Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் பழனிசாமி குறித்த கேள்விக்கு மக்களைக் கைக்காட்டிய ஓ.பன்னீர்செல்வம்!

ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பணம் விநியோகித்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழகக் காவல்துறைக்குத் தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஒரு முதலமைச்சர் ஆளாவது இதுவே முதல்முறை.

ஏப்ரல் 12 ஆம் தேதி  நடைபெறவிருந்த ஆர்.நகர். தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரனுக்கு வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்குத் தலா 4000 ரூபாய்  வீதம் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்குப் பல ஆதாரங்களும் கிடைத்த நிலையில், இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் ஒருவருக்கு அளித்தப் பதிலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க எம்எல்ஏ-வும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான சண்முகநாதனின் மகள் பொன்ரேகாவின் திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று மாலை நெல்லையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, நேற்றிரவு தூத்துக்குடி வந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.கவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த புகாரில் தினகரன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககூறி தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது  நியாயமானது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. அ.தி.மு.க சட்ட விதிகளின்படி இரட்டை இலைச் சின்னத்தை முடக்கக்கூடிய அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் மட்டுமே இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்குவது குறித்து முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என அ.தி.மு.கவின் சட்டம் சொல்கிறது. பெருவாரியான அ.தி.மு.க தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற யார் உரிமை கொண்டாடினாலும் சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம். விரைவில் அனைத்து அ.தி.மு.க தொண்டர்களும் எங்கள் பக்கமே வருவார்கள். அம்மாவின் ஆட்சியே நிலைத்திருக்கும்’’ என்றார்.

மேலும், ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தம்பிதுரை ஆகியோர் சந்தித்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், தேவைப்பட்டால் நானும் தமிழக ஆளுநரைச் சந்திப்பேன் என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement