ஹோம் வொர்க்குக்கு டீச்சரின் ஸ்மைலி ரேட்டிங்!- சென்னை பள்ளியின் 'வாவ்' முயற்சி | Now, smiley rating for class homeworks - Chennai school's new initiative!

வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (19/06/2017)

கடைசி தொடர்பு:13:23 (19/06/2017)

ஹோம் வொர்க்குக்கு டீச்சரின் ஸ்மைலி ரேட்டிங்!- சென்னை பள்ளியின் 'வாவ்' முயற்சி

ஹோம்வொர் நோட்டில் ஸ்மைலி ரேட்டிங்

"குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துற கல்விமுறைதான் ஆரோக்கியமானதா இருக்கும். அதுவும் குழந்தைப் பருவத்துல இருந்தே தாழ்வு மனப்பான்மை இல்லாம படிக்கிறது, அவங்க உயர்கல்வி பயிலும்வரைக்கும் நல்ல மனநிலையைக் கொடுக்கும். அதனாலதான் எங்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஹோம்வொர்க் நோட்டுகளில் ஸ்மைலி முறையைக் கொண்டுவந்தோம்" என உற்சாகமாகப் பேசுகிறார் சென்னை வேளாங்கன்னி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை உஷா சதீஷ். இவர், பள்ளி எல்.கே.ஜி வகுப்பாசிரியர் ஞானாம்பா மற்றும் சக ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் செய்திருக்கும் ஸ்மைலி முறை பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

டீச்சருடன் மாணவர்கள்

தலைமை ஆசிரியை உஷா சதீஷ், "ஆரம்பத்தில் எல்.கே.ஜி குழந்தைகளின் ஹோம்வொர்க் நோட்டில் குட், ஆவரேஜ், புவர்னு எழுதிட்டு இருந்தோம். புவர் வாங்கின குழந்தைங்க மனசளவுல காயப்பட்டாங்க... அதுவே தாழ்வு மனப்பான்மையா மாற ஆரம்பிச்சதை உணர்ந்தோம். கல்விங்கிறது மாணவர்களை உற்சாகப்படுத்தணும்... காயப்படுத்தக்கூடாதுங்கிறதை உணர்ந்தோம். அதனால ரேட்டிங் முறையில் ஸ்மைலிக்களை அறிமுகப்படுத்தினோம். அதாவது சிரிச்ச முக ஸ்மைலி, அமைதியான முக ஸ்மைலி, கோப முக ஸ்மைலிக்களோட இருக்கும் கார்ட்டூன் கேரக்டர்களைப் பசங்க நோட்டுல பயன்படுத்தினோம். போன முறையைவிட இந்த முறைக்குச் சின்ன மாற்றம் ஏற்பட்டதை உணர முடிஞ்சது. இதைவிட சூப்பரான முறையைக் கொண்டு வர முயன்றோம். குழந்தைங்களோட நடவடிக்கைகளைக் கண்காணிச்சோம்.

'குழந்தைகளுக்குப் பிடிச்ச ஸ்மைலி ஸ்டிக்கர்ஸைப் பயன்படுத்தி அவங்களோட திறனை ரேட்டிங் பண்ணலாம். அப்பதான் நான் மார்க் குறைவா வாங்கிட்டேனு குழந்தைங்க வருத்தப்பட மாட்டாங்கனு ஆசிரியை ஞானாம்பா ஆலோசனை கொடுத்தாங்க. தொடர்ந்து சக ஆசிரியர்கள் கலந்துபேசி, உடனே எங்க பள்ளி நிர்வாகத்துகிட்ட சொன்னோம். 'சிறப்பான முயற்சி. என்ன உதவி வேண்டுமானாலும் செய்றோம்'னு நிர்வாகம் ஊக்க வார்த்தைகளைச் சொல்லிப் பாராட்டவே, உடனே செயல்ல இறங்கிட்டோம்.

பிரின்சிபல்

எல்.கே.ஜி மாணவர்கள் பயன்படுத்தும் எல்லா நோட்டுகள்லயும் மூணு விதமான ஸ்மைலி முகங்களைப் பிரின்ட் பண்ணினோம். சென்னையில இருக்கிற எங்களோட அத்தனை பிராஞ்ச்களுக்கும் அதை விநியோகம் செய்தோம்" என்றார் புன்னகையோடு

இந்த ஸ்மைலி முறைக்குக் காரணமான ஆசிரியை ஞானாம்பா, "போன வருஷத்துலயே எங்க பள்ளியில இம்முறையைக் கொண்டுவந்து, தொடர்ந்து இந்த வருஷமும் செயல்படுத்திக்கிட்டு இருக்கிறோம். குழந்தைகளுக்குப் பிடிச்ச ஸ்மைலி முகங்கள் அவங்களை இன்னும் நல்லா படிக்க உற்சாகப்படுத்துது. ஹோம் வொர்க் சரியா பண்ணலைனா கூட... பசங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படலைங்கிறதே எங்களோட வெற்றியா நினைக்கிறோம். நாமளும் நல்லா ஹோம் வொர்க் செஞ்சு ஸ்மைலி வாங்கணும்னு பசங்க என்கிட்ட சொல்றப்ப மகிழ்ச்சியா இருக்கும்.

ஆசிரியை ஞானாம்பா

பசங்க சந்தோஷப்பட்ட மாதிரி பெற்றவர்களும் செம சந்தோஷத்துல இருக்காங்க. தன்னோட பசங்க ஹோம் வொர்க் செய்ய அலுத்துகிடுறதில்லைனு அவங்க சொன்னப்ப குஷியாகிட்டோம். இந்த முறையை எங்க பள்ளியோட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கொண்டு போகலாம்னு முடிவெடுத்திருக்கிறோம். குறிப்பா கல்வி முறைங்கிறதே மாணவர்களை உற்சாகப்படுத்தி அறிவை வளர்க்கத்தானே தவிர அவர்களைக் காயப்படுத்த அல்ல என்பதை இந்த ஸ்மைலி முறை நல்லாவே உணர வெச்சிருக்குது" என புன்னகைக்கிறார் ஞானாம்பா.

இப்பள்ளியில் தினமும் ஹோம்வொர்க் செய்துவந்த மாணவர்கள் அனைவரின் கைகளிலும் ஆசிரியர்கள் ஸ்டார் வரைந்து உற்சாகப்படுத்துவதையும் வழக்கமாகச் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்