காக்கப்படுகிறதா உரிமைகள்? ஓங்கி ஒலிக்கும் ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ கோஷம்! | LGBTI Month of Pride is celebrated in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (20/06/2017)

கடைசி தொடர்பு:10:05 (21/06/2017)

காக்கப்படுகிறதா உரிமைகள்? ஓங்கி ஒலிக்கும் ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ கோஷம்!

ஒவ்வொர் ஆண்டும் ஜூன் மாதம் சர்வதேச அளவில் ‘எல்.ஜி.பி.டி.யின் பெருமை மாதம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் சமூகத்தை எல்.ஜி.பி.டி. என்றழைப்பர். இந்தாண்டு அமெரிக்கத் தூதரகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ‘எல்.ஜி.பி.டி. உரிமைகள்’ குறித்த கலந்தாய்வு சென்னை சர்வதேச சட்ட வளாகத்தில் நடைபெற்றது.

விக்டோரியா


இந்நிகழ்ச்சியில், திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான சட்ட ரீதியான உரிமைகள் குறித்து ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இந்தியா- அமெரிக்கா நாடுகளுக்கு இடையே எல்.ஜி.பி.டி உரிமைகள் எந்தளவில் மாறுபடுகிறது என்பது குறித்து நடந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகத் தலைமையேற்றவர் விக்டோரியா கோலகோஸ்கி. அமெரிக்காவின் முதல் திருநங்கை நீதிபதி விக்டோரியா கோலகோஸ்கி. இவருடன் கருத்துப் பரிமாற்றத்தில் இந்தியாவின் சார்பாக சுனில் மேனன், முனைவர் ராமகிருஷ்ணன், பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் திருநங்கை ரோஸ் வெங்கடேசன், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்நிகழ்வில், தமிழக அளவில் ஓரினச்சேர்க்கை உரிமைகள் குறித்து பேசப்பட்டபோது, ‘திருநங்கைகளுக்கும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் பொதுவாக இச்சமூகத்தில் வழங்கப்படும் அதே மரியாதையும், உரிமைகளும், வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற சமூகப் பிரச்னைகளைப் பொது இடங்களில் வெளிப்படையாகப் பேச வேண்டும். இந்தியாவில் சட்டவிதி 377-ன் படி ஓரினச்சேர்க்கை குற்றமாகும். ஆனால், தற்போதைய நிலையில் இதுகுறித்த மக்களின் பார்வை விசாலமடைந்தே காணப்படுகிறது’ என்றே குழுவினர்கள் தங்கள் ஒருமித்தக் கருத்தை வெளிப்படுத்தினர்.