Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘எடப்பாடி பழனிசாமிக்கும் பா.ஜ.கவுக்கும்தான் லாபம்!’ - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive

சசிகலா

சிகலா குடும்பத்துக்குள் தினகரனுக்கும் திவாகரனுக்கும் நீடித்து வந்த மோதல், தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. 'சசிகலாவை சந்திக்க தினகரன் முயற்சி செய்தபோதும், திவாகரன் அதற்கு இடையூறாக இருந்தார். 'குடும்பம் மற்றும் கட்சியைக் காப்பாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என சசிகலா வைத்த உருக்கமான வேண்டுகோளை இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள். இந்த சந்திப்பில், 'கட்சிப் பொறுப்பில் தினகரன் தொடர்வார். 'சசிகலா பொதுச் செயலாளர்; டி.டி.வி.தினகரன் துணைப் பொதுச் செயலாளர்' என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக எடுத்துக் கொண்டாடும்போது, தினகரன் தலைமை ஏற்க வேண்டும். அவருக்கு ஆதரவாக நாங்கள் அனைவரும் இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னிச்சையாக செயல்படுவோம்' எனப் பேசியுள்ளனர். இதன்பின்னர், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்தக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தபோதே, பெங்களூரு சிறையில் இரண்டாவது முறையாக சசிகலாவை சந்தித்தார் தினகரன். 

தினகரன்மன்னார்குடி அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த நாள்களில், சசிகலாவை சந்திக்க விரும்பினார் தினகரன். இந்த சந்திப்பை திவாகரன் ரசிக்கவில்லை. 'நமது குடும்பத்துக்கு ஏற்பட்ட கெட்ட பெயருக்கு அவர்தான் காரணம். எந்த இடத்திலும் அவர் உங்களை முன்னிறுத்தவில்லை. குடும்ப உறவுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மத்திய அரசின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறார். எந்தநேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் எடுத்த அவசர முடிவுகளால்தான் இப்படியொரு நிலை ஏற்பட்டது' என சசிகலாவிடம் கொதித்தார் திவாகரன். தன்னை சந்திப்பதை சசிகலா தவிர்ப்பதை அறிந்து, இளவரசி மூலமாக அழுத்தம் கொடுத்தார் தினகரன். இதன்பிறகு, குடும்ப ஒற்றுமைக்காக தினகரனை சந்தித்தவர், அவருடைய செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். 'திவாகரன் சொல்வதைக் கேட்டுச் செயல்பட வேண்டும்' என்பதை ஒரு ஆலோசனையாகக் கூறியிருந்தார்.

இதன்பின்னர், சென்னை வந்த தினகரன், திவாகரனை நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பில், அடுத்துச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விவாதித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் தற்காலிக இணக்கம் ஏற்படுவதற்குக் காரணம், சசிகலா பேசிய சில வார்த்தைகள்தான். குடும்ப உறவுகளுக்கு அவர் கொடுத்த தகவலில்,  ‘உங்களுக்குள் நடக்கும் சண்டையால், எடப்பாடி பழனிசாமிக்கும் பா.ஜ.கவுக்கும்தான் லாபம். நம்மை அரசியலில் இருந்து முழுவதுமாக ஒதுக்கி வைக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஒற்றுமையாக இருந்தால், நம் அனைவருக்கும் வாழ்வு உண்டு' என உருக்கமாகக் கூறியிருக்கிறார். ‘ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியும் கட்சியில் தினகரனும் தொடரட்டும்' என்ற சசிகலாவின் அறிவுறுத்தலை, நேற்று முதல்வர் பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள்" என்றார் விரிவாக. 

திவாகரன்"ஜெயலலிதா அதிகாரத்தில் இருந்த நாள்களிலேயே, திரைமறைவு அரசியலில் கோலோச்சி வந்தார் திவாகரன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, டெல்லி தொடர்புகளில் தீவிர கவனம் செலுத்தினார். புனேவைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவரின் ஆலோசனையோடு, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் நெருங்கினார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றபோது, தனிப்பட்ட முறையில் ஆளுநரை சந்தித்தார் திவாகரன். பா.ஜ.க தலைமையோடு நெருக்கம் காட்டும் வேலைகளில் ஈடுபட்டார். இந்தநேரத்தில், மத்திய அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு பிரமுகர்கள் பேச ஆரம்பித்தனர். இதனை ரசிக்காத பா.ஜ.க நிர்வாகிகள், 'எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் நம்முடன் நெருக்கமாக உள்ளனர். திவாகரன் தரப்பினரும் நம்மிடம் பேசி வருகின்றனர். இவர் ஏன் தேவையில்லாமல் ஆட்களைத் தூண்டிவிடுகிறார்? எம்எல்ஏ-க்களை வளைக்க நினைக்கிறார்?' என சசிகலா குடும்பத்து ஆட்களில் பேசியுள்ளனர். இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்குத் தகவல் அனுப்பிய திவாகரன் தரப்பினர், 'தினகரனைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆட்சி அதிகாரத்துக்குள் எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் தலையை நீட்ட மாட்டார்கள். நல்ல நிர்வாகத்தைக் கொடுங்கள்' எனக் கூறியுள்ளனர். தற்போது தினகரனும் திவாகரனும் கைகோத்திருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அமைச்சர்கள் சிலர்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

"தினகரன்-திவாகரன்-எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவரும் கருத்து ஒற்றுமைக்கு வந்துவிட்டார்கள். தினகரனை எதிர்த்துப் பேசிய அமைச்சர்களும் மௌனநிலையில் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தையும் தங்களுடன் இணைப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 'இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு, கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும்' என்பதுதான் மன்னார்குடி உறவுகளின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் வேலையை முன்னின்று செய்கிறார் திவாகரன். 'குடியரசுத் தலைவர் தேர்தலுக்குள் இதனை செய்து முடிக்க வேண்டும்' என்பதுதான் குடும்ப உறவுகளின் வேண்டுகோளாக இருக்கிறது" என்ற தகவல்களும் அரசியல் மட்டத்தில் வலம் வருகின்றன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement