Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''எங்களுக்கு ஓட்டுரிமை இல்லை. ஆனால், எங்களைச் சொல்லி ஓட்டு வாங்குகிறார்கள்!" - ஓர் அகதியின் ஆதங்கம் #WorldRefugeeDay

அகதிகள் முகாம்

தாய்நாட்டில் ஏற்பட்ட பிரச்னையால் தங்கள் உடமைகள், உறவுகளை இழந்து, உயிர் மட்டும் சுமந்து அயல்நாட்டில் தஞ்சம் புகுந்து வாழும் அகதிகளின் கதை, துயர் என்ற தூரிகை கொண்டு எழுதியது. ஜூன் 20, அகதிகளுக்கான தினமாகக் கடைப்பிடிக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

உலகின் பெரும்பாலான நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருப்பவர்கள் இலங்கைத் தமிழர்களே. இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களில் கடும் இன்னல்களைச் சந்தித்தவர்கள். நாடு, வீடு, உடமை, உறவுகள் என எல்லாவறையும் இழந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 112 முகாம்கள் உள்ளன. இவற்றுள் புழல் மற்றும் கொட்டப்பட்டு என இரண்டு சிறப்பு முகாம்களும் அடக்கம். இந்த முகாம்களில் உட்பதிவாக 62,712 பேரும், வெளிப்பதிவாக 36,890 பேரும் என சுமார் 99 ஆயிரம் பேர் அகதிகளாகத் தங்கியுள்ளனர். இதில் மண்டபத்தில் உள்ள மாற்று முகாமில் மட்டும் இன்றைய நாள் வரை 565 குடும்பங்களைச் சேர்ந்த 1,844 பேர் தங்கியுள்ளனர்.
 
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக வாழ்ந்து வரும் இந்தச் சக மனிதர்களுக்கு, அடிப்படை வசதிகள்கூட பெரும்பாலான முகாம்களில் இருப்பதில்லை. இருக்க நல்ல இடமோ, குடிக்க நல்ல தண்ணீரோ கிடைக்காத பல முகாம்கள் தமிழகத்தில் உள்ளன. 'சுத்தமான இந்தியா' பற்றி நொடிக்கு ஒரு முறை விளம்பரம் செய்யும் இதே டிஜிட்டல் யுகத்தில், சில முகாம்களில் இயற்கை உபாதையைக் கழிக்க கருவேலங்காடுகளே உள்ளன அவர்களுக்கு. 

மண்டபம்ஒரு நாட்டின் குடிமகன் என்ற அடையாளத்தை இழந்து அகதி என்ற ஒற்றைச் சொல்லின் கீழ் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என விசாரித்தோம். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பேசினார் அந்தப் பெண். 

''இலங்கை, திரிகோணமலை பிச்சைவலி பகுதியில் நிம்மதியாக வாழ்ந்து வந்தது எங்கள் குடும்பம். 1990களில் எங்கள் வசிப்பிடங்களில் இலங்கை அரசு கடும் தாக்குதல் நடத்தியது. விவசாயத்தில் செழித்து விளங்கிய எங்கள் பகுதியில் ஏராளமானோர் இலங்கை ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டனர். அப்போதுதான் எனக்குத் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. எஞ்சியிருந்த உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எங்கள் குடும்பம் இங்கே அகதிகளாக வந்திறங்கினோம். பல பேருக்கு வேலை கொடுத்து சம்பளம் வழங்கி வந்த என் அப்பா இங்கே வந்து கூலி வேலைக்குச் சென்றார். அந்நிலையை அவர் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்க, 'செத்தாலும் சொந்த நாட்டிலேயே சாவோம்' எனச் சொல்லி இலங்கைக்கே திரும்பிவிட்டார். ஆனால், எங்களை அவர் உடன் அழைத்துச் செல்லவில்லை. ஏனெனில், நாங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இலங்கையில் இன்று வரை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவே இல்லை. எங்களின் வீடு, நிலம், வியாபாரத் தலங்கள் எல்லாவற்றையும் இலங்கை ராணுவம் எடுத்துகொண்டுவிட்டது.

முகாம்நாங்கள் கடந்த 30 வருடத்துக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிறோம். இருந்தும் எங்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. முகாமை விட்டு காலை 6 மணிக்கு மேல்தான் வெளியே செல்ல வேண்டும். மீண்டும் மாலை 6 மணிக்குள் முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். அனுமதியின்றி வெளியிடங்களுக்குச் செல்லக்கூடாது. முகாம் சார்ந்த பகுதிகளுக்கு வி.ஐ.பிக்கள் வருகை தந்தால் முகாமில் தங்கியிருப்பவர்கள் மூன்று நாள்களுக்கு வெளியே செல்லக்கூடாது. சொந்தமாக கால்நடைகள் வளர்க்கக்கூடாது. மாதம் ஒரு முறை குடும்பத்தோடு அதிகாரிகள் முன் கணக்கெடுப்புக்கு ஆஜராக வேண்டும். அதிகாரிகள் குறிப்பிடும் சில தினங்களில் விசேஷ கணக்கெடுப்பின்போதும் ஆஜராக வேண்டும் என ஏக கெடுபிடிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அகதிகள்


 
மாதந்தோறும் அரசு வழங்கும் நிதியினைக் (குடும்பத் தலைவருக்கு 1000, மற்றவர்களுக்கு 750, சிறுவர்களுக்கு 400) கொண்டும், மாதத்துக்கு இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசி மற்றும் 3 லிட்டர் மண்ணெண்ணெயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம். நாங்கள் அகதிகள் என்பதால் நன்கு படித்திருந்தாலும் அதற்கு உரிய வேலைவாய்ப்பினை அரசோ, தனியார் நிறுவனங்களோ கொடுக்க மறுக்கின்றன. இதனால் பொறியியல் படிப்பு முடித்தவர்கள்கூட மீன் சுமக்கும் கூலி வேலைக்கும், கட்டடம் கட்டும் சித்தாள் வேலைக்கும் செல்லும் நிலையே உள்ளது.

இந்நிலை மாற எங்களுக்கு இந்தியக் குடியுரிமை கேட்டு குரல் கொடுத்தும் எந்த அரசாங்கமும் அதை காதில் வாங்குவதில்லை. எங்களிடம் ஓட்டு இல்லாத போதிலும், எங்களைச் சொல்லி தமிழ்நாட்டு மக்களின் ஓட்டுகளை வாங்குகிறார்கள். அவர்களும்கூட தேர்தல் சமயங்களில் மட்டுமே எங்களைப் பற்றி பேசுகின்றனர். அதற்குப் பின் எங்களைப் பற்றி நினைப்பதில்லை. ஜெயலலிதா அம்மா முதல்வராக இருந்தபோது எங்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை நிறைவேற்றாமல் தொண்டு நிறுவனங்கள் மூலம் எங்களை மூளைச் சலவை செய்து மீண்டும் இலங்கைக்கே திருப்பி  அனுப்ப நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். தமிழர்களின் கிராமங்கள் எல்லாம் சிங்களர்களின் இருப்பிடங்களாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் நாங்கள் மீண்டும் அங்கே போய் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? எனவே அரசு எங்களை இந்த நாட்டின் மக்களாகவோ அல்லது இரட்டை குடியுரிமை கொண்டவர்களாகவோ அங்கீகரிக்க வேண்டும்!" 

அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் விரக்தியாய் உறைந்திருக்கிறது! 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement