Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“வைத்தியர் வேர்புடுங்கி... வயித்தெரிச்சல் தாலுகா... கொலைகார நாடு!” - நெல் திருவிழாவில் அதிர வைத்த விவசாயி

விவசாயி

திருத்துறைப்பூண்டியில் வருடம்தோறும் நடைபெற்றுவரும் தேசிய நெல் திருவிழாவின் பதினோறாம் ஆண்டு நிகழ்வு கடந்த இரு நாள்களாக நடைபெற்று முடிந்தது. இரண்டு நாள் திருவிழா நிறைவடையப்போகிற நேரம் 18.06.2017 மாலை 03.30 மணி இருக்கும், வந்திருந்த விவசாயிகள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக்கொண்டிருந்தார்கள். அரங்கத்தில் ஆங்காங்கே குழுவாக நிறைவுரைக்காக விவசாயிகள் காத்துக்கொண்டிருந்தனர். 2 நிமிடங்களில்சுருக்கமாகப் பேசுவார் என அறிவிக்கப்பட்டதும் எழுந்தார் அந்தப் பெரியவர். அவரையும் அவரது தோற்றத்தையும் பார்த்ததும் மேலும் சிலர் வாசலை நோக்கி நடைகட்டத் தொடங்கினர்.
 
தன் பேச்சைத் தொடங்கினார் அந்த இயற்கை விவசாயி. குரலையும் தெளிவையும் உணர்ந்த சிலரது கால்கள் அருகிருந்த நாற்காலிகளைத் தேடி அமர்ந்தன.  

“விவசாயி எதுக்கு விளைவித்த பொருளை விற்கனும்? ஸ்டாக் பண்ணுங்க. ஒரு நாளைக்கு மொத்தம் பன்னிரண்டு லிட்டர் பால் கிடைக்கிறதா! சேமிங்க. அதை அப்படியே தயிராக்குங்க. வெண்ணையாக்குங்க. நெய்யாக்குங்க. பதினைந்து நாள் மார்க்கெட்டுக்குப் பால் போகலைன்னா. விவசாயி வீடு தேடி அதிகாரி வருவாங்க. அப்ப சொல்லுங்க பாலுக்கு எவ்வளவு விலைன்னு.

மார்க்கெட்டுல ஒரு மாம்பழம் என்ன விலை விக்குது? வெறும் ருசிக்கு அவ்வளவு மதிப்புன்னா, ருசியோடு சத்தும் சேர்ந்து தருகிற தேங்காய்க்கு எவ்ளோ இருக்கணும்?ஆனா கொள்முதல் விலை பத்து ரூபாய் கூட தாண்டலை. அதுக்கு நாமதான் காரணம். எனக்கு பக்கத்து வீட்டுல இருக்குற விவசாயில்லாம் பத்து கிலோ அறுபது ரூபாய்ன்னு வெண்டைக்காயை ஏற்றுமதி செய்கிறார். ஆனால், நான் ஒரு கிலோ வெண்டைக்காய் 200 ரூபாய்க்கு  விற்கிறேன். எல்லாவற்றையும் மார்க்கெட்டுக்கு அனுப்புவதை நிறுத்துங்கள். ஸ்டாக் செய்யுங்கள். உங்கள் தேவைக்காக பதினைந்து நாள் நீங்கள் சேமித்த பொருள்களை வத்தலாக விற்றுப் பாருங்கள். சராசரிக்கும் அதிகமான இலாபம் கிடைக்கும்.

அதே நேரம் போதுமான உணவுப் பொருள்கள் சந்தைக்கு வராததன் காரணமாகப் பொதுமக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கவனம் விவசாயிகள் பக்கம் திரும்பும். முதலில் விவசாயிகள் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பணும். 1978இல் விவசாயிகளையே படுகொலை செய்த அரசுங்க. ஊருக்கே சோறுபோட்ட விவசாயிகளைச் சுட்டுக்கொன்னுட்டாங்க. எல்லாரையும் நம்மை நோக்கி வரவைக்கனும். இதுக்கு ஒரே வழி நாம நம்மை நம்பி வாழத் தொடங்க வேண்டும். 

விவசாயி

விழிப்புஉணர்வற்ற மக்களையும், பொறுப்பற்ற அரசியல்வாதிகளையும், ஆணவமான அதிகாரிகளையும் மாற்ற வேண்டுமென்றால் விவசாயப் புரட்சி நடக்கவேண்டும். சேமித்து செலவழிப்போம். அன்றாடம் செலவழித்து விட்டால் சேமிக்க ஏதும் இருக்காது. நம்மிடம் இருக்கும் விதையும், வித்துகளும், பயிரும், உணவுப் பொருள்களும்தான் நம்முடைய எதிர்காலமும் நாட்டுடைய எதிர்காலமும்” 
எனப் பேசிக் கொண்டிருப்பதற்குள், இரண்டு பேர் மூன்று முறை “போதும் நேரம் ஆகிவிட்டது” என அவரது செவிக்குள் ஓதியதன் பொருட்டு உரையை நிறுத்தினார். வந்திருந்த விவசாயிகளுக்கு மேலும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ள ஏதுவாக பேசியவரின் தொலைபேசி எண் முகவரியைச் சொல்லச் சொல்லுவார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அப்படி அந்த விவசாயிடம் உங்களுடைய முகவரி, தொலைபேசி எண் சொல்லுங்க என்றவுடன்,

வைத்தியர் வேர்பிடுங்கி
பொறாமையூர்
கெட்டெண்ணம் போஸ்ட்
வயித்தெரிச்சல் தாலுகா
வாழப் பொறுக்கா மாவட்டம்
கொலைகார நாடு
 
எனத் தன் முகவரியை ஒரு ஒரு வரியாயாகச் சொல்ல சொல்ல அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. பேசி முடித்தவுடன் அரங்கத்தை விட்டு வெளியேறினார் அந்த இயற்கை விவசாயி. பலர் வைத்தியர் வேர்பிடுங்கியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
 
அவருடன் பேசுகையில், அவரது பெயர் ஜெயகிருஷ்ணன் என்பதும் அவர் வாஞ்சிநாதனின் பேரன் என்பதும் தெரிய வந்தது. தற்போது திருச்சியில் வசித்து வரும் அவர் பாரம்பர்ய இயற்கை மருத்துவராக இருக்கிறார். இன்னொரு கூடுதல் தகவல் இயற்கையோடு இணைந்து வாழ்வதற்காகத் தன் வீட்டில் மின்சார வசதியே ஏற்படுத்தாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பெருமிதம் கொள்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement