வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (21/06/2017)

கடைசி தொடர்பு:13:09 (21/06/2017)

தினகரனைக் கட்டம் கட்டும் சசிகலா குடும்பம்!  - கொதிப்பைக் கூட்டிய சிறை சந்திப்புகள் 

சசிகலா-தினகரன்

' அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் துணைப் பொதுச்செயலாளரான எனக்கு உண்டு' எனத் தினகரன் அறிவித்திருப்பதன் மூலம், கட்சிக்குள்ளும் சசிகலா குடும்பத்துக்குள்ளும் ஒரே நேரத்தில் புகைச்சல் கிளம்பியுள்ளது. ' எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் இணைக்கும் வேலைகளில் திவாகரன் ஈடுபட்டு வருகிறார். தினகரனை ஓரம்கட்டும் வேலைகள் தீவிரமடைந்ததால், தனக்கான கட்சி அதிகாரத்தை முன்னிலைப்படுத்துகிறார் தினகரன்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். 

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நேற்று சசிகலாவைச் சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அவருக்கு அடுத்து, தினகரனும் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். ஒரு மணிநேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், 'குடும்ப விவகாரம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது' என்கின்றனர் குடும்ப உறுப்பினர்கள். சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த தினகரன், ' சித்தி என்ற முறையில் அவரை நான் சந்தித்து வருகிறேன். அரசியல்ரீதியாக எதுவும் பேசவில்லை' என்றதோடு முடித்துக் கொண்டார். தம்பிதுரையும், ' குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைக் கட்சித் தலைமை அறிவிக்கும். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் விரைவில் இணையும்' எனக் கூறிவிட்டுச் சென்றார். 

' சிறை சந்திப்பு' குறித்து, அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். திகார் சிறையிலிருந்து பெயிலில் வந்த நாள்முதலாக, 'அமைச்சர்கள் தன்னைச் சந்திக்க வருவார்கள்' என எதிர்பார்த்தார். தொடக்கத்தில், திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் அவரைச் சென்று சந்தித்தார். அதன்பிறகு, அவரும் ஒதுங்கிக் கொண்டார். ஓ.எஸ்.மணியன், காமராஜ், விஜயபாஸ்கர் உள்பட தினகரன் ஆதரவு அமைச்சர்களும் அமைதியாக இருந்தனர். தன்னைப் புறக்கணிக்கும் வேலைகள் நடப்பதை அறிந்த தினகரன், ' நாங்கள் நினைத்ததால்தான், இந்த அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது' என எடப்பாடி பழனிசாமிக்குச் சுட்டிக் காட்டும் வகையில், எம்எல்ஏ-க்களில் 34 பேரைத் தன் பக்கம் திருப்பினார். இதைப் பற்றி ஆட்சியில் உள்ளவர்களும் கவலைப்படவில்லை. அமைச்சர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளைப் பற்றி, தினகரனிடம் பேசிய எம்எல்ஏ. தங்க.தமிழ்ச்செல்வன், ' பன்னீர்செல்வம் வகித்த அமைச்சர் பதவியை எனக்குத் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது ஓரம்கட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதைப் பற்றி அவரிடம் பேசியபோதும், ' தனிப்பட்ட முறையில் என்ன வேலை நடக்க வேண்டும் என்றாலும் கேளுங்கள். அமைச்சர் பதவியைத் தருவதற்கு வாய்ப்பில்லை' எனக் கூறுகிறார். அவர் இவ்வாறு கூறுவதற்குக் காரணமே, பன்னீர்செல்வம் மீதுள்ள பழைய பாசம்தான். கட்சிக்கும் குடும்பத்துக்கும் துரோகம் செய்துவிட்டுப் போனவர்களை எப்படி ஏற்பது?' எனக் கொந்தளிப்பைக் காட்டினார். 

திவாகரன்இதே கொதிப்பில்தான் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களும் இருக்கின்றனர். ' கட்சியின் 90 சதவிகித நிர்வாகிகள் உங்கள் பக்கம்தான் வருவார்கள். நீங்கள் பழையபடி செயல்பட ஆரம்பியுங்கள். 'தலைமை அலுவலகத்துக்குள் உங்களை நுழையவிடக் கூடாது' என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நாம் பார்க்காத பிரச்னைகளா? எனத் தினகரனை உசுப்பேற்றி வருகின்றனர். தற்போது அவர் பக்கம் ஆட்சியைக் கவிழ்க்கப் போதுமான எம்எல்ஏ-க்கள் பலம் இருப்பதால், ' கட்சி அலுவலகத்துக்குள் வந்து பணி செய்வேன்' என அறிவிக்கிறார். இந்த ஆட்டத்துக்கு எதிராக தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார் திவாகரன். ' தினகரனை ஓரம்கட்டாமல் இணைப்பும் சாத்தியமில்லை. இரட்டை இலையும் சாத்தியமில்லை. அவர் தன்னிச்சையாக செயல்படுவதால், ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இன்னும் நான்காண்டுகள் நாம் ஆட்சியை நடத்தியாக வேண்டும். உங்களைச் சிறையிலிருந்து வெளியில் கொண்டு வர வேண்டும். எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. தினகரனைக் கட்டம் கட்டி வையுங்கள்' என சசிகலாவிடம் கறாராகக் கூறிவிட்டனர்.

