‘எங்க பள்ளியை விட்டு அவர் போகக்கூடாது!’ ஆசிரியரை வழியனுப்ப மறுக்கும் கிராமத்தினர் #GovtSchool #VikatanExclusive | People are not allowing govt school teacher to leave from their village

வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (16/06/2017)

கடைசி தொடர்பு:13:04 (16/06/2017)

‘எங்க பள்ளியை விட்டு அவர் போகக்கூடாது!’ ஆசிரியரை வழியனுப்ப மறுக்கும் கிராமத்தினர் #GovtSchool #VikatanExclusive

பள்ளி

ஓர் ஆசிரியருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்பது மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தருகிற அன்பும் மரியாதையும்தாம். அப்படியான அங்கீகாரம் அரசுப் பள்ளி ஆசிரியர் வசந்த் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. கடலூர் மாவட்டம் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். அரசுப் பள்ளி என்றாலே மாணவர்களுக்குத் தேவையான விஷயங்களில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதையே காரணமாக கூறி, வசந்த் தன் பணியின் கடமையிலிருந்து விலகி விடவில்லை. தன் சக்திக்கு மீறியும் அந்தப் பள்ளிக்கு அவர் செய்தது ஏராளம். அவரிடம் பேசியபோது,

"ரொம்ப அழகான பள்ளி இது. அதை, இன்னும் அழகாகவும் கற்பதற்கும் சிறப்பானதாக மாற்ற வேண்டும் என நினைத்தேன். பள்ளிக்குத் தேவையானவற்றைப் பட்டியலிட்டேன். தமிழ்நாடு அரசின் சிறப்பான தன்னிறைவுத் திட்டத்தில், பள்ளியின் தேவைக்கான தொகையில் மூன்றில் ஒரு பங்கை நாம் செலவிட்டால் மீதத்தை அரசு அளித்துவிடும். எனவே அதற்கான தொகையைச் சேகரிக்கத் தொடங்கினேன். அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இன்று, உலகம் முழுவதும் பல்வேறு வேலைகளில் இருக்கின்றனர். அவர்களுக்கு இதுபோன்ற பள்ளிகளுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் இருப்பதைத் தெரிந்துகொள்ள என் நண்பனே ஓர் உதாரணம். அவனிடம் பள்ளியைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தபோது, 50 ஆயிரம் ரூபாய் தந்து ஆச்சர்யப்படுத்தினான். முழுமதி அறக்கட்டளை எனும் அமைப்பு வெளிநாட்டில் இயங்கி வருகிறது. அது, ஒரு லெட்சத்துக்கும் அதிகமான தொகையைத் தந்தனர். இவற்றை வைத்து, 1,69.000 ரூபாயை தமிழக அரசுக்கு அனுப்பினோம்.

பள்ளி

எங்களின் இந்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்தது. தமிழக அரசு ஒதுக்கிய சுமார் 5 லட்சம் நிதியால் 23 கம்ப்யூட்டர்களும் அவற்றிற்கு 46 நாற்காலிகளும் எங்கள் பள்ளிக்குக் கிடைத்தன. மூன்று இன்வெர்ட்டர் பேட்டரிகளும் வாங்கினோம். இரண்டு வகுப்பறைகளை ஏஸியாக்கினோம். தமிழக அளவில் ஒரு நடுநிலைப் பள்ளி இவ்வளவு வசதிகள் இருக்குமா என்பது சந்தேகம்தான். இவற்றையெல்லாம் செய்ததற்கு முதல் காரணம், எங்கள் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியைக் கற்க வேண்டும் என்பதற்காகத்தான். ஏனெனில்,  பணம் கொடுத்து, இவற்றைக் கற்றுக்கொள்ளும் நிலையில் பொருளாதார நிலையில் அவர்கள் இல்லை." என்று சமூக அக்கறையோடு பகிர்ந்துகொள்கிறார் வசந்த்.

பள்ளிக்கான பொருள்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவராக மட்டும் ஆசிரியர் வசந்த் விளங்கவில்லை. மாணவர்களின் நடத்தையைச் சீர்செய்வது, மெள்ள கற்கும் மாணவர்களிடம் தனிக்கவனம் எடுப்பது என அனைத்து வேலைகளையும் சுயஆர்வத்தின் அடிப்படிப்படையில் செய்தவர். ஏறக்குறைய கீழப்பாலையூர் பள்ளியின் தேவைகளை நிறைவேற்றிய வசந்த் எடுத்த முடிவு பலருக்கும் ஆச்சர்யமானது.

கீழப்பாலையூரிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கீரனூர் பள்ளிக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டார். அதற்கு அவர், "ஒரு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றியாச்சு. அவற்றைக் கொண்டு இங்குள்ள ஆசிரியர்கள் சிறப்பாக மாணவர்களுக்கு வழிக்காட்டுவார்கள் என்பது தெரியும். அதனால் வேறொரு பள்ளிக்குச் சென்று இதேபோல வேலைகளைச் செய்யலாம் என்பதால் இந்த முடிவு எடுத்தேன்" என்கிறார் வசந்த்.

பள்ளி

பணி மாறுதல் கிடைத்து, கீரனூர் பள்ளியில் வேலைகளைத் தொடங்கியும் விட்டார். பள்ளியின் முன்புறம் குண்டும் குழியுமாக இருந்ததை மணல் அடித்து சமப்படுத்தும் வேலை மும்மரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வசந்தின் மொபைலுக்கு கீழப்பாலையூரிலிருந்து ஏகப்பட்ட அழைப்புகள். அப்படி அழைத்தவர்களில் ஒருவர்தான் பால்ராஜ். வசந்திடம் படித்துவிட்டு, தற்போது டிப்ளமோ படித்திருக்கிறார்.

"வசந்த் சார் எங்க பள்ளியை விட்டுப் போனதே தெரியாது. இந்த வருஷம் ஸ்கூல் திறந்ததும் சார் வரலைனு பசங்க சொன்னாங்க. சரி, எதுக்காச்சும் லீவு போட்டிருப்பாங்கனு நினைச்சிட்டிருந்தோம். இப்ப விசாரிச்சப்பதான் அவர் வேற பள்ளிக்கூடத்துக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறது. அவர் எங்க ஊருக்கே திரும்பவும் வரணும் சார். எங்க பள்ளியை விட்டு அவரை அனுப்ப மாட்டோம். அதுக்காக ஸ்டிரைக் பண்ணக்கூட நாங்க ரெடியாயிட்டோம்." என்று உணர்ச்சி பூர்வமாக கூறுகிறார் பால்ராஜ்.

முருகன் என்பவரின் மகன்கள் கீழப்பாலையூரில் படித்தவர்கள். அவர் பேசும்போது, "என்னோட பசங்க அவர்கிட்ட நல்லா படிச்சாங்க. இப்ப ப்ளஸ் டூ படிக்கிறாங்க. ஒவ்வொரு நாளும் சாரைப் பத்தி சொல்லிகிட்டே இருப்பாங்க, இப்படி தீடீர்னு எங்க வூரு ஸ்கூலை விட்டு வேற ஊருக்குப் போவாருனு எதிர்பார்க்கல. என்ன செஞ்சாவது அவரை இந்த ஸ்கூலுக்கே அழைச்சிட்டு வந்துடணும்னு உறுதியாக இருக்கோம்" என்றார் முருகன்.

பால்ராஜ், முருகன் மட்டுமல்ல கீழப்பாலையூரின் பொதுமக்கள் அனைவரும் வசந்த் திரும்பவும் தங்கள் ஊருக்கே ஆசிரியராக வர வேண்டும் என்கிற முடிவோடு இருக்கிறார்கள். இதற்கான வேலைகளை நிச்சயம் செய்வோம் என்கிறார்கள். ஆனந்திடம் இது குறித்து கேட்டபோது,

"என் மேல் இவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கனு நினைச்சு சந்தோஷப்பட்டாலும், கீரனூர் ஸ்கூலிலும் என்னை ஆர்வமா வரவேற்றாங்க. திரும்பவும் கீழப்பாலையூருக்கு வர்ற சூழல் வந்தா கீரனூர் பசங்க ஏமாற்றமடைஞ்சிடுவாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல" என்கிறார்.

தன்னலம் இல்லாமல் பணியாற்றுபவர்களை இந்த உலகம் பெரிதும் நேசிக்கும் என்பதற்கு ஓர் உதாராணம் ஆசிரியர் வசந்த். அவரின் பணிகள் தொய்வின்றித் தொடரட்டும்.


டிரெண்டிங் @ விகடன்