மருந்துக் கடைகளில் ‘மருந்து’ இல்லை! - நோயாளிகளை வதைக்கிறதா ஜி.எஸ்.டி. விளைவு?

மெடிக்கல் கடைகள்

ரபு நாடுகளுக்கு அடிக்கடிச் சென்று வரும் தொழிலதிபர் அவர். சேலம், குகை பகுதியில் உள்ள பிரபலமான மருந்துக் கடைக்குச் செல்கிறார். 'மூன்று மாதத்துக்குத் தேவையான மருந்துகளைக் கொடுங்கள்' என டாக்டர் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷனை நீட்ட, 'முப்பது நாள்களுக்கு மட்டுமே மருந்து ஸ்டாக் உள்ளது. இதே காம்பினேஷனில் வேறு கம்பெனியின் மருந்து பொருள்கள் உள்ளன. உங்களுக்கு விருப்பம் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள்' எனக் கடைக்காரர் கூற, 'என்னதான் பிரச்னை?' என அதிர்ச்சியோடு விசாரித்தார் தொழிலதிபர். 'ஜி.எஸ்.டி' என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார் கடைக்காரர். 

“இது ஏதோ சேலத்தில் நடந்த சம்பவம் மட்டுமல்ல. நாடு முழுவதும் மருந்துக் கடைகளைத் தேடி ஓடும் ஒவ்வொரு பொதுமக்களும் இதே பிரச்னையை சந்திக்கின்றனர். எங்கள் சிரமங்களுக்கு அரசும் தீர்வைத் தரவில்லை. மருந்து நிறுவனங்களும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மருந்தைக் கொள்முதல் செய்யாமல் மௌனம் காக்கிறோம்" என ஆதங்கத்தோடு விளக்கத் தொடங்கினார் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.கே.செல்வன். தொடர்ந்து நம்மிடம் பேசினார். 

செல்வன்"மருந்துகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை ஐந்து சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். இதனால், அனைத்து மருந்துகளுக்கும் 2 முதல் 5 சதவீதம் வரையில் விலை உயரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மருந்தைக் கொள்முதல் செய்யும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் ஆறு சதவீத சுங்கவரியை செலுத்துகின்றனர். அவர்கள் வரி செலுத்தியதற்கான ஆவணங்களை, 'நாங்கள் சமர்ப்பிக்க வேண்டும்' என்று அரசு சொல்கிறது. மருந்தை குடோனில் இருந்து அனுப்பும்போதே, வரி கட்டிவிட்டுத்தான் வெளியே அனுப்புகிறார்கள். நாங்கள் மருந்து பொருட்களை பர்சேஸ் செய்யும்போது, அவர்கள் சுங்கவரி செலுத்தியதற்கான ஆவணங்களை, நாங்கள் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், 300 பக்கங்களுக்கு மேல் ஆவணங்களைத் தர வேண்டியது வரும். ஒரு கம்பெனிக்கு 300 பக்கம் என்றால், நாங்கள் 350 கம்பெனிகளின் பொருட்களைக் கையாள்கிறோம். இத்தனை நிறுவனங்களுக்கும் ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் என்றால், ஐம்பது பணியாளர்களை வைத்து, நாங்கள் ஐ.டி நிறுவனம்தான் நடத்த வேண்டும். இந்த ஆறு சதவீத சுங்கவரியில், எந்த ஆவணமும் கொடுக்காமல், 2.40 சதவீத தொகையை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால், ஒவ்வொரு மாத்திரைக்கும் நாங்கள் நஷ்டத்தை சந்திக்கிறோம். அதற்கான அவசியம் என்ன இருக்கிறது? எனவேதான், மருந்து கம்பெனிகளிடம் இருந்து சரக்குகளை வாங்காமல் புறக்கணிப்பு செய்கிறோம். 

இப்படியொரு பிரச்னை வரும் என்று தெரிந்து, கடந்த 12 ஆம் தேதி அரசின் பார்மாசூட்டிகல் மற்றும் ரசாயனத்துறை கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், சுங்கவரி தொடர்பான சிக்கல்களுக்கு, எந்தத் தீர்வையும் அரசு அளிக்கவில்லை. மறுநாள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கூட்டம் நடத்தின. 'தயாரிப்பு நிறுவனங்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என நாங்கள் வைத்த கோரிக்கைக்கு, அவர்கள் பதில் சொல்லவில்லை. எனவேதான், மருந்துகளைத் திருப்பி அனுப்பி வருகிறோம். வரும் 23 ஆம் தேதியில் இருந்து 5 ஆம் தேதி வரையில் மருந்து தட்டுப்பாடு அதிகளவில் ஏற்படும். எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எதிர்ப்பைக் காட்டுகிறோம். உதாரணமாக, இதய நோய் அபாயம் உள்ளவர்களுக்கான ஐசோடிரில் மாத்திரையின் மதிப்பு வெறும் 20 பைசாதான். இந்த மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக் கொண்டால், மூன்று மணி நேரம் அந்த நோயாளிக்கு வரக் கூடிய ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இந்த மருந்தைத் திருப்பி அனுப்புவதால், பாதிக்கப்படப் போவது பொதுமக்கள்தான். இதை சீர்செய்வதற்காக, இன்று 15 முக்கிய நிறுவனங்களை அழைத்துப் பேச இருக்கிறோம். எங்களுக்குத் தீர்வு கிடைக்காத வரையில், மருந்துகளை வாங்குவதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம்" என்றார் உறுதியாக. 

“நாடு முழுவதும் 7 லட்சம் சில்லறை வணிகர்கள் மருந்து விற்பனையை நம்பியுள்ளனர். இவர்களை நம்பி ஒன்றரை லட்சம் மொத்த விற்பனையாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 34 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன. மருந்துக் கொள்முதலை நிறுத்திவிட்டால், வரக்கூடிய அபாயம் சாதாரணமாக இருக்காது. இதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட உள்ளனர். மருத்துவருக்குப் பணம் கொடுக்க வழியில்லாமல், மருந்துக் கடைக்காரர்களிடம் மருந்தைக் கேட்டு வாங்கிச் சாப்பிடும் ஏழை தொழிலாளர்கள்தான் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கடைக்காரர்கள் அவதிப்படுகின்றனர். தீர்வைக் கொடுக்க வேண்டியது அரசும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும்தான்" என ஆதங்கப்படுகின்றனர் மருந்து கடைக்காரர்கள். 

மருந்து தயாரிப்பு நிறுவனப் பிரதிநிதிகளிடம் பேசினோம். "மருந்துக் கடைகளுக்கு ஏற்படப் போகும் இழப்புகளைச் சரி செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் விரைவான தீர்வை அளித்தால் மட்டுமே, அனைத்து இடங்களுக்கும் மருந்து சென்று சேரும். வரிவிதிப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் முடிவுக்கு வராததால், அனைத்து நிறுவனங்களும் வரும் 24 ஆம் தேதியோடு விற்பனையை நிறுத்த இருக்கின்றன. இதை மிக முக்கியமான பிரச்னையாக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது வரையில் ஆறு நிறுவனங்கள் மட்டுமே இழப்பீட்டை ஏற்பது குறித்து முடிவைத் தெரிவித்துள்ளன. அதில், மைக்ரோ, லுபின், டாக்டர்.ரெட்டிஸ், கிளாக்ஸோ, யுஎஸ்வி உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். மற்ற நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது" என்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!