வட இலங்கை முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து நீங்கியது!

இலங்கை விக்னேசுவரன், சம்மந்தன்

டக்கு இலங்கை மாகாண முதல்வர் விக்னேசுவரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானக் கடிதமானது ஆளுநரிடமிருந்து திரும்பப்பெற்றுக்கொள்ளப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பதவிக்கு இருந்துவந்த நெருக்கடி இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது. 


முன்னதாக, மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோர் மீது ஊழல், முறைகேடுக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும்வரை, அவர்கள் இருவரும் ஒரு மாதம் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிநிற்கவேண்டும் என கடந்த வாரம் முதலமைச்சர் விக்னேசுவரன் கேட்டுக்கொண்டார். அவர்கள் மீது முதலமைச்சர் அமைத்த விசாரணைக் குழுவில் சாட்சியம் அளிக்கவேண்டியவர்கள், குறிப்பாக அந்தந்த துறை சார்ந்த பணியாளர்கள், விசாரணை நடந்தபோது ஆஜராகவில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் அதே துறைகளில் தொடர்ந்து நீடிப்பதே காரணம் என்று முதலமைச்சரிடம் கூறப்பட்டது. அதை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டநிலையில், இருவரும் சார்ந்த தமிழரசுக் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. 


விக்னேசுவரன் மீது ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் தமிழரசுக் கட்சியானது, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதில் இறங்கியது. வட இலங்கை மாகாண சபையில் ஆளும் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 30 உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சியின் சார்பில் 15 உறுப்பினர்கள் இணைந்து, ஆளுநரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானக் கடிதம் அளித்தனர். 


கூட்டணியில் அதிக இடங்களைக் கொண்டுள்ள கட்சி எனும் கோதாவில், தமிழரசுக் கட்சி இம்முடிவை எடுத்தது. ஆனால் கூட்டணியில் உள்ள டெலோ, ப்ளாட், ஈபிஆர்.எல்.எஃப். கட்சிகளும், தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மக்கள்மத்தியில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவு பெருகியதை அடுத்து, எதிர்ப்பு தெரிவித்த தமிழரசுக் கட்சித் தரப்பு பின்வாங்கியது. 


அமைச்சர்கள் டெனீஸ்வரன், சத்தியலிங்கம் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று விக்னேசுவரனுக்கு சம்மந்தன் உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்ட விக்னேசுவரன், அந்த இரு அமைச்சர்களையும் விசாரணையின்போது விலகியிருக்குமாறு தான் வற்புறுத்தப்போவதில்லை என்று விக்னேசுவரனும் சம்மந்தனுக்கு உறுதியளித்தார். அதைத் தொடர்ந்தே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதில்லை என விக்னேசுவரனுக்கு சம்மந்தன் கடிதம் அனுப்பியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!