மாட்டிறைச்சித் தடையால் சட்டப்பேரவையில் கொந்தளித்த அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள்! | Beef Ban issue : Admk support Mlas Walkout from Assembly

வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (20/06/2017)

கடைசி தொடர்பு:14:07 (20/06/2017)

மாட்டிறைச்சித் தடையால் சட்டப்பேரவையில் கொந்தளித்த அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள்!

மாட்டிறைச்சி விவகாரத்தில், அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்களான கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் வெளிநடப்புசெய்துள்ளனர். 

TN Assembly

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் சிறப்புக்கவன ஈர்ப்புத் தீர்மானத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டுவந்தார். அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள கால்நடைச் சந்தை கட்டுப்பாடு சட்டத்தை, தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று எதிர்கட்சிகள் கோரின. 

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது. மாட்டிறைச்சித் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளது. எனவே, வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர், மக்களின் மனநிலைக்கேற்ப இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ஆனால், முதல்வரின் பதிலில் திருப்தியில்லை என்று கூறி, மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்புசெய்தன. மேலும், அப்போது அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்புசெய்தனர். இதனால், பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

"கால்நடைச் சந்தை கட்டுப்பாடு சட்டத்துக்கு, முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்" என்று தனியரசு கூறினார்.
 

"இதைத்தான் உண்ண வேண்டும் எனக் கூற யாருக்கும் அதிகாரமில்லை. கால்நடைச் சந்தை கட்டுப்பாடு சட்டத்தைத் தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது" என்று கருணாஸ் கூறினார்.
 


[X] Close

[X] Close