உங்கள் குழந்தை, பள்ளி விட்டு வந்ததும் கேட்க வேண்டிய 5 கேள்விகள்! #GoodParenting | 5 questions you must ask your child while they return from school

வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (22/06/2017)

கடைசி தொடர்பு:15:04 (22/06/2017)

உங்கள் குழந்தை, பள்ளி விட்டு வந்ததும் கேட்க வேண்டிய 5 கேள்விகள்! #GoodParenting

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது, அந்தக் குழந்தையுடன் நன்கு உரையாடல் நிகழ்த்துவது. பேசப் பேசத்தான் அந்தக் குழந்தையுடன் நெருக்கமான ஸ்நேகம் பெற்றோர்க்குக் கிடைக்கும். அந்த உரையாடல்களே பிள்ளையின் மனதை நன்கு புரிந்துகொள்ள உதவும். மேலும், அதன் தேவை என்னவென்பதையும் உணர்த்தும். சில விஷயங்களைப் பெற்றோரிடம் கூற, குழந்தை தயங்கிக்கொண்டிருக்கலாம். அந்தத் தயக்கத்தை உடைக்க வேண்டியது குழந்தை வளர்ப்பில் அவசியம்.

குழந்தை

பெற்றோர், தங்கள் பிள்ளை பள்ளிக்குச் செல்லும்போது பல ஆலோசனைகளைச் சொல்லி அனுப்புவார்கள். ஆனால், பள்ளி விட்டு வந்த குழந்தையிடம், 'ஏதாவது பொருளைத் தொலைத்துவிட்டாயா... மதியம் சாப்பிட்டியா...' போன்ற வழக்கமான சில கேள்விகளைத் தவிர வேறெதும் கேட்பதில்லை. அது சரியானதல்ல. குழந்தை சொல்லத் தயங்கும் அல்லது சொல்ல நினைக்கும் விஷயங்களைப் பெற்றோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த உரையாடலைத் தொடங்க இந்த 5 கேள்விகள் உதவும்.

குழந்தை சிறுநீரை அடக்கிக்கொண்டிருந்தாயா?: இது முக்கியமான கேள்வி. சிறுநீர் கழிக்க எனப் பள்ளியில் இடைவேளை விடுவார்கள். ஆனால், அந்த நேரத்தில் உங்கள் குழந்தைக்குச் சிறுநீரை வெளியேற்றும் உணர்வு வந்திருக்காது. மேலும், அந்த நேரத்தில் ஏதேனும் விளையாடிக்கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. 'பெல்' அடித்ததும் வகுப்பில் உட்கார்ந்த, சில நிமிடங்களில் சிறுநீர் வெளியேற்ற வேண்டிய சூழல் வந்திருக்கலாம். ஆனால் ஆசிரியரிடம் கேட்க பயந்துகொண்டு இரண்டு பாடப் பிரிவுகள் முடியும்வரை காத்திருந்திருக்கலாம். இப்படிச் செய்வது உடல் நலத்துக்குக் கேடு என்பதோடு, அந்த நேரத்தில் நடத்தப்படும் பாடத்தையும் புரிந்துகொள்ள முடியாது. எனவே, இந்தக் கேள்வியைக் கேட்க மறக்காதீர்கள்.

உன் உணர்வுகளை யாராவது அவமதித்தார்களா?: குழந்தைகள் மெல்லிய மனம் கொண்டவர்கள். அவர்களின் உணர்வுகளுக்கு அவசியம் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் செய்யாத தவறுக்கு ஆசிரியர் திட்டியிருக்கலாம். அவர்களின் நிறம், எடை, உயரம் ஆகியவற்றை வைத்து சக மாணவர்கள் கேலி செய்திருக்கலாம். எனவே இந்தக் கேள்வியை எழுப்பி, அப்படியேதும் நடந்திருப்பின் அதைச் சரி செய்ய முயலுங்கள்.

யார் உணர்வையாவது நீ காயப்படுத்தினாயா?: முந்தையக் கேள்வியைப் போலவே இதுவும் அவசியம். அப்படி யாரையேனும் கேலி செய்திருந்தால், தன் உணர்வுகளைப் போலவே அடுத்தவர் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். அட்வைஸாக அல்லாமல் அன்பாகக் கற்றுக்கொடுங்கள்.   

யாருக்காவது நன்றியோ, ஸாரியோ சொன்னியா? பள்ளியில் ஆசிரியர் அல்லது சக மாணவர்களிடமிருந்து ஏதேனும் உதவி பெற்றிருந்தால் அதற்கு நன்றி கூறியிருக்க வேண்டும். அதேபோல தன்னால் யாருக்கேனும் சிறு கஷ்டமாயிருந்தாலும் அதற்கு ஸாரி சொல்லிருக்கவும் வேண்டும். இந்தப் பண்பு நல்ல நட்பை உங்கள் குழந்தைக்குப் பெற்றுத்தரும். ஆசிரியர்களிடம் நல்ல மதிப்பையும் பெற்றுத்தரும்.

பள்ளி விதிகளை மீறினாயா? பள்ளியின் விதிகளைப் பின்பற்றுவது ஒவ்வொரு மாணவரின் கடமை. அதை உங்கள் குழந்தை இன்றைக்குச் செய்தார்களா... தவிர்க்க முடியாத சூழலில் விதிகளை மீறினார்களா... எனக் கேளுங்கள். சில விதிகள் குழந்தைக்குக் கடுமையாக இருக்கலாம். அதை அவர்கள் உங்களிடம் சொன்னால், பள்ளியின் நிர்வாகிகளுடன் அதுகுறித்துப் பேசுங்கள்.  

இந்த 5 கேள்விகளைத் தொடக்கமாகக் கொண்டு உங்கள் குழந்தைகளுடன் உரையாடலைத் தொடங்குங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். குழந்தை வளர்ப்பில் முழுமையை நோக்கிப் பயணியுங்கள்.


டிரெண்டிங் @ விகடன்