இதைத் தினகரனிடம் கூறிய சசிகலா, ' நான் சொல்வதைக் கேட்டு நடந்திருந்தால், குடும்பத்திலேயே இவ்வளவு எதிர்ப்புகள் வந்திருக்காது. உனக்கு நீயே வினையைத் தேடிக் கொண்டாய். கொஞ்ச நாள் அமைதியாக இரு' என அவர் கூறியதை, தினகரன் ஏற்கவில்லை. ' இத்தனை நாள்கள் அரசியலில் இருந்துவிட்டு, திடீரென ஒதுங்கச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? எனக்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டிவிடுவதே திவாகரன்தான். அவர்களைப் போல மறைமுகமாக இருந்துகொண்டு செயல்பட வேண்டிய அவசியமில்லை. நானும் ஒதுங்கிக் கொண்டால், கட்சியில் நமக்கான பிடி காணாமல் போய்விடும். கட்சியும் வேறு ஒருவர் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும். பிறகு நாம் உள்ளே வரவே முடியாது' எனப் பல விளக்கங்களைக் கூறியிருக்கிறார். சிறை சந்திப்பிக்குப் பிறகு, இன்னும் உக்கிரத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார் தினகரன். இந்தமுறை, வரலாறு காணாத சண்டைகளை அ.தி.மு.க தலைமைக் கழகம் சந்திக்க இருக்கிறது" என்றார் விரிவாக. 

" தினகரன் ஆதரவு மனநிலையில் சில எம்எல்ஏ-க்கள் இருந்தாலும், இவர்கள் எல்லாம் சசிகலா மீதான பாசத்தில் இருப்பவர்கள். ' அந்தக் குடும்பத்தை நம்பினால், அமைச்சர் பதவி கிடைக்கும்' என்ற எண்ணத்தில் வலம் வருகின்றனர். ' ஆட்சி போய்விட்டால், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்' என்பது நிச்சயம் இல்லாததால், எடப்பாடி பழனிசாமி பக்கமும் அவர்கள் பாசம் காட்டுகின்றனர். உறுதியாகச் சொல்லப் போனால், 5 எம்எல்ஏ-க்கள் மட்டும்தான் தினகரன் பக்கம் இருக்கின்றனர்.  மீதமுள்ளவர்கள் அமைச்சர்கள் மீதான அதிருப்தியில் தினகரன் பக்கம் தலைகாட்டியவர்கள். அவர்களையும் எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்திவிட்டார். ' குடியரசுத் தலைவர் தேர்தலில், நாம் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்தால், டெல்லியோடு சமசரம் பேசியிருக்கலாம்' என நினைத்தார் தினகரன். அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. கூடவே, கட்சி அதிகாரத்துக்குள் வருவதற்கு திவாகரன் குடும்பம் ஆர்வமாக இருக்கிறது. அதற்கு தினகரன் தடையாக இருப்பதால், அவரை ஓரம்கட்டும் வேலைகள் தீவிரம் அடைந்து வருகின்றன. கழகத்துக்குள் ஒரு சுமுகமான சூழல் உருவாவதற்கான வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால், இணைப்பும் சாத்தியமில்லை. இரட்டை இலையும் கிடைக்கப் போவதில்லை" என்கிறார் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர். 

நேற்று சட்டசபையில் பேசிய அ.தி.மு.க எம்எல்ஏ பெரிய புல்லான், 'என்னுடைய தொகுதியில் குரங்குகள் தொல்லை தாங்க முடியவில்லை. குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. அந்த அடங்காப்பிடாரி குரங்குகளை அமைச்சர்தான் அடக்க வேண்டும்' எனச் சொல்ல, இதற்குப் பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ' காட்டுக்குள் மட்டுமா குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இங்கும் சில அடங்காப்பிடாரி குரங்குகள் இருக்கின்றன' என அதிருப்தி எம்எல்ஏ-க்களை குறிவைத்துச் சொன்னார். 'அவர் யாரை குறிவைத்து அவ்வாறு சொன்னார்' என்பதை யூகித்துக் கொண்டு, அவையில் சிரிப்பலையில் மூழ்கினர் ஆளும்கட்சி எம்எல்ஏ-க்கள்.
 


டிரெண்டிங் @ விகடன்