Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐந்து கோடி ரூபாய் நிலம் ஆக்ரமிப்பு..! நித்தியானந்தாவுக்கே கதவைச் சாத்திய தோழர்கள்

நித்தியானந்தா

ஆக்கிரமிப்பு புகார்களுக்கு அரசியல்வாதிகள், பெரும்பணக்காரர்கள் ஆளானதெல்லாம் பழைய கதை. ஆன்மீகவாதிகள் மீது புகார் எழும்புவதுதான் இன்றைய ட்ரெண்ட். கோவையில் வனப்பகுதியை ஆக்ரமிப்பு செய்து கோவில் எழுப்பியிருப்பதாக ஜக்கி வாசுதேவ் மீது புகார் எழுந்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் திருவண்ணாமலையில் சரச்சை சாமியார் நித்தியானந்தா 5 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்ரமிப்பு செய்திருப்பதாக புகார் கிளம்பியுள்ளது இப்போது. மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டத்தினால் நித்தியானந்தாவின் அபகரிப்பு முயற்சி அரைகுறையாக இப்போது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கலைப்பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளரான கருப்பு கருணாவிடம் பேசினோம்.

“திருவண்ணாமலை பாரம்பர்யம்  மிக்க நகரம். இங்கு அண்ணாமலையார் மலையின் கிழக்கே அடிவாரத்திற்கும் குன்றுக்கும் மத்தியில் பவழக்குன்று மலைஉள்ளது. மலைப்பொரம்போக்கான இங்கு சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. கடந்த 7 வருடங்களுக்கு முன் நித்தியானந்தா சாமியார் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அங்கு ஆசிரமம் அமைக்க இரவோடு இரவாக பாறைகளை உடைத்து கீற்றுக்குடிசைகளை போட்டார். விஷயம் அறிந்து உள்ளுர் மார்க்சிஸ்ட் கட்சியைச்சேர்ந்த நாங்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு காவல்துறையிடமும் புகார் அளித்தோம். இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து நித்தியானந்தா தரப்பினரை விரட்டியது காவல்துறை.

நித்தியானந்தர்

ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் கடந்த 3ந்தேதி பவழக்குன்று மலைப்பகுதியில் மீண்டும் நித்தியானந்தா தரப்பு ராயர் கிருஷ்ணமூர்த்தி என்ற உள்ளுர் தொழிலதிபர் ஒருவரின்  துணையுடன்ஆசிரமம் கட்ட பூமி பூஜை நடத்தி அங்கு மூன்று வெண்கல சிலைகளையும் வைத்து பூஜைகளும் நடத்தியுள்ளனர். இதில் நித்தியானந்தாவும் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. ஒரே இரவில் அங்கு கீற்றுக் குடிசைகளை எழுப்பியதோடு அந்தப்பகுதி முழுவதும் வேலியை அமைத்து ஆக்கிரமித்துக்கொண்டனர் சீடர்கள் என்ற பெயரில் வந்த சமூக விரோதிகள்.

 

தகவல் தெரியவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் வீரபத்ரன், மாவட்ட செயலாளர் சிவகுமார் மற்றும் நான் உள்ளிட்ட பலரும் மக்களை திரட்டி காவல்துறையில் புகார் அளித்ததோடு, “அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நித்தியானந்தாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தோம். அவர் உடனே தாசில்தாரை அழைத்து விசாரிக்க சொன்னபோது, நித்தியானந்தா தரப்பினருக்கு ஆதரவாகவே தாசில்தார் நடந்துகொண்டார்.

பட்டவர்த்தனமாக ஆக்ரமிப்புக்குற்றம் நடந்துள்ளது. ஆனால்  தாசில்தார், 'மலை பொரம்போக்கின்கீழ்வரும் அந்தப்பகுதியை நித்தியானந்தாவுக்கு லீசுக்கு விட்டிருப்பதாக' கலெக்டரிடம் பொய் சொன்னார். அதோடு நிற்காமல், 'ஏற்கெனவே இருதரப்புக்கும் தகராறு இருப்பதால் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரலாம்' என்று சொல்லி அதிர்ச்சி தந்தார். இப்படி அதிகாரிகளையும் உள்ளுர் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டதால்தான் அரசு நிலத்தை ஆக்ரமிப்பு செய்யும் தைரியம் நித்தியானந்தாவுக்கு வந்தது.” என்றார்.
கருப்பு கருணா

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு சாமானியன்  மீது ஆக்கிரமிப்பு புகார் எழுந்தால் வருவாய்த்துறை பெரும் படைபரிவாரங்களோடு அதை அகற்றச் செல்லும். ஆனால் இத்தனை பெரிய ஆக்ரமிப்பை அகற்ற சென்றது, அந்த தாசில்தார் மட்டுமே. போனவர்  கொஞ்சநேரத்தில் திரும்பவந்து “கலெக்டரிடம் மனு கொடுக்க இருப்பதால் ஆக்கிரமிப்பை விலக்கிக்கொள்ள அவகாசம் கேட்டிருப்பதாகக்” கூறி புகாரை கிடப்பில் போட்டுவிட்டார். அதன்பின் தொடர்ந்து நாங்கள் கலெக்டரிடம் சென்று வலியுறுத்தியதோடு “இன்று 16/6/2017) பகல் 12 மணிக்குள் நடவடிக்கை எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1000 பேரை திரட்டி அதே பவழக்குன்று மலையில் குடிசைகள் போட்டு குடியேறும் போராட்டத்தை நடத்துவோம்” என தெரிவித்தோம். அதன்பின்னரே நடவடிக்கை துரிதமானது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆர்.டி ஓ உமாமகேஸ்வரி தலைமையில் சென்ற வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். அப்போது நித்தியானந்தா சீடர்கள் என்ற பெயரில் இருந்த சிலர் அவர்களைத் தாக்க முனைந்ததோடு பெண் சீடர்களை அங்கு வரவழைத்து பிரச்னையை திசைமாற்ற முயன்றனர்.

அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்ததோடு குடிசைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு இ.ப்போது அரசுக்கு சொந்தமான இடம் என பலகை மாட்டியிருக்கின்றனர். பண பலத்தையும் உள்ளுரில் சில அதிகார மையங்களை கைக்குள் போட்டும் நித்தியானந்தா தொடர்ந்து திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை செய்துவருகிறார். ஏற்கனவே கிரிவலப்பாதையில் ஆக்ரமிப்பு செய்து கோவில் கட்டியதாக போடப்பட்ட வழக்கில் தடையாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் சட்டத்தைப்பற்றியும் துளியும் பொருட்படுத்ததாமல் துணிச்சலாக மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றிருக்கும் நித்தியானந்தாவை நில அபகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் குண்டர்சட்டத்தில் கைது செய்யவேண்டும்.” என்றார் கருப்பு கருணா.

கதவைத்திறந்தால் காற்று வருவது அப்புறம் இருக்கட்டும்; மனதைத் திறந்து கொஞ்சம் நேர்மையாக நடந்துகொண்டால் என்ன நித்தியானந்தரே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement