நூலகங்களுக்கு நிதி ஒதுக்கினால் போதுமா... இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு என்ன? | Fund for buying books of the library is okay, who is maintaining the library?

வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (19/06/2017)

கடைசி தொடர்பு:16:24 (19/06/2017)

நூலகங்களுக்கு நிதி ஒதுக்கினால் போதுமா... இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு என்ன?

ள்ளிகல்வித் துறை மானிய விவாதத்தில், நூலகம் சார்ந்த பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை அறிவித்திருந்தார் அமைச்சர் செங்கோட்டையன். இந்த ஒதுக்கீடுகள் நூலகத் துறையின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவும் என்பது குறித்து நூலகத் துறையில் இருப்பவர்களிடம் பேசினோம். 

நூலகம்

தகவல் மற்றும் நூலக அறிவியல் முன்னேற்றத்துக்கான அமைப்பு ஆலோசகர் சுவாமிநாதன் “பள்ளிக்கல்வியில் நூலகத் துறைக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை. இதைப் பாராட்டியாக வேண்டும். இதைச் சமூக மாற்றத்துக்கான அறிகுறியாகவும் எடுத்துக்கொள்ளலாம். இது நல்ல விஷயமே" என்றவர், “பள்ளியில் புத்தகங்களையும், வார இதழ்கள், செய்தித்தாள்களையும் வாங்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் மாணவர்களுக்கு வழங்குவதற்கு பள்ளியில் நூலகர்கள் இல்லை.

நூலகம்புத்தகங்கள் காணாமல்போனால் ஓய்வுபெறும்போது பிரச்னை வரும் என்பதால், புத்தகங்கள் அனைத்தும் தலைமையாசிரியர் அறையைவிட்டு வெளியே வருவதில்லை. இதைத் தவிர்க்கும் வகையில், நூலகர் இருந்தால் புத்தகங்களைப் பராமரிக்கவும் அதை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் செய்வார்கள். பள்ளியில் நூல்கள் இருந்தும் நூலகர் இல்லாமலிருப்பது பேருந்து இருந்தும் ஓட்டுநர் இல்லாமல் நிற்பது போன்றது" என்கிறார் சுவாமிநாதன். 

தமிழ்நாடு பொது நூலகங்களின் மேம்பாட்டுச் சங்கத்தின் பொதுச்செயலாளரும், அண்ணா நூற்றாண்டு நூலகப் பணியாளர் ஊழியர் நலச் சங்கத்தின் தலைவருமான மணிகண்டன் ``கடந்த சில வருடங்களாக நூலகத் துறைக்கு எனப் பெரிய அளவில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த ஆண்டு ஏழு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இதில் மதுரையில் ஆறு கோடி ரூபாய் செலவில் புதிய நூலகம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஏழு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படாமலும், சட்டமன்ற விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்படாமலும் இருந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு, தற்போது ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு எந்த நிதி ஒதுக்கீட்டையும் செய்யாமல் ஒதுக்கிவைக்கப்பட்ட பொது நூலகங்களுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. வாசகர்கள் புதிய புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு இனி கிடைக்கும். 

நூலகம்வாசகர்களுக்கான புதிய நூல்கள், நூலகங்களுக்கு வாசம் சேர்க்கும்தான். ஆனால், இந்த நூல்களை வகைப்படுத்தி, சரியான இடங்களில் வைப்பதற்கு போதுமான நூலகர்கள் இல்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கியபோது, 96 பேரை வேலைக்குச் சேர்த்தார்கள். இதுவரை 26 பேர் நூலகப் பணியிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மீதம் உள்ளவர்களை வைத்துத்தான் அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன. 

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நூலகச் சேவையை இன்னும் இறுதி செய்யவில்லை. உறுப்பினர்களும் புதிதாகச் சேர்க்கப்படவில்லை. இங்கு பணியாற்றுபவர்களுக்குப் பணி வரைமுறை செய்துவிட்டாலும், அரசு ஊழியர்களின் எந்தத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதுவரை ஓய்வு ஊதியத் திட்டம், குடும்ப நலநிதித் திட்டம் என எதையும் இணைக்கப்படவில்லை. இதனால் பணிப் பாதுகாப்பு இல்லாமல்தான் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இதைச் சரிசெய்து, நூலகர்களின் திறனை மேம்படுத்துவதற்கும், நூலகர்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்கும் அறிவிப்பை வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்கிறார் மணிகண்டன். 

தகவல் மற்றும் நூலக அறிவியல் முன்னேற்றத்துக்கான அமைப்பின் தலைவர் ஹரிஹரன் ``பள்ளிக்கல்வியில் தேசிய அளவில் போட்டிபோட்டுக்கொண்டு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறார்கள். ஆனால், இதன் தரத்தை உயர்த்துவதற்கு நூலகங்களும் நூலகர்களும் அவசியம். மத்திய அரசுப் பள்ளிகளான அனைத்து நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நூலகம்இங்கு மாணவர்களின் கற்றலுக்குப் பயன்படும்வகையில் நூலகம் சார்ந்த பல்வேறு கற்றல் பணிகளையும் வழங்குகிறார்கள். இதன் மூலம் மாணவர்களுக்கும், புத்தகங்களுக்கும் இடையேயான இணைப்புப் பாலமாக நூலகர்கள் செயல்படுகிறார்கள். ஆக, தமிழக அரசின் பள்ளிகளில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருக்கும் நூலகர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

கிராமப் பகுதியில் தற்காலிக அடிப்படையில் நான்கு நூலகங்களுக்கு ஒரு பகுதி நேரப் பணியாளர் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். ஒரே நேரத்தில் நான்கு நூலகங்களில் எப்படிப் பணியாற்ற முடியும் எனத் தெரியவில்லை. பொது நூலகங்களிலும் நூலகர்களின் நிலையும் மிக மோசமாகவே இருக்கிறது. ஆகையால் இதை எல்லாம் சரி செய்ய வேண்டும்" என்கிறார். 

புத்தகங்களை வாங்கி வைப்பது மட்டும் அரசின் கடமையல்ல. அதை முறையாக மாணவர்களைப் பயன்படுத்தவைப்பதும் பராமரிப்பதும் அவசியம். அதற்கான திட்டங்களையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.


டிரெண்டிங் @ விகடன்