வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (21/06/2017)

கடைசி தொடர்பு:08:31 (22/06/2017)

அரசியல், உறவுகள், ஊழல், மரணம்... பெனாசிர் புட்டோ டைரிக் குறிப்புகள்! - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு#Benazir

பெனாசிர் புட்டோ

முன்குறிப்பு: பெனாசிர் புட்டோ வாழ்வின் அரசியல் அத்தியாயங்கள் உங்களுக்கு யாரையாவது நினைவுபடுத்தினால், கமென்டில் பதியலாம். 

பெனாசிர் புட்டோ. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி. உலகிலேயே, ஓர் இஸ்லாமிய நாட்டுக்குத் தலைமைப்பொறுப்பேற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். 1953-ல் பிறந்து 2007 வரை வாழ்ந்த அவர் வாழ்வின் அரசியல் பக்கங்கள், பல திருப்புமுனைகளால் தொகுக்கப்பட்டவை. 

பெனாசிருடைய அப்பா ஜுலிபிகார் அலிபுட்டோ, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர். இதனால் இளவயதிலேயே அரசியல் அறிமுகம் கிடைத்தது பெனாசிருக்கு. பட்டப்படிப்பு, அரசியல் ஆர்வம், அதோடு பதவியிழந்த தன் அப்பா தூக்கிலிடப்பட்ட கோபம் இவையெல்லாம் பெனாசிரை 24 வயதிலேயே அரசியலில் காலூன்ற வைத்துவிட்டன. 1988-90, 1993-96 என இரண்டு முறை பாகிஸ்தானின் பிரதமராக ஆட்சி செய்தார். 

பெனாசிருடைய அப்பா ஜுல்பிகார் அலி மரணத்தைத் தொடர்ந்து பெனாசிருடைய அம்மா நுஸ்ரத் புட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஆனால், அவரை விட அவருடைய மகள் பெனாசிருக்கே அதிக செல்வாக்கு இருந்தது. இதனால் அம்மா, பெண் இடையே புகைச்சல் கிளம்பியது. 

அரசியலில் பெனாசிர் தோற்றதற்கு வெளியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மைக் காரணம் உறவினர்களாக அவரைச் சூழ்ந்திருந்தவர்கள்தாம். ஒரு பக்கம் பெனாசிரின் தாய், தன் உறவுகள் ஒவ்வொருவராகத் தேடித் தேடி அரச பதவிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் பெனாசிரின் காதல் கணவர் ஆஸிஃப் சர்தாரி,  மிகப்பெரிய பிசினஸ் மேனாகப் பல துறைகளில் கால் பதித்தவர். பிரதமரின் கணவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடறிய ஊழலில் சம்பாதித்தார். பின்நாள்களில் இனக்கலவரம் ஏற்படவும், பெனாசிர் சிறை செல்லவும் காரணமானது இந்த ஊழல்.  மூன்றாவதாக, பெனாசிரின் சகோதரர் மிர் முர்தாஸா. தன் தந்தை இறந்தவுடன் ஆஃப்கான் ஆதரவுடன் ‘அல் ஜுல்பிகர்’ என்ற தீவிரவாத அமைப்பை ஆரம்பித்த இவர், அக்கா பிரதமரான பின்பும் தான் ஆரம்பித்த தீவிரவாத அமைப்பைத் தொடர்ந்தார். மக்களுக்கிருந்த பெனாசிர் மீதான நம்பிக்கையில் விழுந்த விரிசலின் தொடக்கம் இதுதான். 

