Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மோடி சாமி, எங்க அக்கவுன்ட்ல எப்பம் பணம் போடுவீங்க'- கலங்கும் பழமலை மக்கள்

'பிரதமர் மோடி தேர்தல் நேரத்துல ஒவ்வொருத்தர் வங்கி கணக்குலயும் அஞ்சுலட்சம் ரூபாய் போடுறாருனு சொன்னதவச்சு அக்கவுன்ட் ஓப்பன் பண்ணினோம், இன்னும் பணம் வரல. அத நம்பி கடன் வாங்கிப்புட்டோம். வட்டி கட்டமுடியல, அந்த பணம் வந்தா தொழிலுக்கு கொஞ்சம் உதவியாயிருக்கும். அந்த பணம் எப்ப வரும் சாமி. உங்களுக்கு ஏதாவது தெரியுமா', என நம்மிடம் கேட்டனர் பழமலை கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பழமலை ஐ.ஏ.ஸ் இருந்தபோது பட்டியல் இனத்தவர்களுக்காக வாணியங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் இடம் ஒதுக்கி கொடுத்தார். இதனால் அந்த இடத்துக்கு 'பழமலை' நகர் என பெயர் சூட்டி விசுவாசத்தை காட்டி வாழ்ந்து வருகிறார்கள் அந்த பகுதி மக்கள். பழமலை நகருக்குள் நுழைந்ததும் வேலையில்லாமல் ஒரு கூட்டம் தாயம், சீட்டு என விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதே வேளையில் இன்னொரு கூட்டம், இறைவன்விட்ட விதிக்கு கட்டுப்பட்டுதானே ஆகணும்ங்கிற மாதிரி, வயதான நிலையிலும் வயித்துக்கு கால் கஞ்சியாச்சும் குடிக்க இந்த பாசி ஊசிமணியை கோர்த்தால்தான் உண்டு என்று வேலை செய்துகொண்டு இருந்தனர். சிவகங்கை 4வது வார்டு கவுன்சிலர் சௌந்தரராசு, தேவியிடம் பேசினோம்.

''வேட்டைக்கு இரவு நேரத்தில காட்டுக்குள் போய் முயல், காடை பிடிச்சுட்டு வந்து ஓட்டல்கள்ல கொடுப்போம். இப்ப காட்டுக்குள் போனால் போலீஸ் தொந்தரவு. அபராதம் போடுறாங்க. எங்களுக்கு கிடைக்கிற நூறு இருநூறுக்கு இவ்வளவு பணத்தை நாங்க கட்டமுடியல. அதான் எங்ககிட்ட இருக்கிற துப்பாக்கியெல்லாத்தையும் போலீஸ் ஸ்டேசன்ல கொண்டுபோய் வீசிட்டுவந்துட்டோம். திருவிழா நேரத்தில் பாசி ஊசி மணி, பலூன்னு வித்து வயித்த கழுவுறோம். ஆனாலும், இன்றைக்கு இருக்கிற விலைவாசிக்கு வாழ முடியல. எவ்வளவுதான் கடன் வாங்குறது. வட்டி கட்ட முடியல. அரசாங்கமும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரமாட்டீங்குது. யாருமே உதவிசெய்ய முன்வரல. பேங்க் பக்கம் போனா, எங்கள ஏற இறங்க பாக்குறாங்க. விஜய்மல்லையா மாதிரி ஆளுக்கு வீட்டுக்கே போய் கடன்கொடுப்பாங்க. எங்களுக்கு கொடுப்பாங்களா. ஆனா, நாங்க வாங்குன பணத்தை நாணயமா திருப்பி கொடுத்துடுவோம். நம்ம நாட்டு பிரதமர் மோடி பேங்க் அக்கவுன்ட்ல ஐம்பதாயிரம் போடுறாருன்னு சொன்னாங்க. எப்படி போடுவாருனு தெரியல.

அதநம்பி எங்க ஆளுங்க  நிறைய பேர் வாங்கின கடன அடைக்கமுடியாம தினமும் சாகுறமாதிரி இருக்கு. புதுசா கல்யாணம் ஆனவுங்க நூறு குடும்பங்களுக்குமேல இருக்காங்க. அவுங்களுக்கு தனி வீடு இல்ல. ஒரே வீட்டுக்குள்ள மூணு குடும்பம் இருக்காங்க. ஜெயலலிதா அம்மா இருந்திருந்தா எங்களுக்கு நிறைய வசதி கிடைச்சுருக்கும். நான் அ.தி.மு.க சார்பிலதான் போட்டியிட்டு கவுன்சிலரா ஜெயிச்சேன். அரசாங்கம் உத்தரவு வந்தும் வீடு கட்டமுடியாமல் பணத்துக்கு கஷ்டப்படுறாங்க. தேர்தல் நேரத்துல மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தி ஐந்து லட்சம் தந்தாருனா கோடி புண்ணியமா போயிடும். அடுத்து அவருக்குதான் நாங்க எல்லாரும் ஓட்டுபோடுவோம். நீங்க சொன்னது நம்பி மோசம் போனதுதான் மிச்சமாக இருக்கு. எம்ஜிஆர் காலத்துல கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகள் பாழடைஞ்சு இடிந்து போனதுல ஒரு குடும்மே பலியாகிவிட்டது. அதன் பிறகு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் ஓடிவந்து உதவி செய்திருக்கிறார்கள். அப்படி செய்த உதவியால் இன்றைக்கு 142 வீடுகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் வீடு கட்டுவதற்கு கையில் பணமில்லாமல் கட்டமுடியாமல் பலபேர் இருக்கிறோம்', என்கின்றனர் வேதனையுடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement