Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"கமல் சார் கழுத்துல அருவாளை வெச்சப்போ...!'' நீலிமா ராணி ஃப்ளாஷ்பேக்

நடிகை நீலிமா ராணி

20 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல்களில் தனது நடிப்பினால், பல குடும்பங்களில் ஒருவராக மாறிவிட்டவர் நீலிமா ராணி. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பிலிருந்து விலகவில்லை. தற்போது, மகள் பிறந்த மகிழ்ச்சியில் இருப்பவரிடம் ஆக்டிங் பற்றி உரையாடினோம்.

"சிவாஜி, கமல்ஹாசன் கூட நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?"

"'தேவர் மகன்' படத்துல நாசர் சாரோட பொண்ணா நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுது. அப்ப எனக்கு ஆறு வயசு. நாசர் சாரை வெட்டுறதுக்காக கமல் சார் எங்க வீட்டுக்கு வருவார். அப்போ லட்சுமி பாட்டி என்னை முன்னாடி போட்டு, 'முதல்ல இந்தப் பொண்ணை வெட்டிட்டு அப்புறமா இவளோட அப்பனை வெட்டு'னு சொல்லுவாங்க. அப்போ கமல் சார் அருவாளை என் கழுத்து வரைக்கும் கொண்டு வந்துட்டு நிறுத்துவாரு. அப்போ பயத்துல அழ ஆரம்பிச்சவதான்... அந்த அழுகையை நிறுத்த ரொம்ப நேரமாச்சு. ஒரு பக்கம் பயம்னாலும் இன்னொரு பக்கம் ஜாலியான விஷயங்களும் இருந்துச்சு. சூட்டிங்கின்போது, ஃப்ரி டைம்ல சிவாஜி சார், கமல் சார்னு எல்லா ஆர்டிஸ்டும் ஒண்ணா சிரிச்சு பேசிட்டே சாப்பிட்டது, விளையாடினதுனு அந்த நினைவுகளை இப்போ நினைச்சாலும் சந்தோஷமாவும் ரொம்பவே பெருமையாவும் இருக்குது"

நடிகை நீலிமா ராணி

"ஸ்கூல் படிக்கிறப்பவே பல மொழிகளிலும் பிஸியா நடித்தீர்களாமே?"

"'தேவர் மகன்' படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து நிறைய சினிமா, சீரியல்கள்ல நடிக்கிற வாய்ப்பு வந்துகிட்டே இருந்துச்சு. பத்து வயசுல தெலுங்கு படத்துல நடிச்சதுக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான நந்தி விருது கிடைச்சப்ப எக்கச்சக்க புகழ் மழைதான்.  'தீர்ப்பு'னு தமிழ் சீரியல், 'அகல்யா'னு மலையாள சீரியல், 'சக்தி'னு தெலுங்கு சீரியல்னு ஒரே நேரத்துல மூணு சீரியல்ல நடிச்சுகிட்டு இருந்தேன். அதனால ஈவ்னிங் டைம் ஸ்கூலுக்கே கார் வந்து என்னை பிக்கப் பண்ணிகிட்டு ஏவிஎம் ஸ்டுடியோவுக்குப் போகும். அங்க பக்கத்து ஃப்ளோர்ல நடக்குற மூணு சீரியல் சூட்டிங்கலேயும் மாறி மாறி நடிச்சுட்டு வீட்டுக்குப் போவேன். அதுக்குப் பிறகு ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுட்டு தூங்கறதுக்கு ரொம்ப லேட்டாயிடும். அந்தச் சமயத்துல ஸ்கூல்லயும் வீட்டுலயும் எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கும்"

"சினிமா ஹீரோயின் வாய்ப்புகள் வந்ததுண்டா?"

"பிளஸ் டூ படிக்கிற சமயத்துல கனா கண்டேன் தோழி, ரெக்கைகட்டிய மனசு, பிருந்தாவனம்னு ஒரே நேரத்துல ஹீரோயினா மூணு சீரியல்கள்ல நடிச்சேன். அடுத்தடுத்த புராஜெக்ட்டும் ரெடியா இருந்துச்சு. வேலைப் பளு ஹெவியாயிடுச்சுன்னு தோணுச்சு. அதனால நடிக்கிறதைக் குறைச்சுகிட்டேன். அதற்குப் பிறகு, செலெக்டிவாகத்தான் இப்போ வரைக்கும் நடிச்சுகிட்டு இருக்கேன். இதற்கிடையே சினிமாவுல ஹீரோயினா நடிக்கிற வாய்ப்பு நிறைய வந்துச்சு. ஆனா, ஹீரோயினா நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை. பிடிச்ச கதையில ஹீரோவுக்கு சிஸ்டர், ஹீரோயினோட ஃப்ரெண்டு மாதிரியான கேரக்டர்கள்ல மட்டும்தான் நடிச்சுகிட்டு இருக்கேன். நான் மகான் அல்ல, திமிரு, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23 உள்ளிட்ட பல படங்கள்ல நடிச்சிருக்கேன்." 

நடிகை நீலிமா ராணி

"20 வருஷத்துக்கும் மேலான சீரியல் அனுபம் எப்படி இருக்குது?"

"நடுவுல ரெண்டு வருஷம் சின்ன பிரேக் எடுத்துகிட்டாலும், 22 வருஷமா தொடர்ந்து சீரியல்கள்ல நடிச்சுகிட்டு இருக்கேன். பெருமையான விஷயங்கிறதை விடவும், நல்லா பேசப்படுற அளவுக்கு வெரைட்டியான கேரக்டர்கள்ல நடிச்சுகிட்டு இருக்கேன் என்பதுல ஒரு திருப்தி. ஆரம்பக் கட்டத்துலேருந்து இப்போ வரைக்கும் சீரியல்கள்தான் என்னோட பெரிய பலமா இருக்குது. அதனால எனக்கு ஃபேமிலி ரசிகர்கள் நிறையப் பேரு இருக்காங்க. பல மொழிகளேயும் பல சேனல்களேயும் நிறைய சீரியல்கள்ல நடிச்சுட்டேன். இதுல மறக்க முடியாத அனுபவம்னா, ராதிகா மேடத்தோட முதல் தயாரிப்பான ஒரு தெலுங்கு சீரியல்ல அவங்களுக்கு மகளா நடிச்சேன். அடுத்து, செல்லமே சீரியல்லயும், இப்போ வாணி ராணி சீரியல்லயும் அவங்களோடு சேர்ந்து நடிச்சுகிட்டு இருக்கேன். அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட விஷயங்கள் ரொம்பவே அதிகம். இப்போ தாமரை, தலையணை பூக்கள், வாணி ராணினு மூணு சீரியல்ல நடிச்சுகிட்டு இருக்கேன். நடிச்ச ரெண்டு படங்களும் ரிலீஸ் ஆகவிருக்குது".

"வீட்டுக்கு வந்திருக்கும் புதிய உறவு பற்றி?"

"எனக்கு பெண் குழந்தை பிறந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. மகளின் வருகை என்னை ரொம்பவே உற்சாகமாக்கியிருக்குது. குறிப்பா, வாணி ராணி சீரியல்ல சில மாசத்துக்கு முன்னாடி நிஜமாவே கர்ப்பமா இருந்ததால, சீரியல்லயும் கர்ப்பமா இருக்குற மாதிரியான கேரக்டர் சேஞ்ச் இருந்துச்சு. அப்போ நடிச்ச அனுபவம் ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு".

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement