வெளியிடப்பட்ட நேரம்: 20:12 (19/06/2017)

கடைசி தொடர்பு:20:12 (19/06/2017)

பள்ளி சென்றவர் பலியானது எப்படி? கேந்திரிய வித்யாலயா பள்ளி மர்மம்!

கேந்திரிய வித்யாலயா பள்ளி

துரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சுந்தரபாண்டியன் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெற்றோர்களையும், மதுரை மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கேந்திரிய வித்யாலயாவில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டுமென்பது பல பெற்றோர்களின் கனவு. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் இந்தப் பள்ளியில் பொதுமக்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மாவட்ட ஆட்சியர், மத்திய அமைச்சர்கள், எம்.பி-க்களுக்குத் தனியாக கோட்டா உள்ளது. அதனால், பள்ளியில் சேர விரும்புகிறவர்கள், சிபாரிசுக் கடிதங்கள் பெற இரண்டு, மூன்று லட்சம் செலவு செய்கிறார்கள்.

இவ்வளவு பெருமை வாய்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பற்றி சமீபத்தில் வருகிற தகவல்கள் பெருமையாக இல்லை. சுந்தரபாண்டியன் மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு கேள்விக்குறியாகி வருகிறது. சமீபத்தில் வடநாட்டில் மாணவர் ஒருவர், சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ, சமுக ஊடகங்களில் பரவி, அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தது. இந்த நிலையில்தான் மதுரையில் கடந்த 17-ம் தேதி நிகழ்ந்த ப்ளஸ் ஒன் மாணவன் சுந்தரபாண்டியனின் மர்ம மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

மதுரை செல்லுார் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரபாண்டியன். மணப்பாறை கிளைச்சிறையில் வார்டனாக உள்ளார். இவரது மகன் சுந்தரபாண்டியன். மதுரை நரிமேட்டில் இருக்கும் கே.வி. பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். இந்த ஆண்டு ப்ளஸ் ஒன் செல்வதால், தனக்கு எந்த குரூப் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்பதற்காகத் தன் தந்தையுடன் பள்ளிக்குச் சென்றுள்ளார். சுந்தரபாண்டியன், அங்கு நண்பர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கவே, அவரை விட்டுவிட்டு அவருடைய தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார்.

அதன் பிறகுதான் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

அழுதுகொண்டிருந்த தாயார் அமுதாவுக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். ‘‘சுந்தரபாண்டி, அவன் அப்பாவோடு பள்ளிக்குச் சென்றான். பதினொன்றாம் வகுப்புச் செல்லும் தனக்கு  வரலாறு பிரிவு கிடைத்துள்ளதா என்பதைப் பார்த்துவிட்டு, நண்பர்களைப் பார்க்க செல்வதாகச் சொல்லிவிட்டு சில பேருடன் சென்றுள்ளான். மதியம் வீட்டுக்கு வேறு ஒருவரோடு பைக்கில் வந்தான். முகத்தில் கடுமையான காயம் இருந்தது, எப்படி ஏற்பட்டது என்று கேட்டதற்கு, ‘கீழே விழுந்துவிட்டேன்’ என்று கூறினான். கொஞ்ச நேரத்தில மயங்கிப் படுத்துவிட்டான். பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு ஆட்டோவில் கொண்டுசென்றோம். அங்கே, ‘பார்க்க முடியாது’ எனச் சொல்லிவிட்டார்கள். ஜி.ஹெச்-க்குக் கொண்டுபோனோம். ஆனால், வழியிலேயே இறந்துவிட்டான்’’ என்றார் அழுதபடி. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல பள்ளி பிரின்சிபால் அங்கு வந்தார்.

சுந்தர பாண்டி பெற்றோர்கள்

பிரின்சிபல் செல்வராஜிடம் பேசினோம். ‘‘ஜூன் 19-ம் தேதிதான் பள்ளியே திறக்கப்படுகிறது. ஆனால், பள்ளிக்குள் மாணவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு மாணவன் சுந்தரபாண்டி கொலை செய்யப்பட்டுள்ளான் என்ற தகவலை எனது நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் பார்த்ததாகக் கூறினார். அதைக் கேட்டதும் அதிர்ந்து போனேன். சுந்தரபாண்டி பள்ளியின் வாசல்வரை வந்திருக்கிறான். 11-ம் வகுப்பு சேர்க்கை அனுமதி ரிசல்ட் ஒட்டியிருந்தோம். அதைப் பார்க்க வந்திருக்கான். அது மட்டுமில்லாமல் அன்று பள்ளியில் சி.ஏ எக்சாம் நடைபெற்றது. அதனால், வேறு யாரும் பள்ளிக்குள் வர அனுமதி இல்லை. எதற்கும் சந்தேகப்பட்டு சி.சி.டி.வி கேமராவிலும் செக் செய்தேன். அப்படி எந்த ஒரு சண்டையும் பள்ளிக்குள் நடக்கவில்லை. இருந்தாலும் சுந்தரபாண்டியுடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரணை செய்வேன்’’ என்றார்.

போலீஸாரிடம் விசாரித்தபோது, ‘‘சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம். பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பள்ளி வளாகத்துக்குள் அப்படி ஒரு சம்பவம் நடந்த மாதிரி தெரியவில்லை. இதுபோல் இதற்கு முன்பும் நண்பர்களுடன் சண்டை போட்டு காயங்களுடன் வந்திருக்கிறார். என்ன பிரச்னை என்பதை வீட்டில் மறைத்திருக்கிறார். அவர் நண்பர்களின் வட்டாரத்தில் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

இந்தப் பிரச்னைக்குப் பின் கே.வி. பள்ளியைப் பற்றி ஏகப்பட்ட புகார்களைப் பொதுமக்கள் கூறி வருகிறார்கள். அட்டகாசம் செய்யும் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் குறைந்தபட்ச கண்டிப்பைக்கூட காட்டுவதில்லையாம். இதனால், பள்ளியில் ரவுடி மாணவர்கள் ஒரு பக்கமும், அவர்களால் துன்புறுத்தப்படும் மாணவர்கள் ஒரு பக்கமும் என்று பிரிந்து கிடக்கிறார்களாம். சமீபத்தில் இதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை மூன்று மாணவர்கள் சேர்ந்து தாக்கியிருக்கிறார்கள். இதைப் பற்றி புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பள்ளிக்கூடங்கள் கொலைக்களங்களாக மாறி வருவது அச்சத்தை தருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்