வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (22/06/2017)

கடைசி தொடர்பு:10:13 (22/06/2017)

முடிஞ்சா பென்ஷன் பணத்தைக் கொடுங்க, முடியாட்டி விஷத்தைக் கொடுங்க.. போராடும் முதியோர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள கிராமம், மாலங்குடி. முற்றிலும் விவசாயத்தை மட்டுமே தொழிலாக நம்பியிருக்கும் வானம்பார்த்த பூமி. இந்தக் கிராமத்திலுள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 32 முதியவர்கள், அரசின் முதியோர் உதவித் தொகையைக் (Old Age Pension) கடந்த பல ஆண்டுகளாகப் பெற்றுவந்தனர்.

oap
 

இந்த நிலையில், இந்தக் கிராமத்துக்கு ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், இந்த முதியவர்களில் சிலருக்கு சொந்த வீடு மற்றும் ஆதரிப்போர் இருப்பதாகக் காரணம் கூறி, முதியோர் உதவித் தொகையை ரத்துசெய்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட முதியோர்கள் சிலர், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "எங்களால் உழைக்க முடியாது. அதனால், வருமானம் ஈட்டவும் முடியாது. எனவே, நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்க ஏற்பாடுசெய்யுங்கள். முடியாது என்றால், விஷம் கொடுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

OAP
 

அந்த மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்துவிட்டு வந்த முதியவர்கள், "எங்கள்ள பல பேர் வாழ்க்கை அரசாங்கம் தர்ற உதவிப் பணத்தை வச்சுதான் ஓடுது. உழைச்சுக் கொடுக்குற அப்பன் ஆத்தாவுக்கே இப்ப உள்ள புள்ளைங்க கஞ்சி ஊத்துறது இல்ல. இந்த நிலையில, நடக்கக்கூட முடியாம கம்பு ஊன்றிக்கிட்டுத் திரியிற எங்கள, எந்தப் புள்ள கவனிக்கப்போகுது. அரசாங்கந்தான் காப்பாத்தணும். கணக்கெடுக்க வந்த அதிகாரிங்க, எங்களுக்கு சொந்த வீடு இருக்குன்னு காரணம் சொல்றாங்க. இப்பவோ அப்பவோனு இழுத்துக்கிட்டு கிடக்குற நாங்க, அந்த வீட்டுல விழுந்துகிடக்கத்தான் முடியும். அந்த வீட்டுனால எங்களுக்கு எப்படி வருமானம் வரும்? டவுன்ல இருந்தாகூட வாடகைக்கு விட்டு பொழைக்கலாம். கிராமத்துல யாரு வாடகைக்கு வரப் போறா. ஏதோ இந்த அரசாங்கம் கொடுக்குற  உதவியாலதான் மாத்திரை மருந்துக்குனு செலவழிச்சுக்கிட்டு உசுர கையில பிடிச்சுக்கிட்டு கிடக்குறோம். இப்புடி திடுதிப்புனு வந்து அந்தப் பணமும் இல்லைனு சொன்னா, நாங்க எப்படி வாழ முடியும்? அதனால, 'முடிஞ்சா, ஓ.ஏ.பி பணத்தைக் குடுங்க. முடியாட்டி, விஷத்தைக் கொடுங்க' ன்னு சொல்லி அதிகாரிகிட்ட மனு கொடுத்தோம். மனுவ வாங்கிக்கிட்டு, விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறதா சொல்லியிருக்காங்க" என்றனர்.

ஆட்சியின் பெயராலும் அதிகாரத்தின் பெயராலும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படுகிறது. அதையெல்லாம் கண்டும் காணாதும் உள்ள அதிகாரிகள், வறுமையில் உழலும் இந்த முதுமையாளர்களின் வயிற்றில் கை வைப்பது ஏன்?