வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (19/06/2017)

கடைசி தொடர்பு:16:00 (19/06/2017)

''தயவு செஞ்சு பணம் பணம்னு அலையாதீங்க!'' - லாட்டரி சீட்டு விற்கும் மேரி அக்கா

லாட்டரி சீட்டு

ங்க முன்னாடி, ஒரு அண்டா நிறையச் சுவையான பிரியாணி இருக்கு. நீங்க ஒரே ஆள்... எனக்கு எல்லாமே வேணும்’னு எடுத்து சாப்பிட்டுற முடியுமா.? வயிறு வீங்கிச் செத்து போயிருவீங்க. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. ஆனா, இங்க எல்லாருடைய ஆசையுமே அளவுக்கு மீறினதாதான் இருக்கு. எல்லையை மீறினா எல்லாமே ஆபத்துலதான் முடியும். கஷ்டப்படுறவங்களுக்கு சிலநேரங்கள்ல பரிசு கிடைச்சாலும், இந்த லாட்டரி சீட்டு விஷயத்துல பேராசைப்பட்டு வயிறுவீங்கி சாகுறவங்கதான் நிறையப் பேர். எத்தனையோ பேர் என் கண் முன்னால் அழிஞ்சிருக்காங்க” மேரி அக்காவின் ஆரம்ப வார்த்தைகளே... அவரின் அனுபவத்தைச் சொல்லிவிடுகிறது.

தமிழகத்தில் தெருவுக்கு தெரு டீக்கடைகள் இருப்பதைப் போல கேரளத்தில் தெருவெங்கும் லாட்டரி சீட்டு கடைகள். கடவுளின் தேசம் என்பதாலோ என்னவோ அவர்களுக்கு இன்னும் அதிர்ஷ்டத்தின் மேல் உள்ள நம்பிக்கை விழவில்லை போல. கோயம்புத்தூரில் இருந்து தமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்கு நுழைந்ததும் கள்ளு கடையும், லாட்டரி சீட்டுக்கடைகளும்தான் நம்மை வரவேற்கின்றன.

ஒரு சீட்டு 30 ரூபாய். ஒவ்வோர் நாளைக்கும் ஒரு பரிசுத்தொகை. இன்றைக்கு மதியம் விற்பனைக்கு வரும் லாட்டரிகளின் முடிவு நாளை மாலை தெரிந்துவிடும். லாட்டரி சீட்டுகளில் பார்கோடுகள் இருக்கின்றது. இணையதளத்திலேயே முடிவுகள் தெரிந்துகொள்ளலாம் இணையதளம் பயன்படுத்த தெரியாதவர்கள் பின்பக்கம் இருக்கும் போன் நம்பருக்கு, போன் பண்ணினால் ரிசல்ட் சொல்லிவிடுகிறார்கள். இப்படி லாட்டரி பிசினஸை அப்டேட்டடாக செய்துகொண்டிருக்கிறது கேரள அரசு. ஆம், லாட்டரி சீட்டு விற்பவர்கள் அனைவர்களிடத்தில் நாங்கள் அரசு ஊழியர்கள்போல என்ற எண்ணம் இருப்பதைப் பேச்சில் உணர முடிகிறது.

மேரி அக்கா

கேரளப்பகுதியான  வேலந்தாவளம் அருகில் கோழிப்பாறை செக் போஸ்ட்டில்தான் மேரி அக்காவை சந்தித்தோம், ஐம்பது வயதிருக்கும். கிராமத்து முகச்சாயல். முந்தானையை தூக்கி இடுப்பில் செருகியபடி செக்போஸ்ட்டில் நிற்கும் லாரி டிரைவர்களிடம் லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார்.  டிரைவர்களும் ஆளுக்கு மூன்று, நான்கு என பாக்கெட் இருப்புக்கு தகுந்தாற்போல லாட்டரிகளை வாங்கிச்செல்கிறார்கள். ஒரு லாரி டிரைவர்...  “எங்கம்மா நானும் அஞ்சு வருஷமா வாங்குறேன். ஒத்தப் பைசாகூட அடிக்க மாட்டேங்குதே. அந்த காசு பூராவும் ஒரு உண்டியல்ல போட்டு வச்சிருந்தா கூட இந்நேரம் ஒரு பெரிய தொகை தேறியிருக்கும். இதெல்லாம் எம்பொண்டாட்டிக்கு மட்டும் தெரிஞ்சது... என்னை சீவுகோலாலேயே அடிச்சு விரட்டிருவா'' என்று சொல்லிக்கொண்டே  நாலு சீட்டு குடும்மா என்று வாங்கி தன் சீட்டுக்கு அருகில் உள்ள ஒரு இடுக்கில் அந்த சீட்டுகளை பத்திரப்படுத்தும் விதமே அவர்  பல வருஷ கஸ்டமர் என்பதை உணர்த்தியது. 

அந்த டிரைவரிடம் வியாபாரத்தை முடித்து அடுத்த கஸ்டமரை தேடிப்போகும் இடைவெளியில்  மேரி அக்காவிடம் பேசினோம். “நான் எட்டு வருஷமா லாட்டரி சீட்டு விக்கிறேன் கண்ணு (தமிழில்தான் பேசுகிறார்). இதுக்கு முன்னாடி கூலி வேலைதான் பார்த்துகிட்டு இருந்தேன். பெரிய வருமானம் இல்லாம வறுமை கழுத்தை நெறிக்க ஆரம்பிச்சது. எட்டு வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு உடம்பு சரி இல்லாம போச்சு. டாக்டர்கிட்ட போனேன். அந்த டாக்டர் என்னோட குடும்ப சூழல் எல்லாத்தையும் கேட்டுட்டு, 'நீ... வேணும்னா லாட்டரி சீட்டு தொழில்ல இறங்குமா’னு சொன்னார். அன்னைக்கு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினேன்.... 5 ஆயிரம் ரூபாய் விழுந்துச்சி. அன்னைக்கு கையில பிடிக்க ஆரம்பிச்சது... இப்ப வரைக்கும் லாட்டரி சீட்டு விக்கிற தொழில்ல நின்னுட்டு இருக்கேன் 

நான் நூறு சீட்டு வச்சிருக்கேன். மொத்தமா 2500 ரூபாய். ஒரு சீட்டு வித்தா அஞ்சு ரூபாய் கிடைக்கும்.  ஒரு நாளைக்கு எனக்கு ஐநூறு ரூபாய் கிடைக்கும். நாளைக்கு மதியத்துக்குள்ள நூறு சீட்டையும் வித்துடுவேன். வித்தாலும் விக்கலைன்னாலும் 2500ரூபாய் என் கைகாசை கொடுத்திடணும். சீட்டை ரிட்டர்ன் வாங்க மாட்டாங்க. இது கவர்மெண்ட் வேலை மாதிரி. எனக்கு கவர்மெண்ட் வேலைல நிறைய சலுகைகள் இருக்கு'' என்கிறார் முகமெல்லாம் பரவும் புன்னகையோடு.

“வாங்குற எல்லாருக்கும் பரிசு விழுவுறது இல்லை கண்ணு. தினமும் ஆயிரம் ரூபாய்க்கு சீட்டு வாங்குறவங்க கூட இருக்காங்க. இவ்வளவுக்கும் அவங்க அன்னாடங்காச்சிங்களாதான் இருப்பாங்க. எப்படியாவது பணக்காரனா ஆகிடனும்ங்கிற பேராசையில, சம்பாதிச்ச ஒட்டு மொத்த பணத்தையும் லாட்டரி சீட்டு வாங்கியே அழிச்சவங்களை பார்த்திருக்கேன். அதனால, என்கிட்ட அதிக சீட்டு வாங்குறவங்ககிட்ட, ’எதுக்கு இவ்வளவு சீட்டு வாங்குறீங்க... உங்களுக்கு விழணும்னு இருந்தா ஒரு சீட்டு வாங்குனா கூட அதுல விழுந்துரும்.. விழக்கூடாதுனு இருந்தா ஒரு லட்சம்  சீட்டு வாங்குனாலும் விழவே விழாது’னு ஓப்பனாவே சொல்லிடுவேன். சிலபேர் ஏத்துக்குவாங்க. சிலபேர் 'உனக்கு இதெல்லாம் தேவையாமா... ஒழுங்கா சீட்டை கொடுத்துட்டு போய்கிட்டே இரு'ன்னு சொல்லிடுவாங்க. அப்படிபட்டங்களை பத்தி நான் கவலைப்படுறதில்லை. ஏன்னா.. அவுங்க தெரிஞ்சே அழிஞ்சி போறாங்க. பணம் பணம்னு பைத்தியம் பிடிச்சு அலையுறாங்க. அதுக்கு நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க...

என்னோட கவலை எல்லாம் கஷ்டப்படுறவங்களைப் பார்த்துதான். தெனமும் ஒண்ணு அல்லது ரெண்டு சீட்டு வாங்கி வச்சிகிட்டு, நம்ம வாழ்க்கை மாறிடாதான்னு ஏங்குறவங்களுக்காக நான் கடவுளை வேண்டிக்குவேன். அப்படி கஷ்டத்தோட சீட்டு வாங்கின சிலருக்கு ஆயிரங்கள்ல பரிசு விழுந்து வாழ்க்கை அழகா மாறினதையும் பார்த்திருக்கேன். அப்ப எனக்கு ஏற்படுற சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. சந்தோஷமும் துக்கமும் கலந்த தொழில் இது... ஆனா என்ன... துக்கம் கொஞ்சம் தூக்கலா இருக்கும். என்ன பண்ண... இத வித்துதான் என் வறுமையை போக்க வேண்டியதா இருக்குது. செய்யும் தொழிலே தெய்வம்பாங்க. வேற வழியில்ல.பல பேரோட வாழ்க்கையை அழிக்கிற சாத்தாந்தான் என்னோட தெய்வம்னு நினைக்கிறப்ப கஷ்டமா இருக்கு. முன் ஜென்மத்துல நான் செய்ஞ்ச பாவம்... இந்த தொழில் செய்றேன்'' எனும் போது வார்த்தைகள் உடைந்து வழியும் கண்ணீரை மறைக்க லாட்டரி சீட்டேய்.. சீட்டு.. என்று விற்க ஆரம்பிக்கிறார் மேரி அக்கா.


டிரெண்டிங் @ விகடன்