சிகிச்சை, பரோல்... அமைச்சரிடம் பேரறிவாளனின் தாயார் வேண்டுகோள்! | Perarivalan's Mother requests Minister to change the prison

வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (17/06/2017)

கடைசி தொடர்பு:12:48 (17/06/2017)

சிகிச்சை, பரோல்... அமைச்சரிடம் பேரறிவாளனின் தாயார் வேண்டுகோள்!

வேலூர் சிறையிலிருக்கும் பேரறிவாளனை மருத்துவ சிகிச்சைக்காக புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள், அமைச்சர் கே.சி.வீரமணியை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்துள்ளார்.   

அற்புதம்மாள்

1991 மே 21ஆம் தேதி சென்னையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுவதால் அவர் சென்னைக்குச் சிகிச்சைக்காக அவ்வப்போது அழைத்து வரப்படுகிறார்.

இந்நிலையில் பேரறிவாளனை புழல் சிறைக்கு மாற்றுமாறு அவரது தாயார் அற்புதம்மாள், அமைச்சர் கே.சி.வீரமணியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது வேலூர் சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்குச் சிகிச்சையளிக்க அங்கு வசதி இல்லை என மறுக்கப்பட்ட நிலையில்,  அவர் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார். இதனால் அவரது உடல்நிலையைக்  கருத்தில் கொண்டு, சென்னை புழல் சிறைக்கு மாற்றி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும் என அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் அற்புதம்மாள். மேலும், பேரறிவாளனின் பரோல் மனுவையும் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.