ஆணவக் கொலைகளைத் தடுக்க இதுதான் வழி! முதல்வர் பழனிசாமிக்கு ஜி.ராமகிருஷ்ணன் முக்கிய கோரிக்கை | G.Ramakrishnan has request to TN CM, create new law for stop arrogant killing

வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (21/06/2017)

கடைசி தொடர்பு:19:20 (21/06/2017)

ஆணவக் கொலைகளைத் தடுக்க இதுதான் வழி! முதல்வர் பழனிசாமிக்கு ஜி.ராமகிருஷ்ணன் முக்கிய கோரிக்கை

ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டத்தை தமிழக அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆணவக் கொலைகள் நடப்பது தொடர் செய்தியாக மாறிக்கொண்டிருக்கிறது. பெற்றோரே மகளை எரித்துக் கொல்வது, உற்றார் உறவினர்கள் ஒன்றாய் சேர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களைக் கொலை செய்வது உள்ளிட்ட மிகக் கொடூரமான சம்பவங்களை தமிழகம் கண்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல இயக்கங்கள் ஆணவக் கொலையைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றன. கடந்த சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த தோழர் அ.சவுந்தரராசன் ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டத்துக்கான தனிநபர் மசோதாவை முன்மொழிந்தார். ஆனால், சட்டமன்ற செயலகம் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி உள்நோக்கத்துடன் அதை நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில்தான் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விழிப்புஉணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாகவும், இச்சட்டத்தைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சேலத்திலிருந்து சென்னை வரை கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைப்பயண இயக்கத்தை நடத்தி வருகிறது. ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தீண்டாமைக்கு எதிரான சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்து வருகிறார்கள். இந்த நடைப்பயணம் இன்று (21.06.2017) சென்னையை வந்தடைகிறது.

சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் ஆணவக் கொலைகளும் பெருகி வரும் நிலையில் இவற்றைத் தடுப்பதற்கான ஒரு முயற்சியாக ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டத்தை தமிழக அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே நிறைவேற்ற முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.