''கட்சி தொடங்குவது எப்படி..?'' ரஜினிக்குத் திருமாவளவனின் ஆலோசனை | Thirumavalavan advises Rajinikanth about political party

வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (16/06/2017)

கடைசி தொடர்பு:14:08 (17/06/2017)

''கட்சி தொடங்குவது எப்படி..?'' ரஜினிக்குத் திருமாவளவனின் ஆலோசனை

ரஜினிக்கு திருமாவளவன் ஆலோசனை

 

கட்சியைப் பலப்படுத்துவதற்காகச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அவரிடம் ரஜினியின் அரசியல் பேச்சு, மோடி அரசின் மூன்றாண்டு சாதனைகள், அ.தி.மு.க உட்கட்சி குழப்பங்கள் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

''பி.ஜே.பி-யின் மூன்று ஆண்டு ஆட்சியை பற்றிச் சொல்லுங்கள்?''

'' 'இறைச்சி வியாபாரத்தில் தனிநபர்கள், உள்ளூர்ச் சந்தைகளில் மாடுகளை வாங்கி வெட்டக்கூடாது' என்கிறார் மோடி. அதற்குக் காரணம், அந்தத் தொழிலை முஸ்லிம்களும், இந்து சமூகத்தில் தலித்களும், தாழ்த்தப்பட்டவர்களும் செய்கிறார்கள். அதை, நீங்கள் செய்யாதீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் செய்யட்டும் என்பதுதான் அவருடைய உள்நோக்கம். விவசாயத்தை இயந்திர மயமாக்கும்போது மாடு வளர்ப்பு இல்லாமல் ஆகிவிடும். அப்படி உருவாகும் சூழ்நிலையில், இறைச்சிக்காக அடிமாடு இல்லாமல் போய்விடும். கறிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக்கோழி என்று இருப்பதுபோல பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் இறைச்சிக்கு என்று தனி மாடு வரும். அந்த மாடுகளை இயந்திரம்மூலம் கொல்லும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்வார்கள். அதனால்தான் அவர்கள், 'உங்களைக் கறி திங்கவேண்டாம் என்று சொல்லவில்லையே; மாட்டை வதை செய்யாதே என்றுதானே சொல்கிறோம்' என்கிறார்கள். அப்படியென்றால், அவர்களின் வெளிப்படையான நோக்கம் என்பது கோமாதா... எங்கள் குலமாதா என்பது. அது, மக்களை ஏமாற்றும் மோசடி முழக்கம். இந்து சமூக வாக்குவங்கியை அணி திரட்டுவதற்காக அவர்கள் பயன்படுத்துவதுதான் அதன் நோக்கம். 'அந்தக் கோமாதாவை ஒரு பன்னாட்டு நிறுவனம், இயந்திரத்தின் மூலம் வெட்டினால், தோலை உரித்தால், கறியை எடுத்து வியாபாரம் செய்தால் அது தவறில்லை' என்கிறார்கள். எனவே, இதை மாட்டு  இறைச்சிக்கான தடை என்று மட்டும் பார்க்கக் கூடாது. இந்த மாட்டு வணிகம் என்கிற பெரு வணிகத்தை, மோடி ஏகபோக முதலாளிகளிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார். இவ்வளவு பெரிய சதித் திட்டத்தை உள்ளே வைத்துள்ளனர். அதனால்தான் அதை எதிர்க்கிறோம். நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது மாட்டுக்கறிப் பிரச்னையைப் பற்றி நாடு முழுவதும் பேச வைத்துவிட்டார்கள். இந்த அறிவிப்பின் மூலம் மூன்றாண்டு கால மோடி அரசின் மந்த கதி நிர்வாகம் பற்றிப் பேச முடியாமல் செய்துவிட்டார்கள்.''

'' 'உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம்வரை பி.ஜே.பி-தான் ஆட்சியதிகாரத்தில் இருக்க வேண்டும்' என்று சொல்லி வருகிறார்களே?''

''அவர்களுடைய முனைப்பைத் தவறு என்று சொல்ல முடியாது. ஜனநாயக நாட்டில் அதைச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், மத உணர்வுகளையும் சாதிய உணர்வுகளையும் சொல்லி, அதைத் தூண்டிவிட்டு வெறுப்பு அரசியலை விதைத்து மக்களிடையே மோதலை உருவாக்கி, அதில் குளிர்காய நினைக்கிறார்கள். அதைத்தான் தவறு என்று கண்டிக்கிறோம்.'' 

''பி.ஜே.பி-யை வீழ்த்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?''

''நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலையில் அவர்கள் ஜெயிக்கவில்லை. மதச் சார்பற்ற சக்திகளின் சிதறலால்தான் அவர்கள் வெற்றிபெற்றார்கள். காங்கிரஸ்தான் பி.ஜே.பி-யை எதிர்க்கும் சக்தியைப் பெற்ற கட்சி. இப்படிச் சொல்வதற்காக நான் காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்குவதாகச் சொல்லக்கூடாது. எனவே, காங்கிரஸ் கட்சியோடு இடதுசாரி ஓட்டுகள், மாநில கட்சிகளின் ஓட்டுகள் ஒன்றுசேர்ந்தால்தான் பி.ஜே.பி-யை வீழ்த்த முடியும். அதுதான் யதார்த்தம். அதை உணர வேண்டும் என்றுதான் சொல்லிக்கொண்டு வருகிறேன்.''

