வெளியிடப்பட்ட நேரம்: 21:48 (21/06/2017)

கடைசி தொடர்பு:21:48 (21/06/2017)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி போட்டியில் இருப்பவர்கள் யார்?

ந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்துள்ளார். கேப்டன் விராட் கோலியுடனான மோதலே அனில் கும்ப்ளே விலகலுக்கு முதல் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஐந்து பேருக்கு வாய்ப்பு இருக்கிறது. அதே வேளையில் ரேஸில் சேவாக், டாம் மூடி இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. 

இந்திய அணி புதிய பயிற்சியாளர் சேவாக்?

வீரேந்திர சேவாக்:

இந்திய அணிக்காக நீண்டகாலம் விளையாடியவர். அவரது கிரிக்கெட் அனுபவம் அதிகம். தற்போது அணியில் உள்ள வீரர்கள் பலருடனும் சேவாக் விளையாடியுள்ளார்.  அத்துடன்,  ஐ.பி.எல் தொடரில் கடந்த சீஸனில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்துள்ளார். அதனால்தான், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு முதல் ஆளாக விண்ணப்பித்தார்.  ஆனால், இரண்டே வரிகளில் தன் ரெஸ்யூமை அனுப்பியிருந்ததாகவும், பி.சி.சி.ஐ அவரிடம் முழுமையான விவரம் கோரியதாகவும் தகவல் வெளியானது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது சேவாக் பயிற்சியாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படலாம் என செய்தி வெளியானது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் சூழல் மாறியதால், சேவாக் இன்னும் இன்டர்வியூவுக்கு அழைக்கப்படவில்லை. தன் கருத்துகளை சோஷியல் மீடியாவில் ஆணித்தரமாக வெளிப்படுத்துவதும், பயிற்சியாளருக்கான அனுபவம் இல்லாததும் சேவாக்குக்கு எதிராகத் திரும்பலாம். அதேவேளையில், அவருக்கு வாய்ப்பில்லாமலும் இல்லை. 

டாம் மூடி:

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பெரிய பெரிய அணிகளைக் கையாண்ட அனுபவம் டாம் மூடிக்கு உண்டு. கடந்த ஐ.பி.எல் சீஸனில் இவரது பயிற்சியின் கீழ் நடப்பு சாம்பியன் ஹைதராபாத் அணி அபாரமாக விளையாடியது. `எலிமினேட்டர்' சுற்றில் வெளியேற்றப்பட்டாலும் ஹைதராபாத் அணி தரமிக்க கிரிக்கெட்டை ஆடியதற்கு டாம் மூடிதான் காரணம். 2007-ம் ஆண்டு இவரது பயிற்சியின் கீழ்தான் உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் வரை இலங்கை கிரிக்கெட் அணி முன்னேறியது.

இந்திய அணி பயிற்சியாளர் டாம் மூடி

அனுபவமும் திறமையும் இருக்கின்றன. சுமார் 15 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜான்ரைட், கேரி கிறிஸ்டன், டங்கன் ஃப்ளட்சர் என வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் இருந்து வந்திருக்கின்றனர்.  உள்நாட்டைச் சேர்ந்தவர்தான் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்பது தற்போதைய ட்ரெண்ட். இது டாம் மூடிக்கு எதிராக முடியலாம். 

ரிச்சர்ட் பைபஸ்:

முதல் தர கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடியிருக்கிறார். கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இவரது பயிற்சியில்தான் உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் வரை முன்னேறியது. இலங்கை, வங்கதேச அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்த அனுபவமும் இருக்கிறது. ஒவ்வோர் அணிக்கும் குறைந்த காலம் மட்டுமே பயிற்சியாளராக இருந்திருக்கிறார். வெளிநாட்டவர் என்ற வகையில் இவருக்கும் பின்னடைவு உள்ளது. 

லால்சந்த் ராஜ்புத்:

டாம் மூடி, லால்சந்த் இருவரும் கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோதும் விண்ணப்பித்திருந்தனர். கும்ப்ளேவுக்காக இவர்களைத் தேர்வுக்குழு கண்டுகொள்ளவே இல்லை. இப்போது லால்சந்த் ராஜ்புத் மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். இந்திய 'ஏ' மற்றும் 19 வயதுக்குட்ட அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். சர்வதேச அளவில் ஆப்கானிஸ்தான் அணிக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவமும் உண்டு.  நீண்டகாலம் பயிற்சியாளராக இருந்த அனுபவமும், இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு மெருகேற்றுவதும் லால்சந்தின் ப்ளஸ் பாயின்ட். 

தோடா கணேஷ்:

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் கொஞ்சம் தகுதிக் குறைவானவர் என இவரைச் சொல்கிறார்கள். சர்வதேச அளவில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், ஒரே ஒருநாள் போட்டியிலும் விளையாடியிருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கோவா அணிக்குப் பயிற்சியாளராக இருந்த அனுபவம் இருக்கிறது. எந்த சர்வதேச அணிக்கும் பயிற்சி அளித்ததில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்