Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' தினகரன் செல்வாக்கால் யாருக்கு லாபம்?!' - இஃப்தார் விருந்தும் எடப்பாடி பழனிசாமியின் கொதிப்பும் 

எடப்பாடி பழனிசாமி

' தினகரன் தலைமையை ஏற்க வேண்டும்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வருகின்றனர் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் சிலர். ' சசிகலா எதிர்ப்பு மனநிலைதான் பன்னீர்செல்வத்துக்குக் கூட்டமாகத் திரள்கிறது. நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள்' என தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களிடம் சுட்டிக் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

திகார் சிறையிலிருந்து வெளிவந்த நாளிலிருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்டுவிக்க பல வகைகளிலும் காய்களை நகர்த்தினார் தினகரன். தனது ஆதரவு எம்எல்ஏ-க்களின் பலத்தைக் காட்டி, ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்தார். இதன்பின்னர், ஒவ்வொரு எம்எல்ஏ-க்களையும் தனித்தனியாக சந்தித்தார் முதல்வர். அணிகள் இணைப்புக்ககாக, பன்னீர்செல்வம் தரப்பினருடனும் மறைமுகப் பேச்சுவார்த்தையை நடத்தி வந்தனர். ' தினகரனை நீக்காமல் எதுவும் சாத்தியமில்லை' என்பதில் உறுதியாக உள்ளனர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர். ' பன்னீர்செல்வத்துக்காகக் கதவுகள் திறந்தே கிடக்கின்றன' என நேற்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். இதற்குப் பதிலளிக்கும்விதமாக, நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், ' அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவர்கள், ஜெயலலிதா மரணம் வரையில் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அவர்கள் தற்போது பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிக் கொண்டனர். அத்தகைய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது. அத்தகைய கும்பலிடமிருந்து கட்சியைக் காப்பாற்றவே இந்த தர்ம யுத்தம் நடக்கிறது. ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை இந்த தர்மயுத்தம் தொடரும்' என அறிவித்தார். 

" எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில், சசிகலா குடும்பத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த விரும்பவில்லை. தினகரனின் நடவடிக்கைகளை மௌனமாகக் கவனித்துக் கொண்டு வருகிறார். அமைச்சர்கள் மட்டுமே பேட்டி அளிக்கின்றனர். 'மீண்டும் கட்சி அலுவலகத்துக்கு வந்து பணி செய்ய வேண்டும்' எனத் தினகரன் விரும்புகிறார். 'அவரை உள்ளே விட்டுவிட்டால், நாம் எல்லாம் மறுபடியும் சிறைக் கைதியைப் போல நடந்துகொள்ள வேண்டும். எனவே, அவர் ஒதுங்கியே இருக்கட்டும்' என்பதை முதல்வரிடம் வலியுறுத்தி வருகின்றனர் அமைச்சர்கள். இதைக் கேள்விப்பட்டு உச்சகட்ட கொதிப்பில் இருக்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். இதுதொடர்பாக நேற்று பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, ' முதல்வரும் அமைச்சர்களும், இந்தப் பதவிக்குத் தாங்கள் வருவதற்கு யார் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. இவர்கள் பதவியில் இருப்பதற்கு சசிகலாவும் தினகரனும்தான் காரணம். தினகரன் இல்லாமல் பயணத்தைத் தொடர வேண்டாம் என அமைச்சர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதையும் மீறிப் பயணிக்க விரும்பினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என எச்சரித்தார். இதைப் பற்றியெல்லாம் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை. கட்சியைப் பொறுத்தவரையில், 'சசிகலாதான் பொதுச்செயலாளர்' எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வரையில் மௌனமாக இருக்க விரும்புகிறார். ஒருவேளை சசிகலா பதவிக்கு எதிராக, தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டால், கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் வேகம் பெறும்" என விவரித்த கொங்கு மண்டல நிர்வாகி ஒருவர், 

தினகரன்" ஆட்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரைச் சந்தித்துப் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏ., ஒருவர், ' உங்கள் செயல்பாடுகளால், தினகரனின் செல்வாக்குதான் பாதிக்கப்படுகிறது. அவரைக் கட்சி அலுவலத்துக்கு வந்து பணி செய்ய அனுமதியுங்கள். அரசு நடத்தும் இஃப்தார் விருந்தில் அவரே தலைமையேற்கட்டும்' என வலியுறுத்தியிருக்கிறார். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ' உங்களுக்குத் தினகரன் மீது தனிப்பட்ட முறையில் என்ன பாசம் இருக்கிறதோ, அதே அளவு பாசம்தான் எனக்கும் இருக்கிறது. எனக்கு அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. அவருடைய செல்வாக்கு என்பது இந்தக் கட்சிக்கு லாபமா? நட்டமா? அந்தக் குடும்பத்துக்கு எதிராகத்தான் இவ்வளவு கூட்டம் கூடுகிறது? இது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அவருக்கு செல்வாக்கு இருக்கின்றதென்று என்னிடமே வந்து சொல்கிறீர்கள். அவருடைய நெகட்டிவ்தான், பன்னீர்செல்வம் பக்கம் கூட்டமாக வந்து சேருகிறது. முன்பைவிட, என்னுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதாகத்தான் உணர்கிறேன். முதல்வர் ஜெயலலிதா தலைமையில்தான் இஃப்தார் விருந்து நடந்தது. இப்போது முதல்வரான என்னுடைய தலைமையில்தான் இஃப்தார் விருந்து நடக்கும். தினகரனிடம் பேசிவிட்டு என்னிடம் வருபவர்களும், 'பழகிய பாசத்துக்காகத்தான் அங்கு சென்றோம்' என்கிறார்கள். இந்தநிலையில், தினகரன் மீண்டும் கட்சிக்குள் வருவது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். கட்சியை படுபாதாளத்துக்குத் தள்ளிவிடும்' எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதற்குப் பதில் சொல்ல முடியாமல், அங்கிருந்து சென்றுவிட்டார் அந்த எம்எல்ஏ., வரும் புதன்கிழமை முதல்வர் தலைமையில் இஃப்தார் விருந்து நடக்கவிருக்கிறது" என்றார் விரிவாக. 

" டெல்லியைப் பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இணைப்பு நடப்பதை தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களும் சில அமைச்சர்களும் விரும்பவில்லை. எனவேதான், எடப்பாடி பழனிசாமிக்குச் சிக்கல் கொடுக்கும்விதமாக எம்எல்ஏ-க்கள் அணி திரண்டனர். இதே நிலை நீடித்தால், இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் கிடைக்கப் போவதில்லை. இதைப் புரிந்துகொண்டு சசிகலா தரப்பினர் சமாதானப் படலத்தைத் தொடங்கினாலும், அவர்களின் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்கும் மனநிலையில் முதல்வரும் இல்லை. பன்னீர்செல்வமும் இல்லை" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement