Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“மதுரை கள்ளழகருக்கே நான்தான் லைட் அடிப்பேன்” - பெட்ரோமாக்ஸ் தாத்தா பெருமிதம்! #VikatanExclusive

பெட்ரோமாக்ஸ் விளக்கை வாடகைக்குவிட்டு அதன் வெளிச்சத்தில் தன் வாழ்க்கையை ஓட்டிவருகிறார் மதுரை மேலூர் ஏ.வல்லாளப்பட்டி கிராமத்துப் பெரியவர் பெரியகருப்பன்.

பெட்ரோமாக்ஸ்

மின்சாரம் இல்லாத காலங்களில் இந்த விளக்குக்கு பயங்கர கிராக்கி.  இதை ‘அரிக்கன் விளக்கு' என்றும் கூறுவர். அந்நாளில் நிகழும் பெருவிழாக்களிலும், இரவு நேரப் பயணங்களிலும் இதைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவர். இந்த நவீன காலத்தில், இதுபோன்ற ஒரு விளக்கு இருந்தது என்று அறியகூட முடியவில்லை. காரணம், அப்படி ஒரு விளக்கு இருந்ததற்கான தடமே இல்லை. அந்த விளக்கு பற்றியும், தற்போது அது வழக்கொழிந்துபோனதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும்  `பெட்ரோமாக்ஸ் தாத்தா' என்கிற பெரியகருப்பன் என்பவரின் வீட்டுக்குச் சென்றோம். அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டது...

“எனக்கு 89 வயசு ஆகுது. என்னை `பெட்ரோமாக்ஸ் தாத்தா'ன்னு சொன்னால்தான் எல்லாரும் தெரியும். ஏன்னா, திருவிழாவுக்கு நான் இந்த விளக்கோடு போறதால குழந்தைகள் எல்லாம் என்னை `பெட்ரோமாக்ஸ் தாத்தா'ன்னுதான் கூப்பிடுவாங்க. இப்போ, பெரியவங்களும் அப்படித்தான் கூப்பிடுறாங்க. எங்க ஊர் ஏழு மந்தை கிராமம், அவ்வளவு பெரிய ஊர்! இங்கே `திருவிழாக்கு லைட் போடுற பெரியவர் வீடு எங்கே இருக்கு?'னு கேட்டா புள்ளிவெச்ச மாதிரி கரெக்டா அட்ரஸ் சொல்லிடுவாங்க.''

Petromax

``இந்தத் தொழிலை எத்தனை வருஷங்களா செய்றீங்க?''

``எனக்கு 60 வருஷங்களுக்குமேல் இதுதான் தொழில். அஞ்சு ரூபாய் காலம் முதல் இப்போ வரை இந்தத் தொழில்தான் செய்றேன். சமுதாயம் முன்னேற முன்னேற இந்த விளக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருச்சு. இப்போ இந்த விளக்கு அரிய பொருள்கள்ல ஒண்ணாகிடுச்சு. மேலூர் ஜில்லா முழுக்கத் தேடினாலும் ஒருசில இடங்கள்ல மட்டும்தான் கிடைக்கும். நான் வெச்சிருக்கிறது எல்லாமே அந்தக் காலத்து பொருள்கள்தான்.  மூணு கிலோவுக்குமேல வெயிட் இருக்கும். சைக்கிள்ல வெச்சுதான் திருவிழா, திருமண ஊர்வலம்னு எல்லா சடங்குகளுக்கும் போவோம்.  பத்து பெட்ரோமாக்ஸ் லைட் இருந்தா போதும், ஒரு மினி திருவிழாவையே கொண்டாடிடலாம். இப்பலாம் இதை யாரும் அதிகம் தேடி வர்றதில்லை. ஆனா, கரன்ட் இல்லாத இடத்துக்கு இன்னும் நாமதான் கரன்ட் சப்ளே. நிறைய வெளிச்சத்துக்கு பெட்ரோமாக்ஸ், லேசான வெளிச்சத்துக்கு பேபி லைட். அவ்வளவுதான் நம்ம வாழ்க்கை.

``இந்தத் தொழில்ல நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஏதாவது...''

அழகர்கோயில் மாங்குளம் கிராமத்தில் ஒரு காட்டுப் பகுதியில் திருவிழா நடக்கும். அங்கே 20 லைட் கொண்டுபோயிருந்தோம். நல்லபடியா திருவிழா முடிஞ்சு வரும்போது காத்தும் மழையும் பின்னி எடுக்குது. எங்களுக்கா... என்ன செய்றதுன்னே புரியலை. குழந்தைங்க, பெண்கள்னு பலரும் இந்த விளக்குகளை நம்பி நடந்து வர்றாங்க. கட்டுக்கு அடங்காத காற்று அடிக்கவே பெட்ரோமாக்ஸ் லைட் ஒவ்வொண்ணா  அணைஞ்சுக்கிட்டே வருது. என்ன பண்றதுனு தெரியலை. இயற்கையின் சக்திக்கு முன்னாடி நாம தாக்குப்பிடிக்க முடியுமா? ஆனாலும் இருபது விளக்குகள்ல ரெண்டு விளக்குகள்  மட்டும் அணையாம எரிஞ்சுது. அந்த ஒளியில்தான் நாங்க எல்லாரும் வீடு வந்து சேர்ந்துதோம். என்னை நம்பி வந்தவங்களை வீட்டுல சேர்த்த பிறகுதான் நான் நிம்மதியானேன்.''

லைட்

பெட்ரோமாக்ஸ் லைட் சீஸன்ல நல்லா ஓடும். மதுரை சித்திரைத் திருவிழாவுக்காகப் போட்டிருந்த வாழைப்பழக் கடை, பொரிக்கடை, அல்வா கடைனு எல்லாத்துக்கும் நாமதான் வெளிச்சம். அழகருக்கே நான்தான் லைட் அடிப்பேன்'' என்று சிரித்தார்.

``உங்க குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்க!''

``எனக்கு நாலு குழந்தைங்க. எல்லாரும் செட்டிலாகிட்டாங்க. நான் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டோடுதான் வாழ்க்கையை நடத்துறேன் . அந்தக் காலத்துல நாடகம், தெருக்கூத்துன்னு இரவு நேர ஆட்டத்துக்கும் போய் வருவேன். விடியவிடிய லைட் அணையாமப் பாத்துப்பேன். பொழுதுபோறதே தெரியாது. ஊர்ல நடக்கும் நல்லது கெட்டதுக்கு எல்லாத்துக்கும் நம்ம லைட்தான் இங்கே பிரகாசிக்கும். இதுபோக விவசாயமும் செய்றேன். அதையும் இதையும் சேர்த்து செய்றதால, என் பொழப்பு எந்தக் குறையும் இல்லாம ஓடிக்கிட்டிருக்கு. இப்பவும் நம்ம பெட்ரோமாக்ஸ் லைட்டை விரும்பும் மக்களும்  இருக்காங்க'' என்று தன் தொழிலை விட்டுக்கொடுக்காமல் பேசினார் `பெட்ரோமாக்ஸ் தாத்தா' பெரியகருப்பன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement