அ.தி.மு.கவுக்கு ஏன் உரிமை கொண்டாடுகிறார் தீபா?! - தேர்தல் ஆணையமும் தினகரனின் அச்சமும் #VikatanExclusive

தீபா

மீண்டும் தினகரனைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில், தினகரனின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது டெல்லி. 'சசிகலா எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியிலேயே அ.தி.மு.கவின் மற்ற அணிகள் இணைய இருக்கின்றன. சசிகலா எதிர்ப்பு மட்டும்தான் வலுப்பெறும்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

அண்ணா தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் ஒதுங்கி இருந்தேன். அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாததால், மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட இருக்கிறேன்' எனப் பேட்டி அளித்தார் தினகரன். இதனை எதிர்பார்க்காத சசிகலா எதிர்ப்பு அணியினர், 'ஒதுங்கிவிட்டேன் எனக் கூறிவிட்டு, மீண்டும் கட்சிப் பணிக்கு வருவது எந்த வகையில் நியாயம்?' எனக் கொந்தளித்தனர்.

'சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கும் வரையில் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை' எனப் பன்னீர்செல்வம் அணியினர் உறுதியாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.கவுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் பணிகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் பன்னீர்செல்வம் அணியினரும் தீவிரம் காட்டினர். ' ஜூன் 16 ஆம் தேதிக்குள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்' எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதால், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பிரமாண பத்திரங்களை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து சேர்த்தனர் பழனிசாமி தரப்பினர். பன்னீர்செல்வம் அணியினர் தரப்பில் இருந்து ஒரு லட்சத்து 98 ஆயிரம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக, அ.தி.மு.கவுக்கு உரிமை கொண்டாடி தீபா தரப்பில் இருந்து 47 ஆயிரம் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தினகரன்"மாவட்டத்துக்கு 35 ஆயிரம் நிர்வாகிகளிடம் இருந்து பழனிசாமி அணியினர் 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதற்கான செலவுகளை மாவட்ட அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். கிளைக் கழக நிர்வாகியில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் வரையில், அவரவர் பதவிக்கு ஏற்ப பணமும் கொடுத்துள்ளனர். 'சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டோம்' எனக் கூறிவிட்டு, பிரமாண பத்திரங்களில் சசிகலா மற்றும் தினகரன் பெயரை முன்னிறுத்தியிருந்ததை, பன்னீர்செல்வம் அணியினர் சுட்டிக் காட்டினர். இதுகுறித்து முதல்வர் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவருடைய ஒரே நோக்கம், 'கட்சியும் சின்னமும் கைக்கு வந்து சேர வேண்டும். தொடக்கத்தில் என்ன வடிவத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதோ, அதே முறை தொடரட்டும். நம்மிடம் அதிக எண்ணிக்கையில் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினால் போதும்' என உறுதியாகக் கூறிவிட்டார். ஆனால், பன்னீர்செல்வம் தரப்பினரோ, கட்சி நிர்வாகிகளிடம் முறையாகக் கையெழுத்து வாங்காமல், வருவோர் போவோரிடம் எல்லாம் கையெழுத்து வாங்கியுள்ளனர் என்பதை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இத்தனை பத்திரங்களையும் ஆணையத்தின் அதிகாரிகள் சரிபார்ப்பார்களா என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்" என்கின்றனர் பழனிசாமி தரப்பினர். 

‘அ.தி.மு.கவின் எந்த அணிக்கு தேர்தல் ஆணையத்தின் ஆதரவு கிடைக்கும்?' என்ற கேள்வியை அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "இரட்டை இலைச் சின்னம் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.க என்பது சசிகலா ஆதரவு-எதிர்ப்பு என இரண்டு நிலையில் உள்ளது. தொடக்கத்தில் சசிகலாவை கடுமையாக எதிர்த்தவர் தீபா. ' ஜெயலலிதாவைக் கொன்றுவிட்டார் சசிகலா' எனப் பகிரங்கமாகப் பேசி வருகிறார். அடுத்து, சசிகலா எதிர்ப்பு நிலையை எடுத்த பன்னீர்செல்வம், ' அம்மா மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என மக்கள் நம்புகிறார்கள்' எனப் பேட்டியளித்தார். இன்றைக்கு சசிகலா எதிர்ப்புப் புள்ளியின் மொத்த உருவமாக பன்னீர்செல்வம் இருக்கிறார். தற்போது தீபா அணியினரும், ஐம்பதாயிரம் ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர், சசிகலா எதிர்ப்பு நிலையை நேரடியாக அறிவிக்காமல் மௌனம் காக்கின்றனர். சசிகலாவுக்கு ஆதரவு என்பதில் தினகரன் மட்டுமே உறுதியாக இருக்கிறார். தினகரனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்றைக்கு நேரடி சண்டை வருகிறதோ, அன்றைக்கு சசிகலா எதிர்ப்பு நிலையை எடப்பாடி பழனிசாமி எடுப்பார். சசிகலா ஆதரவு அணியோடு எதிர்ப்பு அணிகள் ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் இல்லை. வரும் காலங்களில் மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றால், சசிகலா எதிர்ப்பு அரசியல்தான் கை கொடுக்கும். இந்த மூன்று அணிகளும் இணைவதற்கும் எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்கிறது. தலைமைக் கழகத்தில் இருந்து சசிகலா படத்தை நீக்கியதிலும் அரசு அலுவலகங்களில் தன்னுடைய படத்தை வைத்ததிலும் எடப்பாடி பழனிசாமியின் உறுதியை கொங்கு மண்டல அ.தி.மு.கவினர் உணர்ந்துள்ளனர். இந்த லாபியை அறிந்துதான், தன்னுடைய வலுவைக் காட்ட போராடி வருகிறார் டி.டி.வி.தினகரன்" என்றார் விரிவாக.

 'இரட்டை இலைச் சின்னம் யாருக்கு?' என்ற மோதலில், தீபாவும் களம் இறங்கியிருக்கிறார். போயஸ் கார்டனில் நடந்த சண்டையை அடுத்து, 'தனக்கும் உரிமை உண்டு' என்று காட்டுவதற்காக அவர் களமிறங்கியிருக்கிறார். அவருக்குப் பின்புலத்தில், 'பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமான தமிழகப் புள்ளி ஒருவர் இருக்கிறார்' என்ற தகவலும் வெளிவருகிறது. அண்ணா தி.மு.கவைப் பல துண்டுகளாகச் சிதறடிக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 'யாருக்கு வழி அமைத்துக் கொடுக்க இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன?' என்ற கேள்விகளும் அரசியல் மட்டத்தில் எழாமல் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!