Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தம்பிதுரையும் தினகரனும் சசிகலாவைச் சந்தித்ததன் பின்னணி?!

சசிகலா - தினகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை, அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஒரு மாதத்தில் நான்குமுறை சந்தித்துப் பேசியுள்ளார்.

அதிலும், நேற்று சசிகலாவை மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரையுடன் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆளும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவுடனான இந்தச் சந்திப்பு, முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தை அ.தி.மு.க. அம்மா அணிக்குப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டி.டி.வி. தினகரன் கைதுசெய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கைதாவதற்கு முன், அ.தி.மு.க இரு அணிகளும் இணைய வேண்டும் என்றும் அதற்காக கட்சியைவிட்டு தான் ஒதுங்கி இருப்பதாகவும் கூறிய தினகரன், சிறையிலிருந்து சென்னை திரும்பியதும், மீண்டும் கட்சிப்பணிகளை ஆற்றப்போவதாகக் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் எடப்பாடி அணி இணைவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுச் செயலாளர் என்ற முறையில், சசிகலா 60 நாள்கள் அவகாசம் அளித்திருப்பதாகத் தெரிவித்த அவர், அதற்குள் எந்த இணைப்பு முயற்சியும் நடைபெறாவிட்டால், தொடர்ந்து கட்சிப் பணியாற்றப் போவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை அறிவித்து, கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளிடமும் ஆளும் பி.ஜே.பி. தனது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு வருகிறது. சசிகலாவால் முதல்வராக முன்மொழியப்பட்டு தற்போது ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கேட்டுள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தினகரனும், அதைத் தொடர்ந்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய அரசு அறிவித்துள்ள வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. ஜெயலலிதா இருந்தவரை டெல்லியில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தகவல்களைத் தெரிவித்து, பாலமாகச் செயல்பட்டவர் தம்பிதுரை, அதன்படி, இப்போது சசிகலாவைச் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, மத்திய அரசின் தூதுவராகவே தம்பிதுரை சசிகலாவைச் சந்தித்துள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் வேட்பாளரை ஆதரிக்கும்பட்சத்தில் தமிழகத்துக்குத் தேவையான பல்வேறு விஷயங்களை மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அப்போது தம்பிதுரை சசிகலாவிடம் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும் சசிகலா தரப்பில் என்ன பதில் தெரிவிக்கப்பட்டது என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை.

"எடப்பாடி தலைமையில் நடைபெறும் ஆட்சியில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆனால், கட்சி தொடர்பான எந்த முடிவையும் அமைச்சர்கள் எடுக்க முடியாது. பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலாதான் கட்சி முடிவை அறிவிப்பார். தற்போது அவர் பெங்களூருவில் இருப்பதால், துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சியின் முடிவுகளை நான்தான் எடுப்பேன். என்னை நீக்க, பொதுச் செயலாளரைத் தவிர, வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது" என்று தினகரன் இரு தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தம்பிதுரைஇந்தச் சூழ்நிலையில்தான் சசிகலா - தம்பிதுரை - தினகரன் சந்திப்பு அரங்கேறியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், "தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் தலையீடு ஆட்சியில் கிடையாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமி அளித்து வருகிறார்" என்றார். ஆனால், 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் தினகரனைச் சந்தித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 122 எம்எல்ஏ-க்களில் பலர் தினகரனை ஆதரிப்பதாகக் கூறியதாலும், கூவத்தூர் விடுதியில் இருந்த எம்எல்ஏ-க்களுக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானதாலும் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆளுநரிடம் அவர் புகார் மனு அளித்ததன்பேரில், நடவடிக்கை எடுக்க சட்டசபை சபாநாயகருக்கும் தலைமைச்செயலாளருக்கும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஸ்திரமற்ற ஓர் அரசியல்சூழல் நீடித்துவரும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஆதரவு மத்திய அரசுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியா முழுவதுமே எழுந்துள்ளது. அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணிக்குத் தலைமை வகிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி-க்கே ஆதரவு தெரிவிப்பார் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க எம்எல்ஏ-க்களின் ஆதரவு யாருக்கு என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் கேட்டுள்ள நிலையில், அ.தி.மு.க-வின் ஆதரவை இறுதி செய்வதற்காகவே தம்பிதுரையும் தினகரனும் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஐந்து பேரும் சசிகலாவை தனியாகச் சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல்வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் ஆளும் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய பலம் உள்ளபோதிலும், அ.தி.மு.க-வின் ஆதரவும் கிடைக்குமானால், வெற்றியை முன்கூட்டியே நிச்சயமாக்கிக் கொள்ளலாம் என்பது மத்திய அரசின் வியூகமாகும். சசிகலாவிடம் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் அ.தி.மு.க சார்பில், குடியரசுத் தலைவர் தேர்தலில் அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து ஓரிருதினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் ஆதரவு யாருக்கு என்பதை துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவிப்பார் என்று மத்திய அரசைப் போன்றே தமிழ்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close