வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (20/06/2017)

கடைசி தொடர்பு:10:18 (21/06/2017)

தமிழக அரசை நாங்கள் இயக்கியிருந்தால் இதுதான் நடந்திருக்கும்! சொல்கிறார் இல.கணேசன்

இல.கணேசன்

தமிழக அரசை பாஜக இயக்குமானால் நிச்சயம் நல்ல ஆட்சிதான் நடக்கும் என்று கூறிய பாஜக எம்பி இல.கணேசன், ஜனாதிபதி தேர்தலில்  பாஜகவுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மத்திய அரசின் மூன்று ஆண்டு ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட இதுவரை  இல்லை. கறுப்புப் பணம் ஒழிப்பில் மத்திய அரசின் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. அ.தி.மு.க எம்.எல்.ஏ.களுக்கான பண பேரம் குறித்து தீர்ப்பு கூறும் அதிகாரம் நீதிமன்றத்துக்குத்தான் உள்ளது. தீர்ப்பில் உண்மை இருந்தால் அது தமிழகத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும். தமிழக அரசை பி.ஜே.பி. இயக்குவதாகக் கூறுகிறார்கள். தற்போதைய ஆட்சி சரியில்லை எனக் கூறுகிறார்கள். பாஜக தமிழக அரசை இயக்குமானால் நிச்சயம் நல்ல ஆட்சிதான் நடக்கும். ஆட்சி சரியில்லை என்றால் பாஜக தலையீடு இல்லை என்பது உண்மை.

பாஜக ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியான தேர்வு. அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார். அதற்காக எதிர்க்கட்சியில் இருப்பவரிடம்கூட ஆதரவு கேட்கிறோம். ஜனாதிபதி வேட்பாளரைத் திருமாவளவன் எதிர்ப்பதாகக் கூறுகிறார்.  திருமாவளவன் மதம் மாற்றத்தை ஆதரிக்கிறாரா எனத் தெளிவுப்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட இந்துக்கள் மதம் மாறுவதைத் தடுப்பதில் தவறு இல்லை. எங்கு மதுக்கடை இருந்தாலும் தேடிச்சென்று மது அருந்துவது தமிழனுக்கும், தமிழகத்துக்கும் இழுக்கு. ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடிய பின்பும் அரசுக்கு வருமானம் குறையவில்லை.

உலகம் முழுவதும் யோகா தினம் நாளை கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை எதிர்க்கவேண்டும் என்பதற்காக நிதிஷ்குமார் எதிர்க்கிறார். ஏன் எனத் தெரியவில்லை. உணவு பொருள்கள் கலப்படம் விஷயத்தில் தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் பயத்தைப் போக்கும் கடமை அமைச்சர்களுக்கு உள்ளது. தற்போது அ.தி.மு.க.வுக்கு சோதனை காலம். அ.தி.மு.க வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தருவார்கள் என  நம்பிக்கை உள்ளது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க