வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (20/06/2017)

கடைசி தொடர்பு:16:17 (20/06/2017)

"தனிக்கட்சிதான் தொடங்குவார் ரஜினிகாந்த்!" - அடித்துச் சொல்கிறார் அர்ஜுன் சம்பத்

ரஜினி அர்ஜுன் சம்பத் சந்திப்பு

ன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கிய நாள்முதல் ரஜினி எந்த நேரத்திலும் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தைத் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பலவித எதிர்பார்ப்புக்கு இடையில் திடீரென 'காலா’ படத்தைக் கையில் எடுத்துக்கொண்டார் ரஜினி. அதனால், அவருடைய வருகை இப்போதைக்கு இல்லை என்ற தோற்றத்தைக் காட்டினாலும், அவர் உண்மையில் அரசியல் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், கடந்த 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அய்யாகண்ணு ரஜினியை அவரது இல்லத்தில்  சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, "ரஜினிகாந்தைச் சந்தித்தது மனநிறைவாக உள்ளது. மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை, பாலாறு, காவிரி ஆகிய நதிகளை ஒன்றாக இணைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி தருவதாகச் சொன்னார். அந்த நிதியைப் பிரதமரிடம் தந்து நதிநீர் இணைப்பைத் தொடங்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.    

அய்யாகண்ணு

இதனிடையே, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ரஜினியைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு, ஒருமணி நேரம் நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் நோக்கம் குறித்து அர்ஜுன் சம்பத்திடம் பேசினோம். ''இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு. அவருடன் நட்பில் உள்ளவன் நான். அவர், ஆன்மிகம் - அரசியல் ஈடுபாடுகொண்டவர். அதனால் நட்பு, ஆன்மிகம், அரசியல் இந்த மூன்றைப் பற்றிய பேச்சாக இந்தச் சந்திப்பு இருந்தது. 'தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. எனவே, நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்' என்ற வேண்டுகோளை அவரிடம் வைத்தேன்.மேலும், 'கடந்த 1967 ஆம் ஆண்டுமுதல் 2017 வரை 50 ஆண்டுக்காலம் தமிழக அரசியல் நிலை சரியில்லை' என்ற கருத்தையும் அவரிடம் சொன்னேன். அது மட்டுமன்றி, 'சிஸ்டம் கெட்டுப்போய் இருக்கு' என்று நீங்கள்தான் கூறியிருந்தீர்கள். 'அப்படியான இந்த சிஸ்டத்தை மாற்ற உங்களைப் போன்ற வலிமையான தலைமை அவசியமாகிறது. இந்த சிஸ்டத்தை மாற்றுகிறேன் என்று பலர் கூறலாம். ஆனால், அதனை மாற்றக்கூடிய வலிமை யாருக்கும் இங்கு இல்லை. ஆனால், நீங்கள் நினைத்தால் அதனை மாற்ற முடியும். அதற்கான பலம் உங்களிடம் உள்ளது' என்றேன்.

அப்போது ரஜினி, 'நதிநீர் இணைப்புதான் உடனடியான தீர்வு. தற்போதைக்கு இந்தக் கங்கை - காவிரித் திட்டம் என்பது உடனடியாகத் தீர்க்கக்கூடியது அல்ல.குறைந்தபட்சம் தென்னக நதிகளையாவது இணைக்க வேண்டும். அதில், ஏற்கெனவே கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், கிருஷ்ணா நதி சென்னைவரை வந்துள்ளது.எனவே, நதிகளை இணைப்பதுதான் மிகப்பெரிய பணி. அந்த மாதிரிச் செய்யும்போது மத்திய - மாநில அரசு இணைந்து செயல்படவேண்டும். அப்படியான காரியங்கள் செய்ய வேண்டும் என்றால், அரசியல் சக்தி தேவையாகிறது. அதற்கான பணியைச் செய்துவருகிறேன்;  நிச்சயமாகச் செய்வேன்' என்றார். அதன்பின்னர், ஆன்மிகம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய இமயமலைப் பயணம், தயானந்த சுவாமிகள், குமரகுருபர சுவாமிகள், திருவாசகம் பற்றியெல்லாம் பேசினார். தாம், திலகம் வைக்கும் பழக்கத்தில் இருந்து திருநீறு வைக்கும் பழக்கத்துக்கு எப்படி மாறினேன் என்பது பற்றியும் ரஜினி பேசினார்.தமிழகத்து மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளார். அவர்களும் ரஜினிமீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

அர்ஜுன் சம்பத்

"தனிக் கட்சி குறித்து ஏதேனும் உங்களிடம் பேசினாரா?"

''அதுகுறித்து அவரிடம் பேசவில்லை. ஆனால், அவர் தனிக் கட்சிதான் தொடங்குவார் என்பது என்னுடைய நிலைப்பாடு. தேசியக் கட்சியாக இருந்தாலும் மாநிலக் கட்சியாக இருந்தாலும் அவர் போய் ஒரு கட்சியின்கீழ் வேலை செய்வதை விரும்பமாட்டார். அவருக்கு என்று தனிச் சிந்தனைகள், கொள்கைகள் உள்ளன. தமிழக மக்களுக்காகச் செய்வதற்கென சில யோசனைகள் வைத்துள்ளார். அதனை நிறைவேற்ற வேண்டும் என்றால், அவர் தனிக் கட்சிதான் தொடங்குவார் என்று நினைக்கிறேன். பி.ஜே.பி-யில் ரஜினி இணைகிறார் என்றோ அல்லது அந்தக் கட்சி ரஜினியின் செல்வாக்கைப் பயன்படுத்தப் பார்க்கிறது என்றோ சொல்வது எல்லாம் சரியான தகவல் இல்லை. இயற்கையாகவே, அவர் நல்ல தேசியவாதி, அரசியல் பற்றித் தெரிந்திருக்கக் கூடியவர். அதனால் அவருடைய செயல்களை அவரே திட்டமிட்டுச் செயல்படுத்துவார்."

''திடீரென்று ரஜினியைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?"

"எனக்கு அவசியம் ஏற்பட்டது. ஐம்பதாண்டுக் காலம் திராவிட இயக்கங்களால் தமிழகம் சுரண்டப்பட்டுள்ளது. அரசியலில் ஒழுங்கில்லை. முற்றிலும் தமிழகம் டாஸ்மாக் மாநிலமாக மாறிவிட்டது. வாக்குக்குப் பணம் வாங்கும் சிஸ்டத்தை ஏற்படுத்திவிட்டார்கள். எனவே, இதனை மாற்ற வேண்டும். அதை, மாற்றுவதற்கு நல்ல ஆயுதமாகப் பார்க்கிறேன். காங்கிரஸை மாற்றுவதற்கு அண்ணாதுரை, எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தினார். கலைஞரின் சிஸ்டத்தை மாற்றுவதற்கு எம்.ஜி.ஆரும் நடவடிக்கை எடுத்தார். அப்படியான திராவிடக் கழகங்களாக ஆட்சி செய்துவரும் நிலை மாற வேண்டும். அது, எங்களது கொள்கை. அதனைத்தான் அவரிடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளோம்." 

'' 'பி.ஜே.பி-யில் ரஜினி இணைவார் என்று சொல்லப்படுகிறதே... 'ஆனால், நீங்கள் அவர் தனிக் கட்சிதான் தொடங்குவார் என்கிறீர்கள்... எதைவைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?'' 

''பி.ஜே.பி-யில் அவர் இணைவதாக இருந்தால், எப்போதோ அவர் இணைந்திருக்க வேண்டும். எல்லோரையும் கட்சியில் சேர்க்க வேண்டும். அதுதானே பி.ஜே.பி-யின் வேலை. எதிலும் சேராமல் தனிக் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. பால்தாக்கரே மீது மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருப்பவர் அவர். அதனால், அவர் தனிக் கட்சிதான் தொடங்க வேண்டும்" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்