''சாதிய மாநாடுகள், கூட்டங்கள், கட்சிகள் தற்போது பெருகி வருகின்றனவே?''

''நேரு, காந்தி காலத்தில் தேசிய உணர்வு, விடுதலை உணர்வு என்பது மட்டும்தான் பிரதானமாக இருந்தது. தமிழகத்தில் காமராஜர் காலத்தில் ஏழை எளிய மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உணர்வு, அண்ணா காலத்தில் திராவிட உணர்வு மேலோங்கி இருந்தது. இவர்கள் எந்த இடத்திலும் சாதி, மதத்தை முன்னிறுத்தி, சாதிச் சங்கங்களைத் தட்டிக் கொடுத்து மதச் சங்கங்களைத் தட்டிக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி எங்கேயும் பேசவில்லை. ஆனால், அண்மைக் காலமாக இந்த 20 வருடங்களில் அதிலும் குறிப்பாக பா.ம.க வந்த பிறகு ஒரு சாதிச் சங்கத்தை ஆரம்பித்தால்  அரசியல் கட்சியைத் தொடங்கிவிடலாம். அதில், அரசியல் ஆதாயம் தேடலாம் என்றாகிவிட்டது. காமராஜரையும் அண்ணாவையும் அரசியல் கட்சித் தலைவர்களாக மட்டுமே பார்த்தார்கள். ஆனால், பா.ம.க வந்த பிறகுதான் அது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி எல்லாச் சாதிகளுமே நாம் ஏன் ஒரு சங்கத்தை உருவாக்கக் கூடாது... நாம் ஏன் ஒரு கட்சியை உருவாக்கக் கூடாது... ஏன் நமது சாதிப் பெருமையைப் பேசக்கூடாது என்கிற நிலை உருவானது. அதனால்தான் பெரியார் பெருமை பேசும் மண்ணில் சாதியம் மேலோங்கி வருகிறது.''

ராமதாஸ்

'' 'தமிழகத்தில் காலூன்றுவோம்' என்று பி.ஜே.பி சொல்லி வருகிறதே?''

''தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் இஸ்லாமியர்கள் வெறுப்பு என்பதை பி.ஜே.பி-யால் வெற்றிகரமாகச் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் தலித் வெறுப்பைத்தான் முன்னிறுத்த முடியும். தலித்; தலித் அல்லாவர்கள் என்பதை ராமதாஸ் வெற்றிகரமாகச் செய்கிறார். அதைப் பி.ஜே.பி இப்போது ஊக்கப்படுத்துகிறது. ஒவ்வொரு சாதியையும் உன் சாதிப் பெருமையைப் பேசு; நீ வீரமுள்ள பரம்பரை... ஆண்ட பரம்பரை என்று உசுப்பிவிடுகின்றனர். அவன், தனது சாதி ஓட்டுகளைக் கூட்டிவைத்தால் அதை அள்ளிக்கொண்டுப் போக பி.ஜே.பி தயாராக இருக்கிறது. 'சாதி ஓட்டுகளைத் திரட்டி வைத்துக்கொள்; என்னோடு கூட்டணி சேர்; உனக்கு அதிகாரத்தில் பங்கு கொடுத்துவிடுகிறேன்'. இதைத்தான் சோஷியல் இன்ஜினீயரிங் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது, எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? தலித்களுக்கும் மற்ற சாதிக்காரர்களுக்கும் இடையிலான மோதலாக மட்டும் போகாது. இது, அனைத்து இந்துக்களுக்கு இடையிலேயும் மோதலை உண்டாக்கும்.''

ரஜினி

'' 'ரஜினி தங்கள் கட்சிக்கு வர வேண்டும்' என்று பி.ஜே.பி அழைத்துக்கொண்டு இருக்கிறதே?"

''புலி வருது... புலி வருது என்று சொன்னார்கள். இந்த முறை நிஜமாகப் புலி வந்துவிடும். தனிக் கட்சி என்ற முகவரியுடன் அவரது அரசியல் பயணம் அமையுமேயானால், அது அவருக்குச் சாதகமாக இருக்கும். அவர் தன்னை வேறு யாரோடும் அடையாளப்படுத்திக்கொண்டால் அந்த அரசியல் கட்சிக்கு என்ன பிம்பம் படிந்திருக்கிறதோ, அது இவர்மீதும் படியும். சாதிய மதவாதச் சக்திகளுடன் அவர் ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பதே எங்கள் விருப்பம்.''

''முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?''

''மத்திய அரசின் தலையீட்டால் தமிழக அரசு முடங்கிக்கிடக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவே போராடிக்கொண்டு இருக்கிறார்கள். உட்கட்சிப் பிரச்னைகளால் அவர்களுக்குள்ளேயே பிரிந்து மோதலை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே சமரசம் ஆகி கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றினால் நல்லது.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்