாபுரம் மக்கள்மீது காவல் துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு இன்று பதவி உயர்வுடன் கூடிய பணி மாற்றம் வழங்கி அலங்கரித்துள்ள தமிழக அரசை என்னவென்று சொல்லிப் புலம்புவது என தெரியாமல் சோகத்தில் முழ்கியிருக்கிறார்கள் சாமளாபுரம் மக்கள்.

பொதுமக்களைக் கொலைவெறியுடன் தாக்கியவர்மீது நடவடிக்கை எடுக்காமல், மாறாக அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் முகத்தில் சாணியை வாரி அடித்ததுபோல் இருக்கிறது. போராட்டத்துக்குள் புகுந்து கலவரம் செய்த காக்கிச் சட்டை அதிகாரிமீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம். மக்கள் போராட்டத்துக்குச் செவிசாய்த்து இனி சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க மாட்டோம் என உறுதியளித்துவிட்டு சென்ற அரசாங்கம், இன்று அந்த இரண்டையுமே நிறைவேற்றவில்லை.
 

டாஸ்மாக் போராட்டம் 

''ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு அளித்தது மட்டுமல்ல... எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க மாட்டோம் என்று சொன்னவர்கள், இப்போது மீண்டும் சாமளாபுரம் பகுதியில் மதுக்கடையைத் திறந்து விற்பனையையும் தொடங்கிவிட்டார்கள். இன்றைக்கும் நாங்கள் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இனி வருங்காலத்திலும் காவல் துறை எங்களுடைய எத்தனை பேர் மண்டையை வேண்டுமானாலும் உடைக்கட்டும். மதுவுக்கு எதிரான எங்கள் மக்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்'' என்றார்கள்.

அரசு நடத்தும் மதுக்கடைகளைக் காக்க ஆயிரம் பாண்டியராஜன்கள் வந்தாலும், களத்தில் நின்று போராட்டம் நடத்த லட்சம் சசி பெருமாள்கள் உருவாகிவிட்டார்கள்..
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement