கூவத்தூர் வீடியோ விவகாரம்: இரண்டாவது நாளாக வெளிநடப்புசெய்த ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்ததும், எம்எல்ஏ., சரவணன்  வீடியோ விவகாரம்குறித்து விவாதிக்க, தி.மு.க வலியுறுத்தியது. ஆனால், அவைத் தலைவர் தனபால் மறுத்துவிட்டார்.

Stalin
 

அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் இருந்தபோது, சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கிலத் தொலைக்காட்சி திடுக்கிடும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது. அந்த வீடியோவில், கூவத்தூரிலிருந்து தப்பி வந்த எம்எல்ஏ., சரவணனின் உரையாடல் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறினார். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுக்குதான் அதிக அளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று பேசியுள்ளார்.

congress
 

இந்த விவகாரம்குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நேற்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டார். இதனால், தி,மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் பேரவையை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

இந்த நிலையில், இரண்டாவது நாளாக நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் வீடியோ விவகாரம் பற்றிப் பேச அவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புசெய்தன. 

stalin

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘எம்எல்ஏ-க்கள் பல கோடிக்கு பேரம் பேசப்பட்டது சட்டமன்றத்துக்கு அவமானம். இதுதொடர்பாக வெளியான வீடியோகுறித்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏ., சரவணன், விளக்கம் அளிக்க முன்வரவில்லை. வீடியோ விவகாரம்குறித்து ஆளுநரிடம் முறையிட உள்ளோம். இதற்காக, அவரிடம் நேரம் கேட்டுள்ளோம்’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!