வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (18/06/2017)

கடைசி தொடர்பு:13:46 (18/06/2017)

மதுக்கடைகள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வருத்தமளிக்கிறது” மதுவுக்கு எதிரான போராளி நந்தினி!

மதுக்கடை

மிழகம் முழுவதும் மதுக் கடைகளுக்கு எதிராகப் பெரும் எதிர்ப்புக் கிளம்பிவரும் நிலையில், அரசோ அதைப்பற்றித் துளியும் கண்டுகொள்வதாக இல்லை. ஆனாலும், மதுவுக்கு எதிரான போராட்டம் நாளுக்குநாள் தமிழகமெங்கும் தீவிரமடைந்து வருகிறது. இதற்கான களத்தில் ஆண்களைவிடப் பெண்களே அதிக அளவில் தீவிரமாய்ப் போராடி வருகின்றனர். வெறும் போராட்டத்துடன் அவர்கள் நிற்காமல் புதிதாகத் திறக்கப்படும் கடைகளை உடைத்து நொறுக்குவதுமாய், மதுப்பாட்டில்களை உடைப்பதுமாய் இருக்கிறார்கள். இதில், காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளான சில பெண்களும் உண்டு. குறிப்பாகக் கடந்த ஏப்ரல் மாதம், திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நடந்த மதுக்கடைக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணை ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுதொடர்பாகக் கண்டனக் குரல்களும் எழுந்தன. இதையடுத்து, 'தாக்குதல் நடத்திய அதிகாரிமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அரசு அறிவித்தது. ஆனால், நாள்கள் பல கடந்த நிலையில், தற்போது அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி நியமனம் செய்திருக்கிறது அரசு. இது ஒருபுறமிருக்க... மறுபுறம், இப்படி மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள்மீது தொடர்ந்து காவல் துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவில் உள்ள தடாபெரும்பாக்கம் கிராமத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி அருகில் மதுக்கடை ஒன்று அமைந்துள்ளது. அதை மூட உத்தரவிட வேண்டும். மேலும், பஞ்சாயத்து கிராம சபை மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்' என அவர் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற முதல் அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அதைத் தள்ளுபடி செய்தனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜரானபோது, ''தடாபெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடை சட்ட விதிகளுக்குட்பட்டே அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டங்கள் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மூலம் எந்த வகையிலும் சில்லரை மதுபானக் கடைகளைக் கட்டுப்படுத்த முடியாது'' என்றார்.

எனவே, இதை விசாரித்த முதல் அமர்வு, ''மதுக் கடைகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட கிராம சபை தீர்மானம் செல்லாது எனவும், உச்ச நீதிமன்றம் அளித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு மதுகடைகளைத் திறக்கலாம்'' என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

இதுகுறித்து மதுவிலக்குப் போராளியான நந்தினியிடம் பேசினோம். ''மதுக் கடைகள் திறப்பது என்பது சட்டத்துக்குப் புறம்பான செயல். நந்தினி கொள்கை முடிவு என்ற பெயரில், அரசு மக்களுக்குச் சட்டத்துக்குப் புறம்பாகத் துரோகம் செய்கிறது. சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறை, மதுக்கடைகளை அழிக்க முடியாமல்... அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மது நிறுவன உரிமையாளர்களுக்கும் உறுதுணையாக இருப்பதுபோல் நடந்துகொள்கிறது. மதுவால், உடலில் இருந்து உயிர்வரை அனைத்தும் பலியாகிறது. மது அருந்துபவர்களுக்கு அதுதான் அவர்களுக்கான விஷம் என்பது தெரிவதில்லை. இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள். அந்தக் கொடுமை இங்கு அரங்கேற முக்கியக் காரணம், மது. குடிபோதையில் மதிமயங்கி மூன்று வயது குழந்தை முதல் எழுபது வயது மூதாட்டிவரை அனைவரையும் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பலி கொடுக்கிறார்கள். இன்றைய நிலையில், மேலும் ஒரு மதுபானக் கடைக்கு அனுமதி அளிப்பது என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இன்று தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மதுக் கடைகளை அடித்து நொறுக்கும் காட்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதிராகச் சட்டவிரோதமாக அரசு செயல்படும்போது போராடித் தீர்வு கிடைக்காத நிலையில், மக்கள் அவர்களின் கடைசி ஆயுதத்தைக் கையில் ஏந்தியுள்ளனர். அரசு இதை நியாயபடுத்தும் வகையில் கூறுவது என்னவென்றால், மதுக் கடைகளில் இருந்து அரசுக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்கிறது. ஆனால், அது அல்ல உண்மை. அரசுக்கு வெறும் 25 சதவிகிதம் அளவே வருமானம் கிடைக்கிறது. மீதமுள்ள 75 சதவிகிதம், சசிகலா போன்றோரின் மிடாஸ் கம்பெனிகளைச் சென்றடைகிறது. இதனால்தான் மதுக்கடைகளை மூட மறுக்கிறது அரசு'' என்றார் மிகத் தெளிவாக. மேலும், அவர் "தனிமனிதர்களுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளாட்சி அமைப்புகள் தான். அதுதான் ஜனநாயகத்துக்கு அஸ்த்திவாரமும் கூட... அண்மைய நீதிமன்ற தீர்ப்பு அதிகாரத்தை பிடுங்குவதாகவும், அஸ்த்திவாரத்தை குலைப்பதாகவும் இருப்பது வருத்தமளிக்கிறது."
 
மதுக்கடைகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் மக்களுக்கு இல்லையா?

-ம.நிவேதா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்