வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (19/06/2017)

கடைசி தொடர்பு:17:15 (19/06/2017)

“பன்னீர்செல்வம் தினகரன் அணியில் விரைவில் இணைவார்!” - தங்க தமிழ்ச் செல்வன்

பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி

.தி.மு.க., தி.மு.க மோதல் களம் முடிந்துபோய், பன்னீர்செல்வம், தினகரன், எடப்பாடி பழனிசாமி இந்த மூன்று பேருக்கான மோதல் தற்போது முற்றிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், "தினகரன் அணியில் பன்னீர்செல்வம் விரைவில் இணைவார்" என்கிறார் அந்த அணியின் ஆதரவாளரும், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வுமான தங்க தமிழ்ச்செல்வன். அவருடைய இந்தப் பேச்சு அ.தி.மு-வில் இனி என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம்கொடுக்க முயன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட தினகரன், கடந்த 2-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அவர், வெளியே வந்தநாளில் இருந்துதான் அ.தி.மு.க-வில் மீண்டும் சலசலப்புத் தொடங்கியது. இது, பன்னீர்செல்வத்துக்கும், தினகரனுக்கும் இடையேயான சலசலப்பு அல்ல; எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும், தினகரனுக்கும் இடையேயான சலசலப்பின் தொடக்கம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் தினகரன். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "என்னை நீக்கும் அதிகாரம் அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. எனவே, நான் இனி கட்சிப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவேன்" என்றார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "தினகரனை, ஒதுக்கிவைத்தது வைத்ததுதான். அவரைக் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துப் பேச மாட்டார்கள்" என்றார்.

தினகரன்

இப்படியான மோதல் போய்க்கொண்டிருக்கிற நிலையில், மாவட்டந்தோறும் அ.தி.மு.க நிர்வாகிளைச் சந்திக்க தினகரன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏற்கெனவே தினகரன் சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கைப் பணியும் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தினகரனுக்கு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி தினகரனுக்கான ஆதரவு ஒருபுறம் இருக்க.. மறுபுறம், எடப்பாடிபழனிசாமிக்கு ஆதரவு தருவதற்கு சசிகலா தரப்பில் இருந்து பேரம் நடந்ததாகச் சொல்லப்படும் விவகாரமும் வீரியமடைந்து வருகிறது.

இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசியபோது, "அ.தி.மு.க-வில் எந்தப் பிரச்னையும் இல்லை. தினகரன் கட்சிக்கு மீண்டும் வரவேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். முதலில், கட்சியைப் பலப்படுத்த தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒருவருடமாகக் கட்சியில் உள்ளவர்கள், அ.தி.மு.க-வைப்பற்றிக் கவலையில்லாமல் உள்ளனர். அதனால், கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளைத் தொடங்கியுள்ளார்" என்றவரிடம் தொடர்ந்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

"பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது யாரைவைத்துதங்கதமிழ்ச் செல்வன் கட்சியைப் பலப்படுத்தத் திட்டம்?''

"தினகரன் அணியில் பன்னீர்செல்வம் விரைவில் இணைவார். எங்களுடைய துணைப் பொதுச் செயலாளர் நினைத்தால், எதையும் முடிக்கும் வல்லமைகொண்டவர். பன்னீர்செல்வத்தை, அணிக்குக் கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. அவர், எங்களது அணியில் இணைந்த பிறகு எடப்பாடி பழனிசாமியும் கட்சியில் தானாக வந்து இணைவார்''.

"எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க சசிகலா தரப்பில் இருந்து பேரம் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுதொடர்பாக சரவணன் எம்.எல்.ஏ பேசிய வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறதே?” 

''எங்கள் தரப்பில் இருந்து பணம் கொடுக்கவில்லை என்று அந்த வீடியோவில் தெளிவாகக் கூறுகிறார் சரவணன். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து தரப்பட்டதாகக் கூறுகிறார். அதனால், அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்''.

"தினகரனின் அடுத்த இலக்கு?''

மதுசூதனன் "தற்போது எங்களுக்கு 40 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. தொடர்ந்து, ஆதரவு அதிகரித்து வருகிறது. விரைவில், மாவட்டம் வாரியாக பொதுக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஆலோசனைகள் போய்க்கொண்டிருக்கிறது''.

தங்க தமிழ்ச்செல்வன் சொன்ன கருத்துப் பற்றிப் பன்னீர்செல்வம் அணியில் உள்ள மதுசூதனிடம் பேசினோம். "சசிகலா குடும்பமே வேண்டாம் என்ற வெளியே வந்தவர் பன்னீர்செல்வம்.அப்படிப்பட்டவர், ஏன் அந்த அணிக்குப் போகப் போகிறார்? தற்சமயத்துக்குப் பணம் வேண்டும் என்ற காரணத்தால்தான் இவ்வாறு பேசி வருகின்றனர். அம்மாவின் பணத்தைவைத்து வியாபாரம் நடத்த அந்த அணியில் இருப்பவர்கள் திட்டமிட்டுள்ளனர்.அது மட்டுமன்றி, அமைச்சர்களைக் கப்பம் கட்டுமாறும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பன்னீர்செல்வத்தின் பெயரைக் கலங்கப்படுத்த இவ்வாறான வேலைகளைச் செய்து வருகின்றனர்.குற்றம்சுமத்தப்பட்ட தினகரனை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்? தினகரனைப் பிடிக்காமல்தானே அவரை ஒதுக்கிவைத்தார். அதனால் மீண்டும் சேரும் எண்ணமில்லை'' என்றார் உறுதியாக.


டிரெண்டிங் @ விகடன்