வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (17/06/2017)

கடைசி தொடர்பு:13:44 (17/06/2017)

விரட்டும் பொதுமக்கள்... மிரட்டும் அதிகாரிகள்...! - மிரளும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள்

மதுபானக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஊழியர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். 'மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். பல இடங்களில் கடைகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர் நெருக்குதலைக் கண்டித்து, மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம்', எனக் கொதிக்கின்றனர் மாற்றுத் திறனாளி ஊழியர்கள். 

டாஸ்மாக்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை பொதுமக்களே அடித்து நொறுக்குகின்றனர். குறிப்பாக, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். பள்ளி மாணவர்களைக் கடைக்கு முன் அமர வைப்பது, டாஸ்மாக் கடைக்கு முன்பாக சமைத்து சாப்பிடுவது என மதுவுக்கு எதிராக நூதன போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஊழியர்கள். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தைச் சேர்ந்த நம்பிராஜனிடம் பேசினோம். 'தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் 600 மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், இவர்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டால், புதிய கடைகளை திறக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள். 'அதற்கான வாய்ப்புகள் இல்லை. அரசின் வேறு துறைகளில் எங்களுக்கு பணி வழங்குங்கள்' எனப் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். இதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மத்தியில், புதிதாகக் கடைகள் திறந்தால், அந்தக் கடையையும் பொதுமக்கள் அடித்து நொறுக்குகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். 

தற்போது, டாஸ்மாக் கடைகளில் உள்ள மாற்றுத்திறனாளி ஊழியர்கள் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் ஆகிய பணிகளைப் பார்த்து வருகின்றனர். இதில் மேற்பார்வையாளருக்கு எட்டாயிரம் ரூபாயும், விற்பனையாளருக்கு ஐந்தாயிரத்து 600 ரூபாயும், உதவி விற்பனையாளருக்கு மூன்றாயிரத்து 600 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகின்றன. தொடர்ந்து 14 ஆண்டுகளாக பணிபுரியும் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல், இன்னும் தொகுப்பூதியத்தின் அடிப்படையில்தான் வேலை செய்து வருகின்றனர். 2008 ஆம் ஆண்டு அரசாணை 151-ன் கீழ், இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எந்தப் பதிலும் இல்லை.

மாற்று

எனவே, இதனைக் கண்டித்து வரும் 27 ஆம் தேதி முதல், சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்', என்றார் கொதிப்புடன். 

'மக்களின் எதிர்ப்புக்கும் அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கும் இடையில் சிக்கிகொண்டு தவிக்கும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கவேண்டிய கட்டாயம் அரசாங்கத்திடமே உள்ளது. வரும் நாட்களில் மாற்றுத்திறனாளி மாநில ஆணையரகம் இதில் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்பதே மாற்றுத்திறனாளி ஊழியர்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது.