Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாதுனு இந்தப் படம் சொல்லும்!' - சினிமாவாகும் எம்.பி. சசிகலா புஷ்பா வாழ்க்கை

வாராகி

'காலா' படத்தின் கதையில் இடம்பெறும் தாதா அவரல்ல, இவரல்ல என அந்தப் படத்தின் படக்குழு நான்குபுறமும் கதறிக்கொண்டிருக்க, ''தன் படத்தின் நாயகி அ.தி.மு.க எம்பி சசிகலா புஷ்பாவேதான்'' என்று கற்பூரம் கொளுத்தி அடித்துச் சொல்லாத குறையாக ஒப்புக்கொண்டு அதிர்ச்சி தருகிறார் நடிகர் வாராகி. 

கட்டுக்கோப்பான கட்சியை வழிநடத்துகிற இரும்புத்தலைவி என அ.தி.மு.க-வின் உள்ளேயும் வெளியேயும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவருக்கே பாராளுமன்றத்தின் நடுநாயகமாக நின்று, தன் கட்சித் தலைவர் தன்னை அறைந்துவிட்டதாகக் கூறி கிலி கொடுத்தவர் சசிகலா புஷ்பா. தி.மு.க முக்கியப் புள்ளியுடன் அவர் இருப்பதுபோன்று வெளியான புகைப்படங்களால் விளைந்ததுதான் அந்த விபரீதம். பின்னாளில், அது அவரது அரசியல் திசையையே ஆட்டிப்பார்த்துவிட்டது. அன்றுமுதல் இன்றுவரை சர்ச்சைநாயகியாகவே ஆகிப்போனார் அவர்.

இப்போதும் புறப்பட்டிருக்கிறது ஒரு சர்ச்சை. அது, அவரால் அல்ல; அவருக்கு எதிராக. ஆம், அ.தி.மு.க-வில் பரபரப்பு பெண்மணியாக இருந்து ஜெயலலிதா மறைவுக்குப்பின் தற்போது சத்தமின்றி ஒதுங்கியிருக்கும் அவரின் வாழ்க்கையை 'சிவா மனதில் புஷ்பா' என்ற பெயரில் படமாக எடுத்துவருகிறார் நடிகர் வாராகி. பத்திரிகையாளர், நடிகர், சமூக சேவகர் என்ற பலமுகங்களைக் கொண்ட இவரேதான் இந்தப் படத்தின் கதாநாயகனும்கூட.

மக்கள் அபிமானம் பெற்றவர்கள், உணர்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைத்தான் படமாக எடுப்பார்கள். ஆனால், சசிகலா புஷ்பா வாழ்க்கையைப் படமாக எடுத்துக்கொண்டிருக்கும் வராகியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''சசிகலா புஷ்பாவின் கதையை எதற்காக எடுக்கிறீர்கள்?''

வாராகி“ராஜாஜி, காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர் எனத் தமிழக அரசியல் பல தலைவர்களைக் கண்டிருக்கிறது. ஒழுக்கமும் நேர்மையும் கொண்ட இந்தத் தலைவர்களால் நாட்டுக்குப் பெருமை. ஆனால், இதே அரசியலில் இன்று ஒழுக்கம், நேர்மை, மக்கள் பணி செய்வது போன்ற தகுதிகளை இன்றைய அரசியல்வாதிகளிடம் காண முடியவில்லை. குறிப்பாக ஒழுக்கம். பல லட்சம் பேரால் பின்பற்றப்படும் ஒரு தலைவர் அதற்கான தகுதியுடன் இருக்கவேண்டும். ஆனால், இன்று அப்படியல்ல. 'இப்படித்தான் இருக்கவேண்டும்' எனச் சிலரின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டுவாழ்வோம். அதேசமயம், 'இப்படி இருக்கவே கூடாது' என்றும் சிலரின் வாழ்க்கையைப் பார்த்து எச்சரிக்கையாக இருப்போம். நான், இரண்டாவது வகையில்தான் சசிகலா புஷ்பா வாழ்க்கைக் கதையைப் படமாக எடுக்கிறேன். படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. படத்தின் கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எல்லாம் நான்தான். சிவா கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன். சசிகலா புஷ்பா கதாபாத்திரத்தில் ஷிவானி குரோவர் என்பவர் நடிக்கிறார். ஏற்கெனவே அவர் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்துப் பெண், அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு வாழ்வில் படிப்படியாக எப்படி முன்னேறி அரசியல் அதிகாரங்களை எட்டிப்பிடிக்கிறார் என்பதுதான் கதை. எதிர்எதிர் துருவங்களான இரு கட்சிகளின் தலைவர்கள் எந்தக் கோணத்தில் இணைகிறார்கள் என்பது உள்ளிட்ட பல சம்பவங்களைப் படமாக்கியிருக்கிறோம். இதற்காகச் சசிகலா புஷ்பாவைப்போன்றே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணை மாதக்கணக்கில் தேடிப்பிடித்தோம்''. 

''விளம்பரத்துக்காக இப்படி ஒரு படத்தை எடுக்கிறீர்களா?''

''சினிமா எடுப்பது என்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. சிறு தயாரிப்பாளரான என்னைப்போன்றவர்களுக்குப் படம் ஓடவில்லையென்றால், நடுத்தெருவுக்கு வரவேண்டியதுதான். அந்தச் சூழலில் விளம்பரத்துக்காகவோ வேறு எந்த நோக்கத்துக்காகவோ இந்தப் படத்தை எடுக்கவில்லை. முழுக்கமுழுக்க இது இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான்.'' 

''அரசியல்வாதிகளின் ஒழுக்கம் குறித்துப் பேசும் உங்களுக்கு, இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்வைப் படமாக எடுப்பது தவறு எனத் தெரியவில்லையா?''

''நிச்சயம் தவறில்லை. அவர் தனிப்பட்ட ஒரு நபருமல்ல. பல லட்சக்கணக்கானவரின் நம்பிக்கை பெற்று, அவர்களின் பிரதிநிதிகளாகத்தான் ஒரு மக்கள்பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுகிறான். ஆனால், அத்தனை பேரின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டுப் பொருள் சேர்ப்பதும் ஒழுக்கமற்று வாழ்ந்து தன்னை நம்பி வாக்களித்தவர்களுக்குத் துரோகம் செய்வதும் தவறில்லையா? அப்படி ஒழுக்கமற்ற ஒருவரைச் சமூகத்துக்கு அடையாளம் காட்டுவது சமூகப் பொறுப்புள்ள ஒருவனாக எனது கடமை. எம்பி என்பதை எம்எல்ஏ கதாபாத்திரமாக்கியிருக்கிறேன். ஆகஸ்ட் மாதம் வெளிவரத் திட்டமிட்டுப் படத்தை எடுத்துவருகிறோம்''.

''ஆயிரம் காரணங்களை நீங்கள் அடுக்கினாலும் சட்டம் என்று ஒன்றிருக்கிறதே?''

''நான் அதையெல்லாம் ஆராய்ந்துவிட்டுத்தான் முதல்நாள் படப்பிடிப்புக்கே போனேன். என் படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கட்டும். பார்த்துவிட்டு நான்செய்தது தவறா, சரியா என முடிவு செய்யட்டும். சசிகலா புஷ்பாவேகூட இதை எதிர்க்கமாட்டார். அந்த அளவுக்கு நுணுக்கமான சம்பவங்களை எடுத்திருக்கிறேன். அப்படி அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடுத்தால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை. நான், அதைச் சட்டப்படி சந்திப்பேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன''.

வாராகி

''இப்படி ஒரு தனிநபரைப்பற்றிப் படம் எடுப்பது, அவரை மிரட்டிப் பணம்பறிக்கும் நோக்கத்திலா?''

''நிச்சயம் அப்படியில்லை. எனக்கு அந்த அவசியமும் கிடையாது. 'அப்பா' என ஒரு படம் வெளிவந்தால், அது ஓர் அப்பா எப்படியெல்லாம் இருக்கவேண்டும் எனச் சொல்லும். 'தொண்டன்' எனப் படம் வந்தால், அது ஒரு தொண்டன் எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சொல்லும். அப்படித்தான் என்னுடைய இந்தப் படமும். ஓர் அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்ற விழிப்புஉணர்வுக்காக எடுத்திருக்கிறேன். படம் மக்களைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அது யாருடைய கதை என்பதை வெளிப்படையாக இப்போதே சொல்லிவிடுகிறேன்''.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement