Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அடுத்து என்ன?” ஐ.டி ஊழியர்களின் விவாதம்

ஐ.டி துறை

து 2014-ல் நடந்த சம்பவம்... பிரபல மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய சசிரேகா என்ற பெண்மணி அந்த நிறுவனத்தால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த வருடத்தில் மட்டும் அந்த நிறுவனம் சசிரேகாவையும் சேர்த்து சுமார் 25,000 பேரைப் பணிநீக்கம் செய்திருந்தது. ஆனால், சசிரேகா மட்டும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காரணம், சசிரேகா பணியிலிருந்து நீக்கப்பட்டபோது, அவர் கர்ப்பமாக இருந்தார். எந்தவொரு பெண் ஊழியரும் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரைப் பணிநீக்கம் செய்யக்கூடாது என்கிற நிறுவன விதிமுறை இருந்தது. அவரது உடல்நிலை அந்த நிறுவனத்துக்குத் தெரிந்திருக்காத நிலையில், தாங்கள் பணிநீக்கம் செய்துவிட்டதாகக் கூறி, அவரின் பணிநீக்க ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது அந்த நிறுவனம். 

சென்ற ஆண்டு, வேறு ஒரு பிரபல மென்பொருள் நிறுவனமும் தனது ஊழியரான ரமேஷா என்பவரை நிர்பந்தப்படுத்தி பணியிலிருந்து விலகிக்கொள்ளச் செய்ததாக அவர் தரப்பிலிருந்து புகார் எழுப்பப்பட்டது. இத்தனைக்கும் ரமேஷாவிற்கு 15 வருட அனுபவமும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் அவரது பணிசார்ந்து நல்ல ரேட்டிங்கும் தரப்பட்டிருந்தது. ஆனால், அவரைப் பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே குறைந்த ரேட்டிங் கொடுத்து வெளியேற்றியது என்று அவரது புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
ரமேஷா இன்னும் தனக்கு நீதி கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறார்.

"இதுபோன்று நடப்பாண்டில் மட்டும் 56,000 பேர்வரை ஐ.டி. நிறுவனங்களில் திடீரென எந்தக்காரணமும் இல்லாமல் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார். தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான மன்றத்தின் பொதுச்செயலாளர் சதீஷ். தற்போது, இந்தியாவில் நிலவிவரும் திடீர் ஐ.டி, துறை சறுக்கல்கள் மற்றும் அவைசார்ந்த பொருளாதார, தனிமனித பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த கருத்தரங்கம் சென்னை தரமணியிலுள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உஷா ராமநாதன், இந்தியத் தொழிற்சங்க மையத்தின் தலைவர் சஞ்சய் சிங்வி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 

56,000 ஐ.டி ஊழியர்கள் !

ஐ.டி துறைகருத்தரங்கிற்கு இடையே நம்மிடம் பேசிய சதீஷ், "மென்பொருள் நிறுவனங்களில் 'லே-ஆஃப்' என்னும் கூட்டாகப் பணிநீக்கும்முறை பல வருடங்களாக நடைமுறையிலிருந்து வருகிறது. ஆனால், முறையாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் பணியிலிருந்து விலக்கப்படுகிறார்கள். பெருநகரங்களில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து மட்டும் இதுவரை 56,000 பேர் அதுபோன்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டது அல்ல; இன்னும் அதிகரிக்கலாம்" என்றார்.   

இயந்திரமா, பொருளாதாரமா?

இப்படி ஒட்டுமொத்தமாக ஊழியர்களை நீக்கம் செய்வதன் பின்னணி என்ன? 

"இனி மனிதர்களுக்குப் பதிலாக இயந்திரங்களே 'ப்ரோகிராமிங்' வேலைகளைச் செய்யும், அதற்கான ஆயத்தங்களைத்தான் பெரும்பாலான நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதிதான் இந்த ஒட்டுமொத்தப் பணிநீக்கம். மேலும், வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் அண்மையில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் மற்றும் அதற்குப்பிறகான அந்நாட்டு அரசின் செயல்பாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக அவர்களைப் பாதித்துள்ளன. அதன் தாக்கமும் இதற்கு ஒரு காரணம்” என்கிறார்கள் ஐ.டி ஊழியர்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்.

இயந்திரங்களிடம் சரணடைகிறோமா நாம்?

கருத்தரங்கத்தின் முதல்நாள் நிகழ்வின் முடிவில் பேட்டியளித்த வழக்கறிஞர் உஷா ராமநாதன், "ஐ.டி துறையைப் பொறுத்தவரை உஷா ராமநாதன்ஊழியர்கள், குறிப்பாகப் பெண் ஊழியர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளால் மிகவும் பாதிப்படைகிறார்கள். சுதந்திரத்துக்கு முன்பும், அதற்குப் பிறகான காலகட்டத்திலும் வீட்டில் அடைந்து அடிமைப்பட்டிருந்த பெண்களை மீட்கப் பலரும் போராடினார்கள். தற்போதைய சூழலில் வேலை போய்விடக்கூடாது என்பதற்காக, இரவுபகல் பார்க்காமல் பெண்கள் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து உழைக்கிறார்கள். இதனால், மன உளைச்சல், உடல்ரீதியான பாதிப்புகள் எனப் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அது இன்னும் இரட்டிப்பாகிறது. இன்றளவும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு இல்லை. கிட்டத்தட்ட இதுவும் அடிமைப்பட்டுக் கிடப்பது போன்றதுதான். முன்பு மனிதர்களிடம், தற்போது இயந்திரங்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்” என்றார்.

இதுபோன்ற தொடரும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது?

நாட்டில் ஏனைய தொழில்புரிவோர் அத்தனை பேரும் தொழிலாளர்கள் எனப்படும்போது ஐ.டி துறையில் வேலைசெய்யும் ஊழியர்களையும் தொழிலாளர்களாகப் பாவிக்கவேண்டும் என்பதே இவர்களது முதல் மற்றும் முக்கியக் கோரிக்கையாக இருக்கிறது. "ஐ.டி துறையினருக்கான தொழிற்சங்கம் (Trade Union) ஒன்றைக் கொண்டுவரும் முன்னெடுப்புகள் நடந்துவருகின்றன. அதன்மூலம், ஊழியர்களின் உரிமைகளை மீட்டெடுக்க ஆவன செய்யப்படும்" என்கின்றனர் ஐ.டி ஊழியர்கள் மன்றத்தினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement