வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (17/06/2017)

கடைசி தொடர்பு:16:20 (17/06/2017)

’அப்பா’வை விமர்சிப்பவர்களுக்கு ’அப்பா’வாக இருப்பதன் சவால் தெரியுமா?! #FathersDay

உறவு

ப்பா... இந்த வார்த்தைக்குக் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் கண்டிப்பே அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். ஆனால், அது பிள்ளைகளின் பார்வையே! உண்மையில் அவர் மனசு என்ன?! பிள்ளைகளின் பார்வையில் தங்களின் ஒவ்வொரு வயதிலும் அப்பா தங்களுக்கு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைச் சொல்லும் குட்டிக்கதை ஒன்று உண்டு!

5 வயது - ‘என் சூப்பர் ஹீரோ!’
10 வயது - 'வீட்டில கொஞ்சம் கத்துவார்... மத்தபடி நல்லவர்தான்!'
15 வயது - ‘எப்போ பார்த்தாலும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கார்... சொல்லிவைம்மா அவர்கிட்ட!’
20 வயது - ‘எப்படிம்மா இப்படி ஒரு ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!'
30 வயது - ‘நான் என்ன பண்ணினாலும் குறைசொல்லிக்கிட்டே இருக்கார். இதனாலேயே அவர்கிட்ட நான் பேசுறதைக் குறைச்சுட்டேன்!’
40 வயது - ‘அடிக்கடி கத்துவார்... ஆனா, அடிப்படையில ரொம்ப நல்லவர்!’
50 வயதில் - ‘அந்தக் காலத்தில எங்க குடும்பம் இருந்த நிலைமையில, தன் உழைப்பால எங்களையெல்லாம் கரை சேர்த்திருக்கார். அந்த மனுஷன்தான் எங்களுக்கு எப்பவும் சூப்பர் ஹீரோ!'

தன் அப்பா நல்லவர் என்று நம்பும் குழந்தை, மீண்டும் அந்த மனநிலைக்கு வர 45 வருடகால வாழ்க்கையும் அனுபவமும் தேவைப்படுகின்றன. எல்லா கலை வடிவங்களும் அம்மாவின் அன்பையே கொண்டாடுவதாலோ என்னவோ, பலருக்கும் அப்பாவின் அன்பைப் புரிந்துகொள்ளும் காலம் தாமதமாகவே கனிகிறது; 45 வருடங்கள் எடுத்துக்கொள்கிறோம்!

அப்பா மகள் உறவு

உளவியல் கூறும் ‘ஹீரோ அப்பா' எப்படி இருப்பார்? 'தன் பிள்ளைகளிடம் பொய் பேசாத, தன் கஷ்டங்களை வெளிக்காட்டாத, பிரச்னைகளை நேருக்கு நேர் எதிர்த்து நின்று நேர்த்தியாகச் சமாளிப்பார்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆல்-டைம் ஹீரோக்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அப்பாவைப் பார்த்து வளரும் குழந்தை, இந்தச் சமூகத்தைப் புத்திக்கூர்மை மற்றும் மனக்கூர்மையுடன் சந்திக்கும்' என்கிறார் மைக்கேல் ஆஸ்டின் என்ற தத்துவப் பேராசிரியர்.

மகள்களைப் பெற்ற அப்பாக்கள், இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் மகன்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையிலான பிணைப்பைவிட, மகள்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையிலான பிணைப்பு அழகானது, அடர்த்தியானது. அதிலும் சென்ற தலைமுறையைவிட, இந்தத் தலைமுறை அப்பா, மகள் உறவில் சுதந்திரம் அதிகம் சேர்ந்திருக்கிறது. நம் அம்மா - தாத்தாவைப் போல பொத்திவைத்த பாசமாக இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் தங்கள் நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக, டீன் ஏஜ் பெண்களுக்கு அந்த 'கூல் டாடி கூல் பேபி' அணுகுமுறை, அப்பாவை தங்களுக்கு நெருக்கமான முதல் மனிதராக்கியிருக்கிறது. ஒரு பிரச்னை எனில் 'அப்பா திட்டுவாரே' என்ற பயத்தைவிட 'அப்பா இருக்கார்' என்ற தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. எந்த விஷயத்திலும் ஒரு பாலினத்தவருக்கு மற்றொரு பாலினத்தைச் சேர்ந்தவரின் பார்வையும், யோசனையும் தெரியவரும்போது அதில் ஒரு தெளிவு கிடைக்கும், அதைப் புரிந்துகொள்ளுதல் எளிதாகும். அப்படி சகல விஷயங்களையும் கலந்துரையாடும் எதிர்பாலினத்தவராக தன் அப்பாவே இந்தப் பெண்களுக்குக் கிடைத்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்?!

ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களின் இறகுச்சூட்டில் பாதுகாப்பாக வளர்ந்துவிடுகிறார்கள். ஆனால், அந்த அரவணைப்பையும் அக்கறையையும் தரும் அப்பாவாக இருப்பது எவ்வளவு சவாலானது தெரியுமா? 'நம் நடவடிக்கைகளைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், நம் விருப்பு, வெறுப்புகளைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், நம் கோபத்தைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், இந்தச் சமுதாயம் நம்மை எப்படி எதிர்நோக்குகிறது என்பதைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், நாம் வீட்டுக்குக் கொண்டு வரும் வருமானம் என்ன என்பதைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள்' - இப்படி தங்கள் பிள்ளைகளுக்குத் தங்களை முடிந்தவரை நேர்மையான, நேசமான, வெற்றியாளரான அப்பாவாகக் காட்டுவதற்கான, நிரூபிப்பதற்கான முனைப்பே அவர்களுக்கு வாழ்க்கையாகிறது. அந்தச் சவாலை விரும்பி ஏற்கும் ஏணிகள் அவர்கள்.

இந்தத் தந்தையர் தினத்தில் அப்பாவுக்குச் சொல்லுங்கள் அன்பு வாழ்த்துகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்