நாங்க அனுப்பிட்டோம்; அவங்க அனுப்பல - நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது அமைச்சர் திடீர் புகார்

நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசு மீது தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வில் அரசின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.  அதற்குப் பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். கிராமப்புற மாணவர்களைப் பாதுகாக்க உள்ஒதுக்கீடு கொண்டுவர ஆலோசிக்கிறோம். இது தொடர்பாக, சட்டவல்லுநர்களிடம் ஆலோசனைசெய்துவருகிறோம் என்றார்.

அப்போது, தி.மு.க எம்எல்ஏ., துரைமுருகன் குறுக்கிட்டு, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஏன் காலதாமதம்செய்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.  அதற்குப் பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு பற்றி தமிழக அரசின் மசோதாவை ஜனாதிபதிக்கு மத்திய அரசு அனுப்பவில்லை என்று திடீர் குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வு விவகாரம் பூதாகரமாக மாறியதற்குக் காரணமே, முந்தைய தி.மு.க அரசுதான் என்றும், தி.மு.க கூட்டணியில் இருந்தபோது நீட் அறிவிப்பை அப்போதைய காங்கிரஸ் அரசு வெளியிட்டது என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

நீட் தேர்வை ரத்துசெய்ய தமிழக அரசு போராடினால், தி.மு.க அதற்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளது என்றும், தி.மு.க முயற்சியால்தான் நீட் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

  இதற்குப் பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வில் தும்பைவிட்டது தி.மு.க அரசு; தற்போது வாலைப் பிடித்துக்கொண்டிருப்பது அ.தி.மு.க என்று கூறினார்.

இதனிடையே, எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தி.மு.க எம்எல்ஏ., கே.என்.நேரு எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டாலும், அதை தமிழக அரசு வரவேற்கும். மத்திய அரசு கோரியுள்ள 200 ஏக்கர் நிலம் ரயில், விமான நிலையங்கள் உள்ள ஐந்து இடங்கள் தேர்வாகியுள்ளன. செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெருந்துறை ஆகிய இடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஐந்து இடங்களில், மத்திய அரசு எதைத் தேர்வுசெய்தாலும் தமிழக அரசு வரவேற்கும் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!