Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இந்த நிலையில் ஏன் இவ்வளவு தடுமாற்றம் திருமாவளவன்?!’ - கேள்வியெழுப்பும் சீமான் #VikatanExclusive

சீமான்

டிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்து, விடுதைலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துக்கு எதிராகக் கொதிக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். 'தி.மு.க கைவிட்டதால்தான், ரஜினிகாந்தை நோக்கி நகர்கிறார் திருமா. தனித்தன்மையை இழக்காமல் அரசியல் செய்வதில் அவர் தோல்வியடைந்துவிட்டார்' என்கிறார் சீமான். 

'கருணாநிதி, ஜெயலலிதாவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்' என்ற கருத்தை அரசியல் தளத்தில் முன்வைத்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். இந்தக் கருத்துக்கு எதிராக தொலைக்காட்சி விவாதங்களில் பொங்கிக் கொண்டிருக்கின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள். 'சாதியை முன்வைத்து பா.ஜ.க பாணியில் அரசியல் செய்கிறார் சீமான். தமிழரைத் தவிர, அனைவரும் இந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என நினைக்கிறார். 'அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்' என்பதுதான் திருமாவளவனின் நோக்கம்' என எதிர்க் கருத்தை முன்வைக்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள். 

'திருமாவளவனின் நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டோம். "எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்வது மிக முக்கியமான ஒன்று. சில நாள்களுக்கு முன்பு திருமாவளவன் பேசும்போது, 'தமிழ்நாட்டின் மானத்தையே ஸ்டாலின்தான் காப்பாற்ற வேண்டும்' என்றார். இப்போது, 'ஸ்டாலினுக்குத் தகுதி குறைவு' என்கிறார். அரசியலில் மாறிப் மாறிப் பேசுவது என்பது சரியானதல்ல. கடந்த சில நாள்களாக, தி.மு.க அவரைக் கண்டு கொள்வதில்லை. கருணாநிதியின் வைரவிழா நிகழ்வுக்கும் அவரை அழைக்கவில்லை. இதற்கு மாற்றாக, அ.தி.மு.கவுடன் அவரால் அணி சேர முடியாது. ஒருவேளை, அங்கு போனாலும் எந்த அணியோடு சேருவது என்ற குழப்பம்தான் நீடிக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான், 'ரஜினி வந்தால் அவருடன் இணைந்து பணியாற்றலாம்' என நினைக்கிறார் திருமாவளவன். இது எவ்வளவு பெரிய ஆபத்து? ஒருவேளை ரஜினி கட்சி தொடங்கவில்லையென்றால், திருமாவளவனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ரஜினி கட்சி தொடங்கினாலும், ஆடிட்டர் குருமுர்த்தி சொல்வதைத்தான் கேட்பார். திருமாவளவனை சேர்த்துக் கொள்வதைக் குருமூர்த்தி விரும்புவாரா?" எனத் தகித்தவர்,

"நடிகர் ரஜினியை ஆதரிப்பது குறித்துப் பேசும் வி.சி.க நிர்வாகிகள், 'ரஜினி வந்தால்தான், சாதி ஒழியும்' என்கிறார்கள். இதைவிட, வேடிக்கை எதுவும் இருக்க முடியாது. சாதியை ஒழிக்க, ரஜினியிடம் மந்திரக்கோலா இருக்கிறது? கருணாநிதி இருந்தவரையில் திருமாவளவனை பக்கத்திலேயே வைத்திருந்தார். பத்தாண்டு காலம் அவர் தி.மு.க அணியில் இருந்தார். ஈழப் படுகொலை நடந்தபோது, கருணாநிதிக்குத் திருமாவளவன் தேவைப்பட்டார். கருணாநிதியின் வைரவிழா நிகழ்வுக்கு ஸ்டாலின் அழைக்கவில்லையென்றாலும், 'அழைக்காவிட்டால் எங்களுக்கென்ன?' எனக் கடந்து சென்றிருக்க வேண்டும். 'என்னை அழைக்கவில்லை' என்பதை ஏன் தொடர்ந்து பேச வேண்டும்? நாங்கள் ஜாதியை முன்வைப்பதாகப் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நாம் தமிழர் என்ற உணர்வை எனக்குச் சொல்லிக் கொடுத்ததே திருமாவளவனும் ராமதாஸும்தான். இவர்கள் ஏன் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கினார்கள்? எழுச்சித் தமிழர் என்று திருமாவளவன் போட்டுக் கொள்கிறார்.

