'' 'கம்'னு இருந்த கருணாஸை வெளிநடப்பு செய்யச் சொன்னேன்!" -தனியரசு | MLA Thaniyarasu reveals the truth why they walked out of assembly

வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (21/06/2017)

கடைசி தொடர்பு:11:32 (21/06/2017)

'' 'கம்'னு இருந்த கருணாஸை வெளிநடப்பு செய்யச் சொன்னேன்!" -தனியரசு

ளும் அ.தி.மு.க அரசின் கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களான தனியரசு, கருணாஸ், தமீமூன் அன்சாரி ஆகிய மூவரும், முதன்முறையாக சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள். 'மாட்டிறைச்சித் தடை விவகாரத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதிலில் திருப்தியில்லை' என்பதுதான் இவர்களது வெளிநடப்புக்கான காரணமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், 'அ.தி.மு.க-வுக்குப் பணம் வாங்கிக்கொண்டு ஆதரவு தெரிவித்ததாக வெளியான சர்ச்சைகளைத் திசை திருப்புவதற்காகவே இப்படியொரு வெளிநடப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர் இவர்கள்' என்றதொரு குற்றச்சாட்டும் பரவலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், 'தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை'யின் நிறுவனத் தலைவர் தனியரசு எம்எல்ஏ-விடம் பேசினோம்...

தனியரசு

''திடீரென மாட்டிறைச்சி விவகாரத்தில் வெளிநடப்பு செய்திருப்பது ஏன்?''

''மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது எனத் தடை விதித்திருக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்குக் கேரளா, கோவா, மேகாலயா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன; இதுதொடர்பான சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இம்மாநிலங்கள் தீர்மானமும் இயற்றியிருக்கின்றன. பெரும்பான்மையான மக்களின் உணவுப் பழக்கவழக்க உரிமையில் தலையிடுவதாகவும், விவசாயிகளின் பொருளாதாரப் பின்புலமாக இருக்கக்கூடிய கால்நடை விற்பனையைத் தடை செய்வதாகவும் இச்சட்டம் இருக்கிறது. இதுநாள் வரையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்த மாட்டின் விலையானது, இந்தத் தடைச் சட்டத்துக்குப் பிறகு வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாகக் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகாலமாக நடந்துவந்த கால்நடை வர்த்தகத்தைத் திடீரென ஓர் அறிவிப்பின் மூலமாக தடை செய்வதால், விவசாயிகளின் வாழ்வாதாரமே பறிக்கப்பட்டுவிட்டது.

இதிகாசத்தில் இருக்கிற அல்லது இவர்கள் நம்புகிற மூடப் பழக்க வழக்கத்தை, நவீன சமூகத்தில் கொண்டுவந்து திணிக்கும் 'இந்தச் சட்டத்தை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மேலும், தமிழக அளவில் எப்போதும்போல் மாடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் இயல்பான சூழலை உருவாக்கும் விதமாக தனிச்சட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்பதுவும்தான் எங்கள் அமைப்பின் கோரிக்கை. இதுகுறித்து நாங்கள் ஏற்கெனவே தீர்மானம் கொடுத்திருக்கிறோம். இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் முதல்வர் கொடுத்த பதிலில், 'இவ்விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதாக'க் கூறினார். சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை நாங்களும் ஏற்கிறோம். அதேசமயம், இவ்விவகாரத்தில், அரசின் கவனத்தை ஈர்ப்பதோடு, இக்கோரிக்கையை மேலும் கூர்மைப்படுத்தும்விதமாகவும்தான் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்''.

சட்டமன்றம்

''சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவிக்க தாங்கள் பணம் வாங்கியதாக வெளியான செய்திகளைத் திசை திருப்புவதற்காகவே, வெளிநடப்பு செய்ததாகக் கூறப்படுகிறதே...?''

''நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் வெளிவரும் முன்பே, நாங்கள் மாட்டிறைச்சித் தடை தொடர்பாகக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரவேண்டி முதல்வருக்கும், பேரவைத் தலைவருக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். நீதிமன்றத்தில் இவ்விவகாரம் இருப்பதால், தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக அரசுத் தரப்பில் சொல்கிறார்கள். அது சரிதான். அதே சமயம், நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதற்காகவே வெளிநடப்பு செய்தோம். கருணாஸ், தீர்மானம் எதுவும் கோரவில்லை. எனவே, 'கம்'மென்றுதான் இருந்தார்; ஆனால், நான்தான் இந்தக் கோரிக்கை வலுவடைய வேண்டும் என்று கருணாஸிடம் எடுத்துச்சொல்லி வெளிநடப்பு செய்யவைத்தேன். ''

''அப்படியென்றால், கருணாஸ் வெளிநடப்பு செய்யும் எண்ணத்தில் இல்லையா?''

''கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து கருணாஸ் கடிதம் எதுவும் கொடுத்திருக்கவில்லை. ஆனால், பேரவையில் இதுகுறித்து அவர் பேச முயன்றபோது, 'நீங்கள் கடிதம் கொடுக்கவில்லை; எனவே பேச அனுமதியில்லை' என மறுத்துவிட்டனர். இவ்விஷயத்தில் கொள்கை ரீதியாக எங்களுடைய கருத்தைத்தான் அவரும் கொண்டிருந்தார். எனவேதான், நானும், தமீமுன் அன்சாரியும் கூப்பிட்டவுடன் வெளியில் வந்துவிட்டார்.''

கருணாஸ்

''அ.தி.மு.க ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கமாட்டேன் என்று கடந்தமுறை தெரிவித்த நீங்கள், இப்போது வெளிநடப்பு செய்திருக்கிறீர்கள். அ.தி.மு.க அரசுக்கு மிரட்டல் விடுக்கிறீர்களா?''

''இது மிரட்டலும் இல்லை; நெருக்கடியும் இல்லை. ஆட்சிக்கு வலு சேர்க்கும் முயற்சிதான் இது. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதன் அடையாளமாகத்தான் வெளிநடப்பு செய்து மக்கள் மன்றத்தின் முன் எங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறோம். இது அரசுக்குக் கூடுதல் வலிமையைத்தான் சேர்க்குமேதவிர... கடுகளவும் பலகீனப்படுத்தாது''

- த.கதிரவன்


டிரெண்டிங் @ விகடன்