வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (19/06/2017)

கடைசி தொடர்பு:15:50 (19/06/2017)

நில உரிமையாளர்கள் ஆவணத்தில் ஆதார் இணைப்பு விவகாரம்! மத்திய அரசு மறுப்பு

ஆதார் எண்ணை நில உரிமையாளர்கள் ஆவணத்தில் இணைக்க வேண்டும் என்றும், ஆதார் எண்ணை இணைக்காவிடில் பினாமி பணபரிவர்த்தனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

ஆதார் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த வாரம் வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், அப்படி இணைக்காவிட்டால் வங்கிக்கணக்கு ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

இதனிடையே, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு இன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகவும்,  அதில், ஆதார் எண்ணை நில உரிமையாளர்கள் ஆவணத்தில் இணைக்க வேண்டும் என்றும், ஆதார் எண் இணைக்காவிடில் பினாமி பணபரிவர்த்தனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 1950ஆம் ஆண்டு முதலான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.

தற்போது இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இப்படி ஒரு சுற்றறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்பவில்லை என்றும், இந்த சுற்றறிக்கை போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.