திருமாவளவன்

நாம் தமிழர் என்று சொல்வதே தவறு என்றால், ராமசாமி என்கின்ற அவரது தந்தை பெயரை ஏன் தொல்காப்பியன் என மாற்றினார்? பாலில் கலப்படம், அரிசியில் கலப்படம் வந்துவிட்டதைப் போல, என் மொழியில் கலப்படம் வந்துவிடக் கூடாது என்றுதான் கவலைப்படுகிறேன். தமிழ்நாட்டில் 42 தனித்தொகுதிகள் இருக்கின்றன. இந்தத் தொகுதிகளில் அட்டவணைப் பிரிவு மக்களை நிறுத்தியதுபோக, கூடுதலாக 20 பொதுத் தொகுதிகளை அந்த மக்களுக்கு வழங்கினேன். இதற்கு அவரிடமிருந்து ஒரு வாழ்த்துகூட வரவில்லை. வன்னியர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் அட்டவணை சமூகத்து மக்களுக்கு சீட் கொடுத்தேன். யாராவது துணி வெளுக்கும் ஆதிக் குடிகளுக்குச் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்களா? நான் வழங்கினேன். இதை நான் சொல்லிக் காட்ட விரும்பவில்லை. சாதியும் மதமும் சதையை வெட்டிப் பிளக்கும். ஒருபோதும் இணைக்காது. இதை ஒன்றாக இணைக்க மொழி உணர்வு என்ற ஊசியும் நூலும் தேவைப்படுகிறது. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். 

அரசியல் திருமாவளவனைக் கைவிட்டுவிட்டது. 'ரஜினி பா.ஜ.கவின் ஆள்' என்பதும் 'அவரை இயக்குவது பா.ஜ.கதான்' என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் அரசியலுக்கு வந்தவுடன் பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பார். அப்போது இவர் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்? வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றால், இங்கே என்ன படுகுழியா திறந்து கிடக்கிறது? கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது அரசியல் களத்தில் இறங்கி, ரஜினி சண்டை போட்டிருக்க வேண்டும்? இப்போது யாருமே இல்லை, களத்தில் நானும் கம்பை வீசுகிறேன் என்பவர் எப்படி வீரனாக இருக்க முடியும்? ரஜினி அரசியலுக்கு வருவது என்பது வாழவைத்த தமிழ் மக்களுக்குச் செய்யக் கூடிய பச்சைத் துரோகம். நமது மண்ணைப் பற்றி அவருக்கு என்ன புரிதல் இருக்கிறது? அவருக்கு ஆதரவாக மதிப்புமிக்க திருமாவளவன் பேசுவதுதான் வேதனையாக இருக்கிறது.

தமிழர் என்று சொல்வது சாதியவாதம் என்றால், மேடைகளில் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள். மாநிலம் முழுவதும் ஓடோடிச் சென்று தொண்டர்களுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தார் திருமாவளவன். அது தூய இனவாதம் இல்லையா? கடந்த காலத்தில் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த திருமாவளவன், 'கலப்படமில்லாத ஒரு தமிழன் கையில் இந்த அதிகாரம் வரும்போதுதான் அனைத்தும் சாத்தியமாகும்' என்கிறார். சாதி, மத உணர்ச்சி சாகும்போதுதான் தமிழன் என்ற உணர்வு பெருகும். இதை அறியாமல், 'நாங்கள் சாதியை முன்வைக்கிறோம்' என்றால், நீங்கள் செய்வது என்ன அரசியல்? நான் தனித்துப் பயணிக்கிறேன். நீங்கள் ஒட்டுச் செடி போல இன்னொருவர் நிழலில் நிற்கிறீர்கள். ஸ்டாலின் என்னை அழைக்கவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. என்னை அழைக்க மாட்டார்கள் என்பதே எனக்குப் பெருமையான ஒன்று. எதிரியைத் தீர்மானித்துவிட்டு நான் அரசியல் செய்கிறேன். உங்களுக்குள் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?" எனக் கொதிப்போடு பேசி முடித்தார் சீமான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement