இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல்... 30 நொடி விளம்பரத்துக்கு 1 கோடி ரூபாய் 

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் நாளை மோதுகின்றன. பொதுவாக, கிரிக்கெட் அரங்கில் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.  இந்த இரு அணிகளும் குரூப் சுற்றில் மோதும்போதே விளம்பர வருமானம் கன்னாபின்னாவென எகிறியது. ஃபைனலில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்றால் சும்மா? டிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரத்துக்கான கட்டணம் வழக்கத்தைவிட பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் நாளை நடக்கும் ஃபைனலின்போது ஒளிபரப்பாகும் 30 விநாடி விளம்பரத்துக்கு, 1 கோடி ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, அதிகம் பார்க்கப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கு வசூலிக்கப்படும் விளம்பரக்கட்டணத்தைவிட பத்து மடங்கு அதிகம். 

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் விளம்பர பார்ட்னராக உள்ள நிசான் மோட்டார், இன்டெல் கார்ப், எமிரேட்ஸ்,  Oppo, எம்.ஆர்.எஃப் நிறுவனங்கள் முன்கூட்டியே விளம்பரத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. மேட்ச் ஆரம்பிப்பதில் இருந்து போட்டி முடிந்து மேட்ச் அனலிஸஸ் வரையிலான ஒளிபரப்பு நேரத்துக்கான விளம்பரங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இன்னும் 10 சதவீதம் மட்டுமே மீதமுள்ளன. இதில் இடம்பிடிக்க வேண்டுமெனில் ஏற்கெனவே முன்பதிவு செய்த நிறுவனங்களைவிட அதிக தொகை செலுத்த வேண்டும். நிலைமை இப்படி இருந்தாலும், எப்படியாவது இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சின்போது ஒளிபரப்பாகும் விளம்பர நிறுவனங்களின் பட்டியலில் தங்கள் நிறுவனமும் இடம்பிடித்துவிட வேண்டும் என, நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.  

இதெல்லாம் ஓவராக இல்லையா என்றால், ‘இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்னா சும்மாவா... குரூப் மேட்ச்சுக்கே அவ்வளவு கிராக்கி. இது ஃபைனல் வேற...’’ என, பதில் வருகிறது. 

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்ற ஒருநாள் போட்டி என்றால் அது 2015 உலகக் கோப்பைத் தொடர்தான். அந்தப் போட்டி, பிரேசிலில் 2014 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து ஃபைனல், 2012 லண்டன் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட ஆறு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்தது.

குரூப் சுற்றில் நடந்த இந்தியா - பாகிஸ்தான்  ஆட்டத்தை 20 கோடி பேர் பார்த்துள்ளனர். இது ஃபைனல் என்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் 40 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!