எம்எல்ஏ-க்களுக்குப் பேரம் : ஆளுநரைச் சந்தித்து முறையிட்டார் மு.க. ஸ்டாலின்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், டி.டி.வி என்று மூன்று அணிகளாகத் தற்போது அ.தி.மு.க இயங்கி வருகிறது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, கூவத்தூரிலிருந்த அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் கோடிகளில் பேரம் பேசிய வீடியோவை, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்டது.

Stalin

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், பேரவைக் கூட்டத்தொடரிலும், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில், பேரம் பேசியதாக எம்எல்ஏ சரவணன் கூறும் வீடியோ ஆதாரத்தை, சபாநாயகர் தனபாலிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை ஸ்டாலின்  இன்று சந்தித்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது, எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் ஸ்டாலின் முறையிட்டுள்ளார். குறிப்பாக, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஆதாரத்தையும், ஆளுநரிடம் ஸ்டாலின் வழங்கியுள்ளார். 

இந்தச் சந்திப்பின்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!