இப்படித் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தனக்கு ஏற்படுத்தும் சங்கடங்களைச் சமாளிக்கவே பெனாசிர் விழிபிதுங்கி நின்று கொண்டிருந்த நேரத்தில்தான், ஆட்சியில் பல பிழைகளையும் செய்தார். பாகிஸ்தான் உளவு அமைப்பைக் கண்டுகொள்ளாமல் விட்டார். எல்லையில் தொடங்கிய தீவிரவாத அமைப்புகளைக் கண்டறிந்து கலைக்காமல் விட்டார். ராணுவத்துக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை ஒன்று திரட்டி அளிக்கும் பயிற்சி என்று ஆரம்பித்து, பின்னர் பயங்கரவாதப்படையாக மாறிய அந்த சிவிலியன் படையைத் தொடர்ந்து கண்காணித்து தடுத்து நிறுத்தாமல் விட்டார். அடுத்ததாக பாகிஸ்தானின் பொருளாதரத்தையே சீர்குலைத்த போதைப்பொருட்களின் ஆதிக்கம். பாகிஸ்தான் உள்ளே போதை பொருட்களை விற்கவே யோசித்த வரலாற்றை மாற்றி, அதை ஒரு போதை சாம்ராஜ்ஜியமாக வளரவிட்டார். 

அப்போது நவாஸ் ஷெரீஃபின் முஸ்லீம் லீக் பிரதான எதிர்க்கட்சி. எதிர்கட்சி தன் வேலையைக் கட்சிதமாகச் செய்து மக்கள் மனதில் பெனாசிர் மீதான நம்பிக்கையைக் கலைத்தது.

ஒரு பக்கம் சொந்த உறவுகள், இன்னொரு பக்கம் கூட்டணிக் குழப்பம், அரசியல் தந்திரங்கள் எனப் பெரும் கலவரத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தார் பெனாசிர். அப்போது இனக்கலவரம் ஏற்படவே உடனடியாக ராணுவம் தலையிட்டது. ராணுவத்தளபதியாக இருந்த மிர்ஸா அஸ்லம் பேக் பெனாசிரின் ஆட்சியைக் கலைத்து நவாஸ் ஷெரீஃபை பிரதமராக நியமித்தார். பெனாசிர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பெனாசிரும் அவரது கணவரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். 

காலச்சக்கரம் சுழன்றது. அடுத்தடுத்து வந்த பிரதமர்களின்மீது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். அப்போது பிரதமாரக இருந்த முஷாரஃப், வரவிருக்கும் தேர்தலில் தான் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வியடைவோம் என்பதை உணர்ந்திருந்தார். அதனால் வேறுவழியின்றி வெளிநாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த பெனாசிர் புட்டோவை பாகிஸ்தானுக்கு வரவழைத்தார். ஆனால் பெனாசிரோ முஷாரஃப் உடன் கூட்டணி சேராமல் நவாஸுடன் கூட்டணி சேர்ந்தார். அப்போது வெளியான கருத்துக்கணிப்புகள் எல்லாம் பெனாசிருக்கு ஆதரவாகவே இருக்க, அடுத்த பிரதமர் பெனாசிர்தான் என்று அனைவரும் நம்பத்துவங்கியிருந்தனர். 

யாரும் எதிர்பாராதவிதமாக 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார் பெனாசிர். பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகையே உலுக்கியது இந்தப் படுகொலை! கொலைக்குக் காரணம் வெளிநாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த பெனாசிரைக் கூட்டணிக்காக அழைத்த முஷாரஃப்தான், ராணுவம்தான் என்று மக்கள் அலறினார்கள். உண்மையில் கொலைக்குக் காரணம் தான் இல்லை என்றாலும், ஒரு சர்வாதிகாரியாகச் செயல்பட்டதால் அதனை மக்கள் மத்தியில் நம்ப வைக்கும் தகுதியை இழந்திருந்தார் முஷாரஃப். பெனாசிர் மீதான அனுதாப அலையைத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டார் பெனாசிரின் கணவர் ஆசிஃப் அலி. மனைவியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்த அவருடன் கைகோத்துக்கொண்டார்  நவாஸ் ஷெரிஃப். 2008ம் ஆண்டு முஷாரஃப் தன் பதவியை ராஜினாமா செய்ய, பாகிஸ்தானின் பிரதமரானார் ஆசிப் அலி சர்தாரி.

பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களின் முக்கியப் பெண் ஆளுமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் பெனாசிர் புட்டோ! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்